For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

EXCLUSIVE: நக்கீரன் கோபால்.. இது வரலாறு காணாத கைது.. மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நக்கீரன் கோபால் கைது.. மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து- வீடியோ

    சென்னை: இது வரலாறு காணாத கைது என்று நக்கீரன் கோபால் கைது விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் பத்திரிகையாளர் ஒருவர் மீது தேச துரோக வழக்குப் போடச் சொல்வது இதுவே முதல் முறை என்றும், ஆளுநர் மாளிகையிலிருந்து இதற்கான உத்தரவு வருவதும் இதுவே முதல் முறை என்றும் பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.

    இதுதொடர்பாக சில மூத்த பத்திரிகையாளர்களிடம் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக பேசினோம். அவர்களிடமிருந்து பெற்ற கருத்துக்கள்:

    ஷ்யாம் (தராசு - ஆசிரியர்)

    Journalists Condemned for Nakkheeran Gopal arrest

    கோபால் கைது என்பது தனிநபர் அவதூறு என்பதன் கீழ் வரவில்லை. ஆனால் இவர்கள் தேச துரோக வழக்காக பதிவு செய்துள்ளார்கள். பத்திரிகையாளர்கள் மீது தேசதுரோக போட்டதாக இதுவரை சரித்திரமே கிடையாது. கவர்னர் மாளிகையில் இருந்து இப்படி ஒரு வழக்கு போட சொன்னதாகவும் சரித்திரம் கிடையாது. இது கண்டிக்கத்தக்க விஷயம்தான். கருத்து சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரம்தான். அந்த வகையில்தான் பார்த்தால் ஒரு அவதூறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இதற்கு நிவாரணம் உண்டு. அரசியல் பதவிகளில் உள்ளவர்களின் மேல் உள்ள அவதூறு என்றால் செசன்சு கோர்ட்டில் நிவாரணம் உண்டு. சிவில் நீதிமன்றமான ஐகோர்ட்டில் ஒரிஜினல் சிவில் முறையில் நிவாரணம் உண்டு. இந்த நிவாரணத்தை எல்லாம் விட்டுவிட்டு கவர்னர் மாளிகையில் இருந்து எப்படி கடிதம் கொடுத்தார்கள், யார் கொடுத்தார்கள், என்ற தகவலே இல்லாமல் தேச துரோக வழக்கு போடுவது என்பது கண்டிக்கத்தகுந்த விஷயம்.

    கலைக்கோட்டுதயம் (நிறுவனர் - தமிழன் டிவி)

    Journalists Condemned for Nakkheeran Gopal arrest

    கோபால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது கருத்துரிமைக்கு கைவிலங்கிடப்பட்டு இருக்கிறது. ஆளுநர் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை செய்திருப்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எங்கும் நடக்காத ஒன்று. நக்கீரனில் கவர்னரை பற்றி தவறான செய்தி வெளியிட்டு இருந்தால், அதற்கு நீதிமன்றம் மூலம் அவதூறு வழக்கு தொடர்ந்து நடவடிக்கையை எடுக்க வேண்டுமே தவிர இப்படி காவல்துறையை வைத்து கைது செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது. மக்களாட்சி நடக்கிறதா? அல்லது கவர்னர் ஆட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை. அதாவது நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பத்திரிகை சுதந்திரத்திற்கும் கருத்துரிமை சுதந்திரத்துக்கும் நடந்த பேராபத்து ஆகும். இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அ.குமரேசன் (மூத்த பத்திரிகையாளர்)

    Journalists Condemned for Nakkheeran Gopal arrest

    இந்த கண்டனத்தை மத்திய மாநில அரசுகளை தவிர்த்து அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. ஒரு ஊடகம் தனக்கு கிடைக்கிற, தான் கேள்விப்படுகின்ற தகவல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை மக்கள் முன் வைப்பது என்பது ஊடக நெறி, ஊடக கடமை. அதைத்தான் நக்கீரன் ஏடு செய்திருக்கிறது. ஆனால் அதில் தரப்பட்ட தகவலோ செய்தியோ சரியா தவறா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். வெளிவந்த தகவல் தவறானது என்று ஆளுநரோ, அல்லது எளிய குடிமக்களோ நினைத்தால், அதற்கு வழக்கு தொடர எல்லா உரிமையும் உள்ளது. அதேபோல எதிர்வழக்காடவும் உரிமை உள்ளது. இதனை நீதிமன்றம்தான் விசாரித்து தீர்ப்பளிக்க முடியும். இதுதான் இயல்பான சட்டப்பூர்வமான நடவடிக்கை. நக்கீரன் போன்ற மக்களிடையே பரவலாக அறியப்பட்ட ஒரு தலைமை ஆசிரியரை, மக்களுக்கு அனைத்தும் போய் சேர வேண்டும் என்ற உணர்வுடன் பங்காற்றக்கூடியவரை கைது செய்திருப்பது அச்சுறுத்தலே... உன் பேனாவை மூடி வைத்துக் கொள்... உங்கள் கேமராவை நிறுத்தி வைத்துக் கொள் என்பது போலதான் இது உள்ளது. இது அடக்குமுறை நடவடிக்கையே. ஆட்சியாளர்களுக்கு அல்லது ஆளும் தரப்பினருக்கு சங்கடத்தை தரக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும் சரி, எழுத முற்படுபவர்களை அஞ்ச வைக்கின்ற ஒரு செயலாகத்தான் இது இருக்கிறது. ஆளுநரும முதல்வரும் சந்தித்த இரு நாளில் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும் ஊடகங்கள் பின்வாங்கிட மாட்டார்கள். அடக்கி வாசியுங்கள் என்று இதன்மூலம் சொல்லப்படுகிறது. ஆனால் அடக்கி வாசியுங்கள் என்று எங்களுக்கு வாய்ப்பூட்டு போடுகிறார்கள் என்பதையும் ஊடகங்கள் சேர்த்தே வெளியிடும் என்பதுதான் நாளைய வரலாறு.

    டி.எஸ்.ஆர். சுபாஷ் (தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்)

    Journalists Condemned for Nakkheeran Gopal arrest

    கருத்து சுதந்திரம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. நக்கீரன் ஆசிரியர் கோபாலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கைது செய்திருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு அச்சுறுத்தல்தான். ஆளுநர் - முதல்வர் சந்திப்பும், முதல்வர் - பிரதமர் சந்திப்பும் குறித்தும், என்ன பேசினார்கள் என்பது குறித்து இதுவரை ஊடகங்களில் எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நேரத்தில் பத்திரிகை ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு செய்தி வெளியிட்டதற்காக அதனை ஆதாரப்பூர்வமாக மறுக்கலாம், எதிர்க்கலாம். அதை விட்டுவிட்டு, இதுபோன்று கைது செய்தது மிகவும் கண்டனத்துக்கு உரியது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். அதுமட்டும் இல்லாமல், பத்திரிகையாளர்களின் பணி பாதுகாப்பு மட்டும் இல்லாமல், உயிர் பாதுகாப்பும் இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது. உண்மையான செய்திகளையும் வெளியிடுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. அச்சுறுத்தலின் காரணமாக முக்கிய பிரச்சனைகளை வெளியிடுவதில் சிக்கல்கள் எழுகின்றன. இதேபோன்ற ஒரு நிலை தொடர்ந்தால், மிகப்பெரிய அரசியல் மாற்றம் பத்திரிகையாளர்களிடயே இருந்து நிச்சயம் நிகழும்!

    English summary
    Journalists Condemned for Nakkheeran Gopal arrest
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X