இவர்கள் ஜெயேந்திரரின் 'ஆசி' பெற்றவர்கள்!

காஞ்சி மடாதிபதி, மறைந்த ஜெயேந்திர சரஸ்வதிக்கு ஏராளமான அபிமானிகள் உண்டு. 'பக்தர்களு'க்கும் பஞ்சமில்லை.
நாட்டின் குடியரசுத் தலைவர் பிரதமர் தொடங்கி, ஆளுநர், முதல்வர் வரை ஜெயேந்திரரைச் சந்தித்து ஆசி பெறுவதை ஒரு கடமையாக வைத்திருந்தனர். வெளியில் சுயமரியாதை, தன்மானம் என்றெல்லாம் பேசினாலும், சட்டையைக் கழட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு சங்கர மடத்துக்குப் போய் ஜெயேந்திரர் எதிரில் தரையில் பவ்யமாய் அமர்ந்து அவரிடம் ஆசி வாங்கியவர்களும் உண்டு.
80களிலிருந்து 90 வரை பெரியவா என்றழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சங்கராச்சார்யா உயிருடன் இருந்தவரை, அமரர் இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஆர் வெங்கட்ராமன், சங்கர் தயாள் சர்மா போன்றோர் சங்கர மடத்துக்குச் சென்று சங்கராச்சார்யார்களைச் சந்தித்துள்ளனர்.

பெரியவர் மறைந்த பிறகும் சங்கர மடத்துக்குச் செல்லும் விவிஐபிகள் குறையவில்லை. ஜெயேந்திரரைப் பார்க்க மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து மடத்துக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.
இப்போதைய பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் பலரும் ஜெயேந்திரரிடம் ஆசி பெற்றவர்களே. குஜராத் முதல்வராக இருந்தவரை அடிக்கடி சத்தமின்றி காஞ்சி மடத்துக்கு வந்து ஆசி பெற்றுச் சென்றவர் மோடி. பிரதமரான பிறகு வருகையை நிறுத்திக் கொண்டார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயேந்திரரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். ஆனால் அவர் காஞ்சி மடம் சென்றதில்லை. பொதுவான இடத்தில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஆனால் பின்னாளில் எந்த முதல்வரும் செய்யத் துணியாத ஜெயேந்திரர் கைதை துணிச்சலாக முன்னின்று செய்து காட்டியவர் ஜெயலலிதா.
முன்னாள் மத்திய அமைச்சர் சர்ச்சை பிரமுகர் சுப்பிரமணிய சாமி, ஜெயேந்திரரின் தீவிர விசுவாசி, பக்தர். இப்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் ராம் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பல விவிஐபிகளும் ஜெயேந்திரரின் பக்தர்களாக வலம் வந்தனர்.
திரையுலகினர், பத்திரிகையுலகினர் - குறிப்பாக பத்திரிகை முதலாளிகள் - பலரும் ஜெயேந்திரருக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்தனர்.