For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்தின் உடனடித் தேவை - கருணாநிதி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தின் முன் முயற்சியிலும், கண்காணிப்பிலும் சம்பா சாகுபடிக்கு போதுமான அளவுக்குத் தண்ணீர் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

காவிரிப் பிரச்சினை குறித்து உச்ச நீதி மன்றம் நேற்றைய தினம் (30-9-2016) பிறப்பித்த உத்தரவில், "வருகின்ற 4ஆம் தேதிக்குள் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி மேலாண்மை வாரியத்தில் பங்கேற்க தங்கள் தரப்பில் பரிந்துரைக்கும் நிபுணர்களின் பெயர்களை இன்று பிற்பகல் 4 மணிக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

Karnataka seeks 'urgent' review of SC orders to set up Cauvery Management Board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதும், அதன் உறுப்பினர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து உச்ச நீதி மன்றத்துக்கு 6ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் சட்டப் பிரிவு 144இன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும், உச்ச நீதி மன்றத்தின் ஆணைக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

உச்ச நீதி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவை நிறைவேற்றும் வகையில் அவர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுக்க வேண்டும். தமிழகத்துக்கு 1 ந்தேதி முதல் 6ந்தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் கர்நாடகம் கண்டிப்பாகத் தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடக அரசுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை அவர்கள் எந்த நிலையிலும் எடுக்கக் கூடாது. சட்டத்தையும், நீதியையும் அவர்கள் மதித்து நடக்க வேண்டும்" என்று மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதி மன்றம் தற்போது அளித்துள்ள ஆணையில் ஆறு நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பது, தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கான தேவையை நிறைவு செய்யச் சிறிதளவும் போதுமானதல்ல என்ற போதிலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, நமது கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், விவசாயிகள் தண்ணீருக்காகப் படும் பாட்டையும் உணர்ந்து இந்த அளவுக்காவது தண்ணீரை வழங்க வேண்டுமென்று பிறப்பித்த உத்தரவிற்காக தமிழ்நாட்டு விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன்; காவிரிப் பிரச்சினைக்கான தீர்வின் அடுத்த கட்டமாக, ஒரு கால வரையறைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்ற உச்ச நீதி மன்றத்தின் உத்தரவைப் பெரிதும் வரவேற்கின்றேன்.

மத்திய அரசுத் தரப்பிலோ, மாநில அரசுகளின் தரப்பிலோ எவ்விதத் தாமதமுமின்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் உடனடியாகத் தொடங்கப்பட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்திட வேண்டும். பண்டித நேரு அவர்கள் இந்தியப் பிரதமராக இருந்த போது இயற்றப்பட்ட நதி நீர் வாரியச் சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை வாரியமும், தொடர்புடைய மாநிலங்களும் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.

காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அளவின்படி, ஒவ்வொரு மாதமும் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களுக்குத் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர் வரவு, வெளியேற்றம், இருப்பு ஆகியவை நாள்தோறும் கண்காணிக்கப்பட வேண்டும். பருவ மழை சிறப்பாகப் பொழியும் காலத்தில், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, மாநிலங்களுக்கு உரிய நீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும். அதே நேரத்தில், பருவ மழை பொய்க்கும்போது, வறட்சி யின் பரிமாணத்திற்கேற்ப, நீரைப் பகிர்ந்தளித்திட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தின் நெறிமுறைகளையொட்டியே, அணைகள் அனைத்தும் இயக்கப்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலம் கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளும், தமிழகத்தில் கீழ் பவானி, அமராவதி, மேட்டூர் அணைகளும், கேரளாவில் பனசுரசாகர் அணையும் கண்காணிக்கப்படுவதற்காக, அந்த அணைப் பகுதிகளில் முகாம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, அவ்வலுவலகங்களில் நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றி இருபதாண்டு அனுபவம் கொண்ட அதிகாரிகள் மத்திய அரசால் நியமிக்கப் படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் விரைவில் நடைமுறைக்கு வந்து, தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்

ஆப்பிரிக்காவில் அறுபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அய்ரோப்பாவில் ஓடும் டான்யூப் நதி பதினேழு நாடுகளுக்கு உதவுகிறது. தென் கிழக்கு ஆசியாவின் மீகாங் ஆறு, ஏழு நாடுகளுக்குப் பயனளிக்கிறது. நைல் நதி, பத்து நாடுகளின் வழியாக ஓடுகிறது. அந்த நாடுகளெல்லாம் பன்னாட்டு நதி நீரைச் சுமுகமாகப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வளர்ந்து வருகின்றன. அவ்வளவு தூரம் போவானேன்? நமது இந்தியத் திருநாட்டின் நர்மதை நதி, கிருஷ்ணா நதி, பக்ராநங்கல் அணை நீரை இரண்டு - மூன்று மாநிலங்கள் ஒன்றுக்கொன்று அனுசரித்து இணக்கமான முறையில் பகிர்ந்து கொள்கின்றன. இவ்வாறான நிலையில், ஒரு தாய் மக்களான தமிழரும், கன்னடத்தவரும், கேரளத்தினரும், காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொண்டு சமாதானமான முறையில் சக வாழ்வு நடத்துவதில் என்ன பிரச்சினை எழ முடியும்?

தமிழகத்தின் தற்போதைய தேவை எல்லாம், பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான சம்பா சாகுபடிக்கு போதுமான அளவுக்குத் தண்ணீர் வேண்டும். அந்தத் தண்ணீரும் முறைப்படி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தின் முன் முயற்சியிலும், கண்காணிப்பிலும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இதற்கு மத்திய - மாநில அரசுகள் ஒத்துழைத்திடவும், உதவிடவும் முன் வர வேண்டும். இரு மாநில மக்களும் அண்ணன் தம்பிகளாக பழகி வரும் தற்போதுள்ள பாசமும் பரிவும் நிறைந்த நிலைமைக்கு எவ்வித ஊனமும் ஏற்பட்டுவிடாதவாறு பிரச்சினை சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும். இதுவே நமது ஆழ்ந்த விருப்பம் - அன்பான வேண்டுகோள்! என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Dmk chief karunanidhi seeks urgent review of SC orders to set up Cauvery Management Board
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X