For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு என்று அறிக்கை வந்துள்ளதே'.. கருணாநிதி பதில்!

Google Oneindia Tamil News

சென்னை: நேற்றையதினம் 181 கோடியில் 16 சாலை மேம்பாலங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தற்போது முதல்வர் செய்துள்ள அறிவிப்பு, இரண்டாண்டுகளுக்கு முன்பு அவர் செய்த அறிவிப்பின் நகலா? புதிய அறிவிப்பா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை...

Karunanidhi asks TN govt on the CM's announcement of new bridges

கேள்வி: ரூ. 181 கோடியில் 16 சாலை மேம் பாலங்கள்: முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு என்று அனைத்து நாளேடுகளிலும் செய்தி வெளிவந்துள்ளதே?

கருணாநிதி: ஆமாம், இதே முதலமைச்சர் 7-9-2011 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் படித்த அறிக்கையில் ஒரு பத்தி வருமாறு :-

"ரயில்வே கடவுகளில் சாலை மேம்பாலங்கள்/கீழ்பாலங்கள் கட்டுவதால் தடையில்லாப் போக்கு வரத்து உறுதி செய்யப்படுவதுடன், விபத்துகளும் தவிர்க்கப் படும். இதனால் பயண நேரமும் வெகுவாகக் குறையும். இதற்காக சாலைகளில் இருப்புப் பாதை குறுக்கிடும் சாலைகளில் ரயில்வே பணித் திட்டம் 2011-12இன் கீழ், செலவுப் பகிர்வு அடிப்படையில், 740 கோடி ரூபாய் மதிப்பில், 23 புதிய ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் கட்டும் பணிகள் 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 பணிகளும் ; திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பணிகளும் ; வேலூர் மாவட்டத்தில் 4 பணிகளும் ; விழுப்புரம் மாவட்டத்தில் 3 பணிகளும் ; கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 பணிகளும் ; சேலம் மாவட்டத்தில் 3 பணிகளும் ; ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 1 பணியும் மேற்கொள்ளப்படும்""

- இவ்வாறு முதலமைச்சரால் பேரவையில் செப்டம்பர் 2011 இல் அறிவிக்கப்பட்டது, இரண்டாண்டுகள் முடிந்துவிட்டன. இந்த 23 புதிய ரயில் மேம்பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு விட்டனவா? திறப்பு விழா நடந்ததா? யாருக்கும் தெரியாது. இந்த நிலையில்தான் நேற்றையதினம் 181 கோடியில் 16 சாலை மேம்பாலங்களை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தற்போது முதலமைச்சர் செய்துள்ள அறிவிப்பு, இரண்டாண்டுகளுக்கு முன்பு அவர் செய்த அறிவிப்பின் நகலா? புதிய அறிவிப்பா?

சிமெண்ட் விலை உயர்ந்து விட்டதே...

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் சிமெண்ட் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விட்டதே?

கருணாநிதி: அ.தி.மு.க. ஆட்சி அல்லவா? எல்லாமே வரலாறு காணாத அளவிற்குத்தான் இருக்கும்! சிமெண்ட் விலை குறைந்து விட்டால், அது இந்த ஆட்சிக்கு ஒரு "குறைவாக"த் தெரியும் என்று நினைக்க மாட்டார்களா? ஒரு மூட்டை சிமெண்ட் 370 ரூபாய் விற்கிறதாம். 2007ஆம் ஆண்டு கழக ஆட்சியில் ஒரு மூட்டை சிமெண்ட் 180 ரூபாயாக இருந்தபோது, அதற்கே எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் ஆட்சியில் தற்போது சிமெண்ட் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இதைப் பற்றி இந்தியக் கட்டுனர் வல்லுனர் சங்க தென்னக மைய மூத்த நிர்வாகி மூர்த்தி அளித்த பேட்டியில், "கர்நாடக மாநிலத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம், சிமெண்ட் விற்பனை செய்வதால், அங்கு மக்களுக்கு ஒரு மூட்டை, 240 ரூபாய் விலையில் கிடைக்கிறது. தமிழகத்தில் இந்த நடைமுறை இல்லாததால், சிமெண்ட் உற்பத்தியாளர்களின் ஆதிக்கம் தொடர்கிறது" என்று கூறியிருக்கிறார். மேலும் அவர், "தற்போதைய நிலவரப்படி, ஒரு டன், அதாவது 20 மூட்டை சிமெண்ட் தயாரிக்க சராசரியாக 2,100 ரூபாய் மட்டுமே செலவாகிறது. அதாவது ஒரு மூட்டை சிமெண்ட் 105 ரூபாய். அதற்கு மேல் போக்குவரத்து, வரிகள் என்ற வகையில் ஒரு மூட்டைக்கு 30 ரூபாய் மட்டுமே கூடுதல் செலவாகிறது. எப்படி ஆனாலும் ஒரு மூட்டை சிமெண்ட் 250 ரூபாய்க்கு மேல் செல்ல வாய்ப்பில்லை" என்று கூறியிருக்கிறார்.

கழக ஆட்சியில் 14-10-2007 அன்று ஜெயலலிதா சிமெண்ட் விலை உயர்வு குறித்து விடுத்த அறிக்கையில், "மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், மணல், செங்கல் ஆகியவற்றின் விலைகள் மிக மிக அதிகமாக உயர்ந்து விட்டதால், ஏழை எளிய நடுத்தர மக்கள், வீடு கட்டும் தங்களுடைய கனவுகள் சிதைந்து போய் விட்டதாகவே கருதுகிறார்கள்.

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம் காரண மாக, கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்து விட்டதோடு மட்டுமல்லாமல், இதனையே நம்பி வாழும் லட்சக் கணக்கான கட்டடத் தொழிலாளர்கள் எவ்வித வேலை வாய்ப்பும் இன்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர்" என்றெல்லாம் குறிப்பிட்டதோடு, அ.தி.மு.க. சார்பில் அதற்காக 15-10-2007 அன்று சென்னையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

2008ஆம் ஆண்டில் கழக ஆட்சியில் சிமெண்ட் விலை அதிகமாக இருந்தபோது, சிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் சிமெண்ட் ஆலைகள் அரசுடைமையாக்கப்படும் என்று எச்சரித்தேன். அந்த அறிவிப்பைக்கூட 11-1-2008 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் "வெத்துவேட்டு மிரட்டல் அறிவிப்பு" என்றார். அப்போது சிமெண்ட் ஆலை அதிபர்களை அழைத்து நான் பேசியதன் விளைவாக, 500 சதுர அடியிலிருந்து 1000 சதுர அடி வரை வீடு கட்டுபவர்களுக்கு சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் குறைந்தபட்சம் 50 மூட்டைகள் முதல் அதிகப் பட்சம் 400 மூட்டைகள் வரை விற்க ஒப்புக் கொண்டார்கள்.

அதைப் பற்றியும்கூட, ஜெயலலிதா "அது செயல்படுத்த முடியாத, நிறைவேற்ற முடியாத ஒரு திட்டம். அந்தத் திட்டத்தை அறிவித்து ஒரு கண் துடைப்பு நாடகத்தை நடத்தி யிருக்கும் கருணாநிதியின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.கருணாநிதி யின் இந்தக் கபட நாடகத்தைக் கண்டு தமிழக மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. இந்த அறிவிப்பை சிமெண்ட் விலை குறைப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிபந்தனைகள் ஏதுமின்றி அனைவருக்கும் பொதுவாக சிமெண்ட் விலையைக் குறைக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிக்கை விடுத்தார்.

ஒரு மூட்டை சிமெண்ட் 270 ரூபாய் விற்றபோதே இவ்வாறு அறிக்கை விடுத்த ஜெயலலிதா, தற்போது ஒரு மூட்டை சிமெண்ட் 370 ரூபாய் விலைக்கு விற்கிறதே, அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? அவர் அப்போது விடுத்த அறிக்கையை அப்படியே அவருக்கே திருப்பிச் சமர்ப்பணம் செய்கிறேன்.

சிமெண்ட் விலை இருக்கட்டும்; மணல் விலை பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. "சென்னையில் மணல் விலை கிடு கிடு உயர்வு" என்று "தினமணி"" நாளேடே 19-10-2013 தேதிய இதழில் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் ஒரு லாரி மணல் 16 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்களின் சங்கத்தின் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம் கூறும்போது, "கடந்த ஆண்டு 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஒரு லோடு மணல் விலை தற்போது சென்னை நகர்ப் பகுதியில் 16 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், மற்ற மாவட்டங்களில் இடத்தைப் பொறுத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அனைத்துக் கட்டுமானப் பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

English summary
DMK president Karunanidhi has asksd the TN govt on the CM's announcement of new bridges in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X