For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை செய்தோர் மீது நடவடிக்கை தேவை: கருணாநிதி வேண்டுகோள்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில், நாமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட 12 அடி உயரம் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை ஒன்றினை ஹரித்துவாரில், கங்கை நதிக் கரை யோரத்தில் கடந்த ஜுன் மாதம் 29ஆம் தேதியன்று நிறுவிட பா.ஜ.க. வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் ஏற்பாடு செய்த போது, அங்கேயுள்ள சாதுக்களில் ஒரு பிரிவினர் அங்கே அய்யன் திருவள்ளுவரின் சிலையினை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் காரணமாக அய்யன் திருவள்ளுவரின் சிலையினை கங்கைக் கரை அருகே உள்ள மாநில அரசுக்குச் சொந்தமான பொதுப்பணித் துறை விருந்தினர் இல்ல வளாகத்திலே தற்காலிகமாக நிறுவிட, உத்தரகாண்ட் மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ராம் நாயக், மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், மற்றும் தமிழறிஞர்கள் கலந்து கொண்டு அந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

தமிழர்கள் கொந்தளிப்பு

தமிழர்கள் கொந்தளிப்பு

அப்போதே அங்கே கலந்து கொண்டவர்கள், அய்யன் திருவள்ளுவரின் சிலையை மரியாதைக்குரிய பொது இடத்தில் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகளையும் அந்த மாநில அரசு எடுத்து வந்தது. இந்த நிலையில் தான் ஒருசில நாளேடுகளில், ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றும், திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு, பிளாஸ்டிக் பையில் வைத்து, கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அங்கே உள்ள ஒரு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டு, "திருவள்ளுவர் சிலைக்கு அவமானம்" என்ற தலைப்பில் செய்தி வந்து, அதனைப் படித்த தமிழர்கள் பெரிதும்மனக் கொந்தளிப்புக்கு ஆளாக நேர்ந்தது.

உத்தரகாண்ட் அரசு விளக்கம்

உத்தரகாண்ட் அரசு விளக்கம்

சிலையை வைக்க ஏற்பாடு செய்த தருண் விஜய்யை, தினமணி செய்தியாளர் தொடர்பு கொண்டு இதைப் பற்றிக் கேட்ட போது, "ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன். அதன் செய்தியாளர் விஷமத்தனமாக, இந்த விஷயத்தின் தன்மையை அறியாமலும், தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையிலும் செய்தியைப் பதிவு செய்துள்ளார். திருவள்ளுவர் சிலை பற்றி மாநில அரசின் தலைமைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு பேசினேன். சிலை அப்புறப்படுத்தப்படவில்லை, வேறு இடத்தில் வைப்பதற்காக அரசு விருந்தினர் மாளிகை வளாகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் வேறு இடத்தில் முழு மரியாதையுடன் திருவள்ளுவர் சிலையை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்த விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை உத்தரகாண்ட் அரசு மதிக்கிறது" என்று தெரிவித்ததாக 19-7-2016 "தினமணி" நாளிதழில் செய்தி வந்துள்ளது.

தருண் விஜய் விளக்கம்

தருண் விஜய் விளக்கம்

மேலும் தருண் விஜய் கூறும்போது, "திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக் கரைப் பகுதியில் நிறுவுவதற்கான ஒப்புதலை உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் ஆகிய இரண்டு மாநில அரசுகள் இணைந்தே வழங்கின, சிலை திறப்பு விழாவுக்கு முந்தைய நள்ளிரவில் ஒரு பிரிவு சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் எங்கள் அனுமதியின்றி சிலையை கங்கை கரைப் பகுதியிலிருந்து அகற்றி வேறு இடத்தில் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அவமரியாதை செய்தோர் மீது நடவடிக்கை

அவமரியாதை செய்தோர் மீது நடவடிக்கை

திருவள்ளுவர் சிலையை வேறு இடத்தில் வைக்க வேண்டியது உத்தரகாண்ட் மாநில அரசின் பொறுப்பு. திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை இழைக்கக் காரணமாக இருந்த மாவட்ட நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தர காண்ட் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் ஒரு பிரிவு சாதுக்கள் தெரிவித்துள்ள ஆட்சேபம் குறித்து அவர்களுடன் பேசித் தீர்வு காணப்படும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

ஹரீஷ் ராவத் உறுதி

ஹரீஷ் ராவத் உறுதி

இதற்கிடையே அகில இந்திய தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் டெல்லியிலிருந்து ஹரித்துவாருக்குச் சென்றிருப்பதாகவும். அவர்களிடம் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திருவள்ளுவர் சிலையை அடுத்த சில நாட்களில் வேறு இடத்தில் நிறுவப்படும் என்று உறுதியளித்திருப்பதாகவும் செய்திகள் வந்திருப்பது ஆறுதலைத் தருகிறது. இந்நிலையில் தான் அய்யன் திருவள்ளுவர் சிலையினை நிறுவுவதில் உண்டான பிரச்சினை குறித்து கவிப்பேரரசு தம்பி வைரமுத்து அவர்களும், தமிழர் தலைவர் வீரமணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அறிக்கைகள் விடுத்துள்ளனர். நமது மாநில அரசோ இந்தச் செய்தி பற்றி எந்தத் தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை; திருவள்ளுவர் சிலை பற்றிச் சிறிதேனும் கவலை கொள்ளவில்லை என்ற போதிலும், உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் அவர்கள் அடுத்த சில நாள்களில் திருவள்ளுவருக்கு மரியாதையும், கௌரவமும் அளிக்கும் வகையில் அவரது சிலையை நிறுவிட அந்த மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்திருப்பது ஏற்பட்ட மனக் காயத்திற்கு மருந்து தடவுவதாக அமைந்திருக்கிறது.

உரிய மரியாதை...

உரிய மரியாதை...

அதற்காக தமிழ் உணர்வு படைத்த மக்களின் சார்பில் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இனியாவது தமிழர்களின் உணர்வுகளில் இரண்டறக் கலந்து விட்ட இந்தப் பிரச்சினை குறித்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இதன் காரணமாக மேலும் எந்தவிதமான குழப்பமும் ஏற்படாத வகையில் உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் உறுதி அளித்திருப்பதைப் போல உரிய தோர் இடத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை அங்கே நிறுவப்பட உலகப் பொது மறை தந்த உத்தமரைப் போற்றுதல் செய்திட முன் வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi expressed concern over a statue of Thiruvalluvar reportedly lying wrapped in a park in Haridwar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X