For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம் சாதனைகள் சரிகிறதே.. பாதிப்பு தமிழினத்திற்குத்தானே.. கருணாநிதி வேதனை!

Google Oneindia Tamil News

சென்னை: பல ஆண்டுகாலம் போராடி, தியாகங்கள் புரிந்து, உயிர்ப்பலிகள் தந்து, தமிழும் - தமிழ் மக்களும் - தமிழ்ப் பண்பாடும் - தமிழக முன்னேற்றமும் மட்டுமே நமது குறிக்கோள்கள் என, நாம் அரும்பாடுபட்டு தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம், வேளாண்மை உற்பத்தியில் முன்னணி மாநிலம், பொருளாதார வளர்ச்சியில் முதல் வரிசை மாநிலம், கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலம் என்பன போன்ற நாம் படைத்த சாதனைகள் எல்லாம் சரிவடைந்து கொண்டிருக்கின்ற கொடுமைகளைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க முடியுமா? அவற்றால், பாதிக்கப்படுவது நமது தமிழினம் அல்லவா? என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தனது 93வது பிறந்த நாளையொடடி கட்சியினருக்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்தான் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

93வது பிறந்த நாள்

93வது பிறந்த நாள்

இன்று எனது 93வது பிறந்த நாள்! 92 வயது நிறைவடைந்து, 93வது வயதில் அடியெடுத்து வைக்கும் இனிய வேளையில், எனை ஈன்று புறந்தந்த என் அருமைத் தாய் அஞ்சுகம் அம்மாள், எனைச் சான்றோனாக்கிய அன்புத் தந்தை முத்துவேலர், கொள்கை வேல் வடித்துத் தந்து வழிப்படுத்திய தந்தை பெரியார், அவையத்து முந்தியிருக்கச் செய்த பேரறிஞர் அண்ணா, அரசியல் களத்தில் வெற்றிகள் குவித்திடத் தோள் வலிமை தந்து, துணைபுரிந்து உதவிய கெழுதகை நண்பர்கள், இருக்கிறோம் நாங்கள் எதையும் தாங்கும் இதயத்தோடு; என்றும் உன் அருகில்' என்று எனை எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்ற என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் அனைவரையும் எண்ணி மகிழ்கிறேன்; உள்ளத்தால் வணங்குகிறேன்!

தம்பி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள வேளையில்

தம்பி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள வேளையில்

தமிழகத்தில் 15வது சட்டமன்றத்திற் கான தேர்தல் முடிந்து - ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை நூலிழையில் தவறவிட்ட போதிலும், திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களைப் பெற்று - தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்து; தளபதி தம்பி மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றும் கொண்டுள்ள வேளையில் வரும் எனது பிறந்த நாளில் எனது அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக

ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறுபாடான பல செயல்பாடுகளைக் காண முடிந்தது. தேர்தல் ஆணையம் திட்டமிட்டு நமக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது. தமிழகக் கட்சிகளோ, 2011-2016 ஐந்தாண்டு கால அதிமுக அரசின் அடாவடிகளை, அரசியல் நாகரிகமற்ற அணுகுமுறைகளை, ஜனநாயக விரோதச் செயல்பாடுகளை, செயல்திறனற்ற அரசின் முறைகேடுகளை, ஊரே நாறும் ஊழல் நடவடிக்கைகளை எல்லாம் தொடர்ந்து கண்டித்து வந்தபோதும், 2016 தேர்தலில் அக்கட்சியே வெற்றி பெறுவதற்குக் கொல்லைப்புறத்தில் குறுக்கு வழிவகுத்து, நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை எப்பாடு பட்டேனும் தடுப்பதிலேயே சில கட்சிகள் குறியாய் நின்றன.

துரோகத்திற்குத் துணை போன மத்திய அரசு

துரோகத்திற்குத் துணை போன மத்திய அரசு

மத்திய அரசும், அதன் அமைச்சர்களும் அ.தி.மு.க. அரசைக் கடுமையாகக் குறை கூறிக் கொண்டே, முதலமைச்சரை மத்திய அமைச்சர்களாலேயே சந்திக்க முடியவில்லை எனக் குற்றம் சுமத்திக் கொண்டே, தேர்தல் நேரத்தில் அக்கட்சியின் தில்லுமுல்லுகளுக் கெல்லாம் வெளிப்படையாகவே துணைபோன காட்சிகளைத்தான் காண முடிந்தது நம்மால். கரூர் அன்புநாதன் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணம், திருப்பூரில் 570 கோடி ரூபாயுடன் பிடிபட்ட கண்டெய்னர் லாரிகள், அங்கிங்கெனாதபடி வாக்காளர்களுக்குப் பல தவணை களில் அ.தி.மு.க. அள்ளி வீசிய பணம், எல்லாம் அரசியல் கட்சியின் தலைவர்களால், செய்தி ஊடகங்களால், செய்தி ஏடுகளால், இன்று மறக்கப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டனவே?

ஒரு திட்டமும் இல்லை

ஒரு திட்டமும் இல்லை

அ.தி.மு.க. 2011-2016 ஆட்சி காலத்தில் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவில்லை; கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட வடசென்னை, மேட்டூர், வல்லூர் அனல் மின் திட்டங்களின் பயன்களை நுகர்ந்ததே அல்லாமல், புதிய ஒரு மின் திட்டத்தைக்கூட, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைக்கூட தொடங்கிட வில்லையே? விலைவாசிகளைக் குறைக்க வில்லையே? இளைஞர்களின் வேலைவாய்ப்பு களுக்கு வழிசெய்யப்பட வில்லையே? இருந்த தொழில்களை மூடியதுடன், புதிய தொழில் ஒன்றைக்கூடத் தொடங்கிடாமல், தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் கடைசி மாநிலம் என்ற தலைக்குனிவை ஏற்படுத்தியதே?

வரலாறு காணாத வகையில்

வரலாறு காணாத வகையில்

வரலாறு காணா வகையில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வுகளால், மக்கள் பாதிக்கப்பட்டபோதும் கவலைப்படவில்லையே? ஐந்தாண்டுகளில் பத்தாயிரம் படுகொலைகள், ஏறத்தாழ ஒரு இலட்சம் கொள்ளைச் சம்பவங்கள், வழிப்பறிகள், கற்பழிப்புகள் முதலியவைகளால் சட்டம்-ஒழுங்கு கெட்டுக் குட்டிச்சுவரானதும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையே? பால் கொள்முதலில் ஊழல், தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், அரசு ஊழியர்கள் நியமனத்தில் ஊழல், பருப்பு கொள்முதலில் ஊழல், முட்டை கொள்முதலில் ஊழல், தாது மணல் கொள்ளை ஊழல், கிரானைட் ஊழல் என அரசின் துறைகள் அனைத்துமே ஊழலின் ஊற்றுக் கண்களாகவே மாறிவிட்டனவே?

ஆடு கசாப்புக் கடைக்காரனைத்தானே நம்புகிறது!

ஆடு கசாப்புக் கடைக்காரனைத்தானே நம்புகிறது!

அரியானா மாநிலத்தில் 2010 வரை நடைமுறையில் இருந்த தமிழ் கற்பிக்கும் முறை தொடரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் குட்டு வைக்கும் நிலைக்குத் தமிழ் வளர்ச்சிப் பணிகள் தேங்கி விட்டனவே? இவை போல இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்! இத்தனையையும் புறந்தள்ளி, ஆட்சி அதிகாரம் அவர்களுக்கே தாரை வார்க்கப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது; "ஆடு, கசாப்புக் கடைக்காரனைத் தான் நம்புகிறது".

தமிழும் - தமிழ் மக்களும்

தமிழும் - தமிழ் மக்களும்

இருந்தபோதிலும், பல ஆண்டுகாலம் போராடி, தியாகங்கள் புரிந்து, உயிர்ப்பலிகள் தந்து, தமிழும் - தமிழ் மக்களும் - தமிழ்ப் பண்பாடும் - தமிழக முன்னேற்றமும் மட்டுமே நமது குறிக்கோள்கள் என, நாம் அரும்பாடுபட்டு தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம், வேளாண்மை உற்பத்தியில் முன்னணி மாநிலம், பொருளாதார வளர்ச்சியில் முதல் வரிசை மாநிலம், கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலம் என்பன போன்ற நாம் படைத்த சாதனைகள் எல்லாம் சரிவடைந்து கொண்டிருக்கின்ற கொடுமைகளைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க முடியுமா? அவற்றால், பாதிக்கப்படுவது நமது தமிழினம் அல்லவா?

இப்படியே விட்டு விட்டால்

இப்படியே விட்டு விட்டால்

இதை இப்படியே விட்டுவிட்டால் நாளைய தலைமுறை, பழிக்குமே நம்மை. இதை எண்ணி விழிப்புடன் செயல்படுவோம்! உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டுவோம்! உழைப்பை மறந்து ஊழல் சாக்கடையில் புரளும் உன்மத்தர்களைத் திருத்திட ஓய்வின்றி உழைத்திடுவோம்! திராவிடத்தின் துயர் துடைத்துச் செம்மைப்படுத்துவோம்! என என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளை அன்புக் கரம் நீட்டி அழைக்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK president Karunanidhi has called the DMK cadres to unite against the ADMK govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X