For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறவாத சரித்திரம் படைத்து சென்றுவிட்டார் கலாம்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இரங்கல்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அறிவியல் மேதை, ஆன்மீகச் செல்வர், இந்தியத் திருநாட்டின் பெருமைக்குரிய பதினோராவது ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள், தன் 83வது அகவையில், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, மரணமுற்ற செய்தி அறிய நெஞ்சம் குலுங்கியது.

Kalam will live forever in people's hearts: IUML

இந்திய அரசியல் வானில் என்றென்றும் ஒளிசிந்தும் மிளிர் நட்சத்திரமாகத் திகழ்ந்து, விஞ்ஞான உலகில் உலக விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்து, பாரதப் பெருநாட்டை அறிவியலில் அகில உலகத்திலும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த அற்புத மனிதர் மறைந்திருக்கிறார். இந்திய வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதி இனி எத்தனை நூற்றாண்டுக்குப் பிறகு வருவாரோ என்று மக்கள் கூறும் அளவுக்கு நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்றவராகத் திகழ்ந்த மாமனிதர் மறைந்து விட்டார். அவரின் இழப்புக்கு யாரும் ஈடு செய்திட இயலாது.

அறிஞர் அப்துல் கலாம் அவர்கள் அண்ணா பல்கலைக்கழப் பேராசிரியராகத் திகழ்ந்த போது, ஜனாதிபதி தேர்தல் பற்றிய பேச்சு எழுந்தது. தமிழகத்தில் மணிச்சுடர் நாளேடு தான், அடுத்த ஜனாதிபதி ஆவதற்கு அனைத்து தகுதிகளும் பெற்றவர் அப்துல் கலாம் என்று அறிவித்தது. அப்துல் கலாம் பற்றியும் அவரின் குணாதிசயங்கள் பற்றியும் அவரின் கல்வி மற்றும் விஞ்ஞான உலகின் சாதனைகள் பற்றியும் மணிச்சுடர் பல்லாண்டுகளாக எழுதி வந்தது என்ற பெருமையும் உண்டு.

ஜனாதிபதி வேட்பாளராக அப்துல் கலாம் அறிவிக்கப்பட்டபோது அவரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நானும், மறைந்த அப்துல் ஹக்கீமும் சென்று சந்தித்து வாழ்த்து கூறினோம். அவரிடம் அன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஒன்றைக் கூறினோம், ஜனாதிபதியாக பதவி ஏற்று, இந்தியாவில் இதயங்களை இணைக்கும் ஜனாதிபதியாகவும், மனங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கச் செய்யும் ஜனாதிபதியாகவும் தாங்கள் திகழ வாழ்த்துகின்றோம் என்று கூறி வந்தோம்.

அவருடைய பதவி காலம் முழுவதிலும் இதயங்களை இணைக்கவும் மனங்களை ஒன்றிணைக்கவுமே பாடுபட்டு, இறவாத சரித்திரம் படைத்துச் சென்றுவிட்டார். அப்துல் கலாம் காட்டிய வழி, இந்தியாவை நல்லரசாக்கும்; வல்லரசாக்கும். அவரின் ஆன்மா சாந்தி பெற இறைவனிடம் இறைஞ்சுவோம். அவரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்போம். அவரின் மறு உலக நல்வாழ்விற்கு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
IUML has condoled the sudden demise of former president APJ Abdul Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X