For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட இந்தியாவைப் பாருங்கள்.. அந்த அன்பும், நாகரீகமும் இங்கும் வருமா?.. கி.வீரமணி ஏக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி அளவளாவும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது; அதே நேரத்தில் துக்க வீட்டில்கூட ஒருவரை ஒருவர் சந்திக்க மறுக்கும். தயங்கும் நிலை அல்லவா இங்கு இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி ஆதங்கப்பட்டுள்ளார்.

K Veeramani wants unity among political leaders

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணச் சடங்கு ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியும், லாலு பிரசாத்தும், முலாயம்சிங் யாதவும் கூடி மகிழ்கின்றனர். வடநாட்டில் நிலவும் இந்த நனி நாகரிகத்தை தமிழ்நாட்டின் தலைவர்களும், பிரமுகர்களும் பின்பற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடும் தென் மாநிலங்களும் மிகவும் பண்பட்டவை நனி நாகரிகம் படைத்தவை. வடநாட்டவர்களைவிட பல துறைகளில் முன்னேறியவர்கள் என்று ‘பெருமைபேசி' மகிழுபவர்கள் என்ற நிலை அரசியல் கட்சிகளின் தவறான அணுகுமுறையால் ஒரு கட்சித் தலைவரோ, அல்லது வேறு பொறுப்பாளர்களோ, திருமணம், வரவேற்பு மற்றும் துக்க, இரங்கல் நிகழ்ச்சிகளில் கூட ஒருவரை மற்றொருவர் சந்திப்பது, குறைந்தபட்ச மரியாதையை, விசாரிப்புகளை ஒருவருக்கொருவர் இன்முகத்தோடு பரிமாறிக் கொள்ளுதல் போன்றவைகூட, - காணாமற் போனவையாக ஆகி விட்டன! இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய ‘கூடா ஒழுக்கம்' ஆகும்!

வடநாட்டைப் பாருங்கள்!

வடநாட்டைப் பார்த்து தமிழ்நாட்டவர் கற்றுக்கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எவ்வளவு கடுமையாக கட்சித் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பேசித் தாக்கிக் கொண்டாலும் மத்திய அரங்கம் என்ற நாடாளுமன்ற அரங்கில் நுழையும்போது, தோள் மேல் கைபோட்டு, நட்புறவும் நயத்தக்க நனி நாகரிகமும் பொங்கி வழிவது போல் பேசிக் கொள்ளும் நடைமுறை வெகு சர்வ சாதாரணம்

தமிழ்நாட்டில் நடப்பது என்ன?

சட்டமன்றம் கூடுகிற நிலையில், ஒருவரைப் பார்த்து மற்றொரு கட்சியினர் ‘வணக்கம்' கூறும்போது மறுபுறம் அதற்கு பதில் வணக்கத்தை புன்னகையோடு கூறும் நிலைகூட அருகிப் போய் விட்ட அவலம் உள்ளது!

தலைவர்கள் எதிர்பாராமல், ரயில் நிலையம், விமான நிலையம் - விமானப் பயணம் போன்றவைகளில் அடுத்தடுத்த பகுதிகளில் - ஒரே பெட்டியில் - பயணம் செய்யும்போதுகூட, ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து விடக் கூடாது என்று ஓடோடி அறைக் கதவைச் சாத்திக் கொள்வது, அல்லது சந்திப்பைத் தவிர்க்க இரயில் நிற்பதற்கு முன்பேகூட குதித்து ஓடுவதுபோல கீழே இறங்கி குடுகுடுவென்று காரில் ஏறிக் கதவை அடைத்துக் கொள்வது எல்லாம் கசப்பான நிகழ்வுகள் அல்லவா!

வாழ்த்து கூறக் கூடாதா?

திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

எவ்வளவு கருத்து வேறுபாடு, கொள்கை மாறுபாடு இருந்தாலும், பிறந்த நாள்களுக்கு வாழ்த்து அனுப்பியோ; நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறுவதோ, மனித நேயத்தையும், மக்கள் பண்பையும் வளர்த்து, தொண்டர்கள் மத்தியில் வெறுப்புக் குறைய, அல்லது மறைய வாய்ப்பை ஏற்படுத்தும்.அந்தக் காலத்துத் தலைவர்களின் அன்பும், பண்பும் அகிலம் அறிந்தவை.

பிரதமர் மோடி - லாலு - முலாயம் - சந்திப்பு

உ.பி. மாநிலத்தில் லாலு பிரசாத் மகளுக்கும், முலாயம் சிங் பேரனுக்கும் மணவிழா; அதில் பிரதமர் மோடி சென்று ஒரு மணி நேரம் - எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களுடன் - கலகலப்பாக சிரித்துப் பேசி மகிழ்ந்துள்ள செய்தி எவ்வளவு வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க, பின்பற்றப்பட வேண்டிய முறை!

பிரதமரைச் சந்தித்த கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தேர்தல் முடிந்த நிலையில் பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது அவரது இல்லத்தில் பிரதமர் மோடி அவர்கள் கெஜ்ரிவால் இருமல் - ஆஸ்தமாவிலிருந்து விடுபட தனது மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தி உதவுவதாகக் கூறி, தமது பண்பைக் காட்டியுள்ளார்.

வெறுக்கத்தக்க நோய்

வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள்ளேன் - எந்தவித ‘பந்தாவும்' இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள். தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு வெறுக்கத்தக்க ‘நோய்' எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாகப் பரவி விட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி ‘புண்ணைக் குடைய' விரும்பவில்லை நாம்.

உலக அரங்கில் உயர்த்தும்

நம் நாட்டில் கட்சி, கொள்கை வேறுபாடுகளைத் தள்ளி வைத்து (தற்காலிகமாக) பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் தயங்காமல் சந்தித்து அன்புடனும், பண்புடனும் தலைவர்கள், பொறுப்பாளர்கள் நடத்து கொள்ளுவது தமிழர்களை உலக அரங்கில் உயர்த்திட, திராவிடத்திற்கு ஏற்றம் தேடிடச் செய்ய அணுகுமுறை மாற்றம் அவசரம் அவசியம் என்று கனிவுடன் வேண்டுகோளாக வைக்கிறோம் என்று கீ.வீரமணி தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
DK leader K Veeramani has lauded the unity of the north Indian political leaders and asked the TN leaders to emulate them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X