For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக ஆட்சியில் சிமெண்ட் விலை உயராமல் இருந்தால்தானே ஆச்சரியம்: கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியில் சிமெண்ட் விலை உயராமல் இருந்தால் தானே ஆச்சரியப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

Karunanidhi accuses Tamilnadu government for cement price hike

கேள்வி:- தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் சிமெண்ட் விலை மூட்டைக்கு நாற்பது ரூபாய் மேலும் உயர்ந்துள்ளதே?

கலைஞர்:- உயராமல் இருந்தால்தானே ஆச்சரியப்பட வேண்டும். ஏடுகளில் தமிழகத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு நாற்பது ரூபாய் உயர்ந்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. ஒரு மூட்டை சிமெண்ட் 370 ரூபாய்க்கு விற்கிறதாம். கடந்த வாரம் 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது 370 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று செய்தி வந்துள்ளது. 2007ஆம் ஆண்டு கழக ஆட்சியில் ஒரு மூட்டை சிமெண்ட் 180 ரூபாயாக இருந்தபோது, அதற்கே எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஆட்சியில் தற்போது சிமெண்ட் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

கழக ஆட்சியில் 14-10-2007 அன்று ஜெயலலிதா சிமெண்ட் விலை உயர்வு குறித்து விடுத்த அறிக்கையில், "மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், மணல், செங்கல் ஆகியவற்றின் விலைகள் மிக மிக அதிகமாக உயர்ந்து விட்டதால், ஏழை எளிய நடுத்தர மக்கள், வீடு கட்டும் தங்களுடைய கனவுகள் சிதைந்து போய் விட்டதாகவே கருதுகிறார்கள். கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக, கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்து விட்டதோடு மட்டுமல்லாமல், இதனையே நம்பி வாழும் லட்சக் கணக்கான கட்டடத் தொழிலாளர்கள் எவ்வித வேலை வாய்ப்பும் இன்றி தவித்துக் கொண்டிருக் கின்றனர்" என்றெல்லாம் குறிப்பிட்டதோடு, அ.தி.மு.க. சார்பில் அதற்காக 15-10-2007 அன்று சென்னையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

2008ஆம் ஆண்டில் கழக ஆட்சியில் ``சிமெண்ட் விலை அதிகமாக இருந்தபோது, சிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் சிமெண்ட் ஆலைகள் அரசுடைமையாக்கப்படும்'' என்று எச்சரித்தேன். அந்த அறிவிப்பைக்கூட 11-1-2008 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் "வெத்துவேட்டு மிரட்டல் அறிவிப்பு" என்றார்.

அப்போது சிமெண்ட் ஆலை அதிபர்களை அழைத்து நான் பேசியதன் விளைவாக, 500 சதுர அடியிலிருந்து 1000 சதுர அடி வரை வீடு கட்டுபவர்களுக்கு சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் குறைந்தபட்சம் 50 மூட்டைகள் முதல் அதிகப்பட்சம் 400 மூட்டைகள் வரை விற்க ஒப்புக் கொண்டார்கள்.

அதைப் பற்றியும்கூட ஜெயலலிதா, "அது செயல்படுத்த முடியாத, நிறைவேற்ற முடியாத ஒரு திட்டம். அந்தத் திட்டத்தை அறிவித்து ஒரு கண் துடைப்பு நாடகத்தை நடத்தியிருக்கும் கருணாநிதியின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கருணாநிதியின் இந்தக் கபட நாடகத்தைக் கண்டு தமிழக மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. இந்த அறிவிப்பை சிமெண்ட் விலைக் குறைப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிபந்தனைகள் ஏதுமின்றி அனைவருக்கும் பொதுவாக சிமெண்ட் விலையைக் குறைக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிக்கை விடுத்தார்.

ஒரு மூட்டை சிமெண்ட் 270 ரூபாய் விற்றபோதே இவ்வாறு அறிக்கை விடுத்த ஜெயலலிதா, தற்போது ஒரு மூட்டை சிமெண்ட் 370 ரூபாய் விலைக்கு விற்கிறதே, இதற்கு பன்னீர்செல்வம் என்ன பதில் சொல்லப்போகிறார்? தற்போது வந்துள்ள செய்தியில், மேலும் சிமெண்ட் விலையை உயர்த்த வேண்டுமென்ற நோக்கத்தில் சிமெண்ட் விற்பனையை நிறுத்தி வைத்து, சிமெண்ட் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதைப்போல ஒரு நிலையை உருவாக்கியுள்ளதால் 40 ஆயிரம் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தலைவர் திரு. வெங்கடாச்சலம் கூறும்போது, "கடந்த ஜனவரியில் ஒரு மூட்டை 280 ரூபாயாக இருந்த சிமெண்ட், தற்போது 380 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் மூன்று தடவைக்கு மேல் விலை யேற்றப்பட்டுள்ளது" என்று சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் சிமெண்ட் விலை ஏறுவது என்பது இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has accused that the Tamilnadu government is the reason for cement price hike
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X