For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணைக்கு ஐ. நா. மனித உரிமை ஆணையத்தை அணுக முடியுமா?

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ம் தே மரணம் அடையும் வரையிலும் சிகிச்சை பெற்று வருவதைக் காட்டும் அவருடைய புகைப்படமோ, வீடியோயோ வெளிவரவில்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவின் சிகிச்சை படத்தை வெளியிட வேண்டும் என்றார். வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் கருணாநிதியின் கோரிக்கையை கண்டித்தனர். புகைப்படம் வெளியிடத் தேவையில்லை என்றும் கூறினார்கள்.

JJ death and UN human rights article 3

சசிகலா அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வரை, வாய்மூடி மௌனியாக இருந்த ஓபிஎஸ், பதவியிலிருந்து விலகிய பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்றார். தற்போது இபிஎஸ்-ஒபிஎஸ் அணிகள் இணைப்பிற்குப் பிறகு, மாநில அரசின் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுநாள் வரையிலும் அந்த கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. இது நாள் வரையிலும், உள்கட்சி பூசலில் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்தும் அரசியல் நடவடிக்கைகளாகத் தான் பார்க்கப் பட்டது. அதனால் விசாரணைக் கமிஷன் பற்றி பொதுமக்களுக்கும் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை.

தற்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வெளிப்படையான பேச்சு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 'அம்மா இட்லி சாப்பிட்டார், எங்களைப் பார்த்து சிரித்தார்' என்று பொய் சொன்னோம். சசிகலாவுக்கு பயந்து பொய் சொன்னோம் என்று கூறியுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன், சசிகலாவுக்கு பயந்தோ அல்லது புதிய பதவியை பெற்றுக்கொள்ளவோ அல்லது இருப்பதை தக்க வைத்துக் கொள்ளவோ பொய் சொல்லியிருக்கலாம். அது நம்பக் கூடியதாகவே இருக்கிறது. ஆனாலும் அவர் எடுத்திருந்த பதவிப் பிரமாணத்திற்கு எதிராக நடந்து கொண்டதிற்காக, சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைக்கு உண்மை சொல்லி மாட்டிக்கொண்டது திண்டுக்கல் சீனிவாசன் மட்டுமல்ல. ஒட்டு மொத்த அமைச்சரவையும், ஜெயலலிதா உடல்நலம் குறித்து அறிக்கை விட்ட மத்திய அமைச்சர்கள், எம்ய்ஸ் மருத்துவர்களும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்.

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாகச் சொன்னது மட்டும் தான் பொய்யா அல்லது கைரேகையும் பொய்யா? இட்லி சாப்பிட முடியாத நிலையில் இருந்த ஒருவர் சுயநினைவுடன், என்ன படிவம் என்ன காரணம் என்று புரிந்து கைரேகை வைத்திருப்பாரா?. அதை நேரடியாக உறுதி செய்த அதிகாரி யார் என்ற கேள்வியும் எழுகிறது.

கவர்னர் சென்று பார்த்தார், மத்திய அமைச்சர்கள் சென்று பார்த்தார்கள். அனைவரும் வெளியே வந்து ஜெயலலிதா நலமடைந்து வருகிறார் என்றெல்லாம் சொன்னார்கள். அப்போது மத்திய அமைச்சராக இருந்த, தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, ஒரு படி மேலே போய், ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். மருத்தவர்கள் ஜெயலலிதா முன்னேற்றம் அடைந்து வருவதாக சொன்னதாகவும் கூறினார். அக்டோபர் 9ம் தேதி, அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 17 நாட்கள் கழித்து வருகை தந்தவர், தொடர்ந்து அடிக்கடி தமிழகத்திலேயே முகாமிட்டு இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, புதிய தமிழக அரசு பதவியேற்ற பிறகும், தலைமைச் செயலகத்திலிருந்தே பேட்டியும் கொடுத்துள்ளார்.

அக்டோபர் 21ம் தேதி, முதல்வரால் உட்கார முடிகிறது. மயக்க நிலையில் இல்லாமல் இருக்கிறார். உடல்நிலை மிகவும் முன்னேற்றம் என்று மருத்துவமனை குறிப்பு சொல்கிறது.

நவம்பர்13ம் தேதி ஜெயலலிதா கையெழுத்திட்ட அறிக்கை என்று வெளியிடப்படுகிறது. நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என்றும் முதல்வரே கூறுவது போல் அறிக்கை இருக்கிறது.

டிசம்பர் 4ம் தேதி மத்திய அரசின் எம்ய்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், ஜெயலலிதா முற்றிலும் குணமடைந்து விட்டார் என்று அறிக்கை விடுக்கின்றனர். அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் முதல்வருக்கு மாரடைப்பு என்று செய்தி வருகிறது

டிசம்பர் 5ம் தேதி இரவு 11:30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்து விட்டதாக அறிவிக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் பற்றி வெளியிடப்பட்ட அனைத்து தகவல்களும் உண்மையாகவே இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. என்றாலும் 'இட்லி சாப்பிட்டார்' என்று பொய் சொன்னேன் என்று அமைச்சர் ஒருவரே சொல்லியிருப்பது, ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைகள் அனைத்துமே ஏன் பொய்யாக இருக்கக் கூடாது என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

திண்டுக்கல் சீனிவாசன் வேண்டுமானால் சசிகலாவுக்கு பயந்து பொய் சொன்னார் என்றாலும், மத்திய அமைச்சர்களும், மத்திய அரசின் எம்ய்ஸ் மருத்துவர்களும் சொன்னது உண்மையா பொய்யா என்ற கேள்விகளும் எழுகின்றன.

கவர்னர், மத்திய அமைச்சர் உட்பட யாரும் நேரில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. நோய்தொற்று காரணம் என்று சொல்லப்பட்டாலும், மருத்துவமனை நிர்வாகம் உண்மையான உடல்நிலை பற்றி அவர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும்தானே!

ஐநா மனித உரிமை அறிவிப்பு

ஐநா சபையின் மனித உரிமை அறிவிப்பு (Universal Declaration of Human Rights) Article 3ன் படி 'Everyone has the right to life, liberty and security of the person'. அதாவது, ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமை அறிவிப்பு உறுதியளிக்கிறது.

மரணத்திற்கான காரணம் வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், ஜெயலலிதாவுக்கு வாழ்வதற்கான உரிமையும், சுதந்திரமும், பாதுகாப்பும் சில ஆதிக்க சக்திகளால் மறுக்கப்பட்டுள்ளதாக சொல்வதற்கு முகாந்திரங்கள் தெரிகிறதே.

மத்திய அரசின் அமைச்சர்களும், நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையும் அறிக்கைகள் வெளியிட்டு, சம்மந்தப்பட்டிருப்பதால், சிபிஐ விசாரணையில் கூட உண்மை வெளிவரும் என நம்ப முடியுமா?

ஒரு அமைச்சரையே பொய் சொல்ல வைக்கக்கூடிய அளவுக்கு அதிகார மையங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், மத்திய, அரசின் விசாரணைக் கமிஷன்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படும் என்ற கேள்விகளும் எழுகிறது அல்லவா!.

ஒரு மாநில முதல்வரின் மரணம் குறித்து பலவித முரண்பட்ட தகவல்கள் வெளியிடப்படுகிறது என்றால் அந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக தோன்றுகிறது அல்லவா! ஐநா மனித உரிமை அறிவிப்பு, பிரிவு 3 படி வழங்கப்பட்டுள்ள தனிமனித உரிமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு மறுக்கப்பட்டு இருக்கலாம்தானே! அப்படியென்றால், ஐநா மனித உரிமை கவுன்சில் மூலம் ஏன் விசாரணை நடத்தக்கூடாது?

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு ஐநா மனித உரிமை கவுன்சில் மூலம் விசாரணை நடத்த கோரிக்கை வைப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளதாகவே தெரிகிறது.

- ஸ்கார்ப்பியன்

English summary
United Nations Universal Declarations of Human Rights , article 3 says 'Everyone has the right to life, liberty and security of the person'. Following confession of Tamil Nadu minister Dindugal Srinivasan that he lied thatJeyalalitha had idlis, more question arises about the treatment , medical bulletins, central ministers statements and AIIMS doctors statement. Looks like this may be referred to UN Human Rights Council to find the truth of former Chief Ministers' treatement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X