For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயாவதியை இழிவாக விமர்சிப்பதா? பாஜகவின் தயாசங்கர் சிங்குக்கு கருணாநிதி கடும் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதியை இழிவாக விமர்சித்த பாஜகவின் தயாசங்கர் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, பா.ஜ.க.வினர் சிலரும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிலரும் மற்றும் அவர்களது தொண்டரடிப்பொடி பிரசாரகர்களும், விளைவுகளைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலையின்றி, எதை நினைத்தாலும் பேசலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எல்லைக்கே சென்று செயல்பட்டு, நாட்டில் பேதத்தையும், வேறுபாட்டையும், பிளவையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாபாசாகேப் அம்பேத்கர் - கன்சிராம் வழி நின்று குரல் கொடுத்து வருபவருமான மாயாவதி அவர்களை, உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவரான தயாசங்கர் சிங், அவரது பெண்மையைப் பற்றித் தரக்குறைவான வார்த்தைகளால் ஏசியிருக்கிறார்.

நாவினால் சுட்ட வடு ஆறுமா?

நாவினால் சுட்ட வடு ஆறுமா?

யாருக்கும் தலை வணங்காமல், எதற்கும் அஞ்சாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்ததால் தான், பா.ஜ.க. வினர் தன்னை இழித்தும், பழித்தும் பேசுவதாக மாயாவதி அவர்களே மனம் வெதும்பிக் குறிப்பிட்டிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாநிலங்களவையில் நேற்றையதினம், கழகக் குழுத் தலைவர் கவிஞர் கனிமொழி, "பாஜ.க. தலைவர் ஒருவர், மாயாவதியை தரக் குறைவான வார்த்தையைச் சொல்லி விமர்சித்ததற்காக, அது நாட்டிலே உள்ள ஒட்டுமொத்த மகளிர் சமுதாயத்தையே சாடியதாகக் கருதப்படும்" என்று தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துப் பேசியிருக்கிறார்.

பா.ஜ.க. தயாசங்கர் சிங் அவர்களின் இழிவான பேச்சுக்காக, நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் வருத்தம் தெரிவித்த போதிலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரிய தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் விடுத்துள்ள கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் வலியுறுத்துகிறேன். என்ன நடவடிக்கை எடுத்தாலும், நாவினால் சுட்ட வடு ஆறி விடுமா என்ன?

தலித்துகள் மீது தாக்குதல்

தலித்துகள் மீது தாக்குதல்

இதுபோலவே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த மாநிலமான - பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகின்ற குஜராத்தில் உனா என்ற இடத்தில், செத்துப் போன பசுமாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த தலித் இனத்தவரை, கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கும்பல் தாக்கியது. இது தொடர்பாக அங்கே தொடர்ந்து கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உடனே நடவடிக்கை தேவை

உடனே நடவடிக்கை தேவை

போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்கப்பட்ட தலித்துகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை முதல்வர் ஆனந்தி பென் படேல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்திலும் நேற்றையதினம் இந்தப் பிரச்சினை புயலைக் கிளப்பியுள்ளது. தாக்கியவர்கள் மீது உடனடியாகச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனைவரும் கூறுவதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

தபால்நிலையங்களில் கங்கை நீர்

தபால்நிலையங்களில் கங்கை நீர்

இந்தியாவில் தபால் அலுவலகங்கள் அனைத்து மதத்தினரும், எல்லாப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் வந்து போகின்ற இடம். மத்திய அரசைச் சேர்ந்த அலுவலகங்கள் அவை. ஆனால் அங்கே பா.ஜ.க. அரசு புனித "கங்கை நீர்" விற்பனைக்கு அனுமதித்திருப்பதாக ஏடுகளில் வந்துள்ள செய்தி பற்றி என்னைக்கேட்ட போது, "பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால், இதே தபால் அலுவலகங்களில் திருநீறு, குங்குமம் ஆகியவையும் விற்பனைக்கு வந்து விடும். பக்தர்கள் கவலைப்படத் தேவையில்லை. "மதச் சார்பற்ற குடியரசு" என இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த அளவுக்குக் கேவலப்படுத்தப்பட்டு வருவதை, யாராலும் கற்பனை செய்தும் பார்த்திட இயலாது" என்று பதிலளித்தேன்.

பார்சல் அனுப்புவதா?

பார்சல் அனுப்புவதா?

இதற்காகத் தமிழகத்திலே உள்ள இந்து முன்னணியினர் கங்கை நீரை என் வீட்டிற்கு "பார்சல்" அனுப்புகிறார்களாம். புகைப்படமே ஏடுகளில் வந்துள்ளது. அதில் கங்கை நீரை தபால் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்ததற்காக பார்சல் அனுப்புவதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?

எங்கேபோய் முடியுமோ?

எங்கேபோய் முடியுமோ?

நன்றாக விற்கட்டும்! நாடெங்கும் நாள்தோறும் விற்கட்டும்! தபால் அலுவலகப் பணிகளையெல்லாம் விட்டு விட்டு விற்கட்டும்! பார்சலும் அனுப்பட்டும்! இந்துத்துவாவைப் பரப்பட்டும்! பா.ஜ.க. தலைமை இவை எல்லாவற்றுக்கும் முடிவில் என்ன தான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
DMK leader Karunanidhi on Thursday condemned BJP leader Dayashankar Singh's abusive remark against Bahujan Samaj Party chief Mayawati.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X