For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் இறந்துகொண்டிருக்கிறேனோ என்று நினைத்தேன்... - கமல் ஹாஸனின் கட்டுரை !

By Shankar
Google Oneindia Tamil News

நடிகர் கமல் ஹாசன் சமீபத்தில் வீட்டு மாடிப் படியிலிருந்து விழுந்து காலை உடைத்துக் கொண்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இரண்டு அறுவைச் சிகிச்சைகள்.

இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கமல் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். மெல்ல உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில், தான் காலை உடைத்துக் கொண்டது குறித்து விபத்தில் சிக்கியது குறித்து தனது பிளாக்கில் ஒரு நீண்ட கடிதம் - ஆங்கிலத்தில்- எழுதியுள்ளார்.

Kamal Hassan's 'Fall and Rise'

அதன் தமிழாக்கம்:

"அன்றைய தினம் நான் செய்த ட்விட் 'ஐயோ... கமலுக்கு என்னாச்சு' என்ற பதைபதைப்பை உண்டு பண்ணியிருக்கும். எனக்கு எல்லாமே ரசிகர்கள்தானே. உங்களை விட்டா எனக்கு யார் இருக்கா? நீங்க இல்லன்னா நான் என்னாவேன் என்று யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை.

எனது இலக்கு, எனது புகழ், எதிர்கால வாழ்க்கை எல்லாமே உங்களை நம்பித்தானே. விபத்து நடந்த தினத்தில் என்ன நடந்தது? ட்விட்டரில் எவ்வளவு வார்த்தைகளுக்குள் விஷயத்தை சொல்ல முடியுமோ அவ்வளவு வார்த்தைகளுக்குள்தான் அன்று உங்களுடன் விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். உண்மை நிலையை முழுவதாக விளக்கி பின்னர் பதிகிறேன் என்றும் உறுதி அளித்திருந்தேன். அதுதான் இந்தப் பதிவு. பெரும்பாலான செலிபிரிட்டிகளின் ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் பக்கங்கள் வெற்று பக்கங்களாகத்தான் இருக்கும். நான் இப்படி கூறுவது பலருக்கும் கோபத்தை வரவழைக்கக் கூடும்.

ஆனால் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. டிஜிட்டல் வால் வழியாக நான் கீழே விழுந்த கதையை மட்டும் உங்களுக்கு கூற விரும்புகிறேன்.

ஜுலை 14ம் தேதி. திடீரென்று எனது எல்டாம்ஸ் ரோடு ஆபிசுக்கு போக விரும்பினேன். தினசரி அப்படிப் போவதில்லை. எப்போதாவது இரவு நேரங்களில் அங்கு போவதுண்டு. கௌதமி எனது காதலர் அல்லது பார்ட்னர் என்பதைத் தாண்டி தாயாக மாறிய இரவு அது. இந்த வீட்டில் 5வயதில் இருந்து வாழ்ந்திருக்கிறேன். 112 ஆண்டு காலம் பழமையான வீடு. என் அப்பாவின் வீடு. எனது சகோதரர்களுக்கும் ஒற்றைச் சகோதரிக்கும், அதன் பிறகு இப்போது எனக்கும் சொந்தமானது.

சபாஷ் நாயுடு படத்தின் தமிழ் தெலுங்கு ஹிந்தி படப்பிடிப்புகளை 70 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது. இன்னும் 45 நாட்களே மிச்சமிருக்கின்றன. அவ்வளவு வேகமாக அதனைத் தயாரிக்கத் திட்டமிட்டுருந்தேன். அவ்வளவு வேகமாக படம் எடுக்கப்பட்டால், எனது ராஜ்கமல் நிறுவத்தின் வரலாற்றில் அது ஒரு புதிய சாதனையாக இருக்கும். அந்த சிந்தனையிலேயே நான் விரைவாக மாடிக்குப் போய் விட்டேன். கௌதமி முதல் மாடியில் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அல்லது சாட் செய்து கொண்டிருந்திருக்கலாம். என்னைப் பார்த்து, நானும் மேலே வரட்டுமா? என்று கேட்டார்.

நான் மேலேயிருந்து சிறுவயதில் நான் விளையாடிய மைதானத்தை ரசித்தேன். அதில் உள்ள சிமெண்டு பெஞ்சினை பார்த்தேன். 16 வயதில் அந்த பெஞ்சின் மறைவில் இருந்து அம்மாவுக்கு தெரியாமல் சிகரெட் புகைத்தது கூட நினைவுக்கு வந்து போனது. அணைத்த சிகரெட் துண்டுகள் பக்கத்து வீட்டின் பின்புறம் வீசியது நினைவுக்கு வந்தது. பக்கத்து வீட்டில்தான் எனது நண்பரும் எழுத்தாளருமான பா கி எனும் பா கிருஷ்ணனின் வீடு. அவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. என்னால் அவரது பெற்றோர் கூட அவரை சந்தேகித்தனர். தற்போது இதனை பிளாக்கில் எழுதுவதன் மூலம் அவனுக்கும் அந்த உண்மை தெரியவரும்.

டெர்ரசில் இருந்து 5 அடி உயரத்தில் உள்ள விதானத்தை பிடித்து 'பேரலல் பார்' எடுக்க முயற்சித்தேன். எனது உள்ளங்கைகள் விதானத்தில் இருந்து நழுவுவது தெரிந்தது. நான் கீழே விழுந்துக் கொண்டிருக்கிறேன். மிக மோசமான வீழ்ச்சி.

அப்போதும் என் மனது 'எல்லாம் நீ போட்ட திட்டப்படி போய்க் கொண்டிருக்கும் போது இப்படி ஒரு காரியத்தை செய்கிறாயே' என்று யோசித்தது. அந்த சிந்தனையுடனே தரையில் வந்து விழுகிறேன். எனது வலது முழங்கால் முறியும் சத்தம் எனக்கு கேட்கிறது. அடுத்து எனது முதுகு தரையில் விழுகிறது. எனது உடல் தரையில் இழுத்து செல்லப்படுவது போல உணர்வு. முதுகெலும்பு முறியாததால், கொஞ்சம் தப்பித்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதி நிலவுகிறது. ஏன் கீழே விழுந்தேன். எனக்கே தெரியாது. இப்போது அது குறித்து யோசித்தும் பலன் இல்லை. மூட்டில் இருந்து அத்தனை வலி. நான் கௌதமி என்று கத்துகிறேன். அவருக்கு கேட்கவில்லை. இஞ்சி இடுப்பழகா பாடல் மாதிரி, வெறும் காத்துதான் வந்தது. இரண்டாவதாக பலம் கொண்ட மட்டும் கத்தினேன். அப்போதுதான் அவருக்கு கேட்டது. நான் எங்கேயிருக்கிறேன் என்று அவருக்கு தெரியவில்லை.

நான் இங்கேயிருக்கிறேன் என்று அவரிடம் கூற முயல்கிறேன். ஆனால், வாயில் இருந்து வார்த்தை வெளி வரவில்லை. 'நான் இங்கேயிருக்கிறேன். ஆனால், என்னால் கத்த முடியவில்லை' என்கிறேன். கௌதமி கத்துவதிலும் ஒரு பயம் தெரிந்தது. தலைக்குப்புற கிடக்கிறேன். வாயெல்லாம் மண். அதையெல்லாம் துப்ப முயல்கிறேன். கொஞ்சம்தான் துப்ப முடிந்தது. அதற்கும் நுரையீரலின் உதவி தேவைப்படுமல்லவா? ம்ஹும். அப்போதுதான் எத்தனை உயரத்திலிருந்து விழுந்தேன் என எண்ணிப் பார்க்கிறேன். 20 அடி இருக்கும். ஓஓஓஓஓஓ! நான் இறந்துகொண்டிருக்கிறேனோ என்று நினைத்தேன். கௌதமி 'நான் வந்துட்டே இருக்கேன்' என்று தெலுங்கில் கத்தியது கேட்டது. ஒவ்வொருவரும் அவரது கஷ்டநேரத்தில் தாய்மொழிதான் முதலில் வரும் போல. நான் இறக்க நேரிட்டால், கௌதமியிடம் என்ன பாஷை பேசுவேன் என்று யோசித்தேன்.

கௌதமி, என்னை நோக்கி ஒடிவந்தார். அவர் விழுந்து விடக்கூடாது என்று பதற்றமானேன். 'இது உனக்குத் தேவையா?' என்று இந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டதற்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். கௌதமியின் குரல் உடைந்தது 'எந்தண்டி இதி?' என்றார். ஆம்புலன்ஸைக் கூப்டுங்க என்று கத்தினார். அவர் குரலின் பரிதவிப்பு எனக்குத் தெரிந்தது. எனக்கு வலி பொறுக்க முடியவில்லை. என் வலது காலைப் பார் என்றேன்.

'ஐயையோ.. மோசமா உடைஞ்சிருக்கு..' என்றார். அப்போதுதான் கொஞ்சம் தைரியமான கௌதமியைப் பார்த்தேன். இரு மருத்துவர்களுக்குப் பிறந்த மகளாக அவர் மாறிவிட்டார் அப்போது. வலியும் தன்னம்பிக்கையும் திரும்பியது. உயிரோடுதான் இருக்கிறேன் என்ற இறுமாப்பு என் நகைச்சுவையைத் தூண்டிவிட்டது. 'காலைப் பத்தி என்ன நினைக்கற.. எடிட் பண்ணிடலாமா?' என்று சைகையில் கத்திரியைக் காட்டிக் கேட்டேன். கௌதமி கோபமாய் நடந்து ஆம்புலன்ஸ் என்ன ஆச்சு என்று பார்த்து 'அப்பல்லோவுக்கு ஃபோன் போடுங்க' என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

ஓகே. நான் உயிரோடுதான் இருக்கிறேன்.. ஆனால் என் நகைச்சுவையை கௌதமி ரசிக்கவில்லை என்று புரிந்தது. என் வாயில் இருந்த மண் வேறு ருசியாக இல்லை. ரத்தம் ஏதும் இல்லாவிட்டாலும் உமிழ்நீர் வழிந்துகொண்டிருந்தது. நான் சரிபார்த்துக்கொண்டேன். ஓகே. மீண்டும் வாழப்போகிறேன். ஆனால் எதும் நிபந்தனைகள் இருக்குமோ. 'Conditions apply' என்று இன்ஸ்யூரன்ஸ் விளம்பரம் போல நினைத்துக் கொண்டேன். ஆம்புலன்ஸ் வந்தது. அவர்கள் என்னை நகர்த்தி, வண்டியில் ஏற்றி வலியைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு கத்தவோ, முனகவோ கொஞ்சம் சுரத்திருக்கவில்லை. வலியைத் தாங்கும் உறுதியுடன், 'நான் ஒரு சிங்கம்.. நான் இரும்பு மனிதன்' என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் என் மனசு கத்திக் கொண்டுதான் இருந்தது. மருத்துவமனைக்குச் செல்லும் பயணத்தில், ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கரையும் என் முதுகுத்தண்டும், காலும் உணர்ந்துகொண்டே இருந்தன.

இங்கே நிறுத்திக் கொள்கிறேன். நான் ரெகுலராக ப்ளாக் எழுதுகிறவனில்லை. என்ன ஆச்சு என்று நினைக்கும் என் நண்பர்களிடமிருந்து, இந்தப் பதிவுக்கு வரும் எதிர்வினைகளுக்கு அப்புறம், அப்பல்லோ அட்வென்சர்கள் பற்றிப் பேசுகிறேன். ரொம்ப சில்லியாகவோ, கடினமாகவோ இதை உணர்ந்தீர்களானால் தொடர மாட்டேன். எனக்கு நிறைய எழுத மிச்சமிருக்கிறது.

இந்த எழுத்து உங்களுக்குப் பிடிக்காமல் போனால், எழுத்தை நான் எங்கே தொடங்கினேனோ அங்கேயே போகிறேன். இரண்டு திரைக்கதைகள் முடிக்கப்படாமல் இருக்கின்றன.

கமல்ஹாசன் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதைப் படிக்க...

English summary
Kamal Hassan's recent blog on his recent 'Fall and Rise'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X