முதல் முறையாக கையை அசைக்காத கருணாநிதி... கோபாலபுரத்தில் தொண்டர்கள் சோகம்!
சென்னை: கோபாலபுரம் இல்லத்தில் இருந்து எங்கு புறப்பட்டாலும், அல்லது திரும்பினாலும், ஏன் இதற்கு முன் மருத்துவமனைக்குப் புறப்பட்டபோதும், தொண்டர்களைப் பார்த்து கையை அசைக்காமல் கருணாநிதி சென்றதில்லை. முதல் முறையாக கையை அசைக்காமல் கோபாலபுரத்துக்கு அவருடைய உடல் கொண்டு வரப்பட்டது திமுக தொண்டர்கள் இடையே சோகத்தை ஏர்படுத்தியது.
கோபாலபுரத்தில் உள்ள வீட்டை, 1955ல் சரபேஸ்வர ஐயர் என்பவரிடம் இருந்து கருணாநிதி வாங்கினார். 1968ல் அந்த வீட்டை மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரின் பெயரில் பதிவு செய்தார்.

இந்த நிலையில், தனது மற்றும் மனைவியின் வாழ்நாளுக்குப் பிறகு அந்த வீடு அன்னை அஞ்சுகம் டிரஸ்ட் சார்பில் இலவச மருத்துவமனையாக செயல்படும் என்று கருணாநிதி 2010ல் அறிவித்திருந்தார்.
கருணாநிதியின் வாழ்க்கையோடு மட்டுமல்ல, திமுகவினரின் வாழ்க்கையோடும் ஒன்றி பிணைந்தது இந்த கோபாலபுரம் வீடு. வீட்டில் இருந்து வெளியே புறப்படும்போதும், வீட்டுக்கு திரும்பும்போது, காத்திருக்கும் தொண்டர்களைப் பார்த்து கையசைப்பது கருணாநிதியின் வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளில் வீல்சேரில் இருந்தபோதும், மருத்துவமனைக்குச் சென்றபோதும் கருணாநிதியின் அந்த வழக்கம் மாறவில்லை.
11 நாட்களுக்கு முன்பு, ஜூலை 28ம் தேதி காவிரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிகழ்வைத் தவிர கருணாநிதியின் கை அசைவு இல்லாமல் இருந்ததில்லை.
தற்போது மருத்துவமனையில் உயிரிழந்து, அவருடைய உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கை அசைக்காமல் தலைவர் செல்கிறாரே என்று தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.