For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான போலீஸ் தாக்குதல்- கருணாநிதி கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுக்கடையை அகற்றக்கோரி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று நடத்திய போராட்டத்தால் காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

karunanidhi

மாணவர்கள் மீதான இத்தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே இன்று இரவு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி கூறியதாவது:

கேள்வி: மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோர் மீது காவல் துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்து கிறார்கள். குறிப்பாக இன்றையதினம் சென்னையில் பச்சையப்பன் கல்லுhரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி: தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து, அ.திமு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டு தமிழகம் எங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் போராடுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக இன்றைய தினம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்திய போது, அவர்கள்மீது காவல் துறையினர் ஏவப்பட்டு, எந்த அளவுக்கு தாக்குதல் நடத்தினார்கள் என்பதை தொலைக்காட்சிகளின் மூலமாக நாமெல்லாம் இன்றைக்கு நேரில் கண்டோம். காவலர்கள் சூழ்ந்து கொண்டு மாணவர்களையும், மாணவிகளையும் மனம்போனபடி கடுமையாகத் தாக்கினர். மாணவர்கள் மீது காவலர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதையும், எத்தகைய அடக்குமுறைகளை காவல் துறையினர் கையாண்டார்கள் என்பதை நேரடியாக நாமெல்லாம் நீங்கள் உட்பட பார்த்திருக்கிறோம்.

கைதான மாணவர்களையும், மாணவிகளையும் காவல்துறையினர் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அந்த மாணவிகளின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். அ.தி.மு.க. ஆட்சியினரின் காவல் துறையினர் நடத்திய இந்தத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எதிர்க் கட்சிகள் அனைத்துமே இந்தச் சம்பவத்தைக் கண்டித்திருக்கின்றன. நானும் தி.மு. கழகத்தின் சார்பில் உங்களிடம் என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறேன். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்து கின்ற அளவுக்கு அவர்கள் பெரிய குற்றம் எதுவும் செய்திடவில்லை. மது விலக்கினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கேட்டுக் கொண்ட மாணவர்களிடம் அரசாங்கத்தின் சார்பில் அவர்களுக்கு ஒரு தெளிவான பதிலை அளித்திருந்தால் கிளர்ச்சிகள் இந்த அளவுக்கு மோசமாகியிருக்காது என்று நான் கருதுகிறேன். அமைதியாக கையாளப்பட வேண்டிய விவகாரத்தில், அமளிதுமளி ஏற்படுத்துகின்ற வகையில் இந்த அரசு நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல என்பதை மாத்திரம் இப்போது நான் உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

கேள்வி : நாளையதினம் (4-8-2015) ஒரு சில கட்சிகள் நடத்துகின்ற கடையடைப்பில் தி.மு. கழகம் கலந்து கொள்ளுமா?

கருணாநிதி: அந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து, தலைமை வகித்து நடத்துகின்ற கட்சிகள் எங்களை அணுகி கேட்டால் நாங்கள் அது பற்றி யோசிப்போம்.

கேள்வி :- தமிழகம் முழுவதிலும் பிரச்சினை இவ்வளவு பெரிதாக நடக்கும் போது, ஆட்சியினர் மௌனம் சாதிப்பதைப் பற்றி?

கருணாநிதி: காவல் துறையினரின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவர்கள் மௌனம் சாதிப்பதாகச் சொல்ல முடியாது.

கேள்வி : வருகிற 10ஆம் தேதி தி.மு. கழகம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறதே, அதற்கு மற்ற எதிர்க் கட்சிகளின் ஆதரவைக் கேட்பீர்களா?

கருணாநிதி: மற்ற கட்சிகளின் ஆதரவை இதுவரையில் கேட்பதாக உத்தேசம் இல்லை. அவர்களாக வந்து கலந்து கொண்டால் அதை நாங்கள் வரவேற்போம்.

கேள்வி : தி.மு.க.வினர் சிலர் மது ஆலைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பதாக குற்றம் சொல்லுகிறார்களே?

கருணாநிதி: குற்றச்சாட்டு சொல்பவர்கள், குற்றத்தைச் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். எல்லோருக்கும் சேர்த்துத் தான் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

கேள்வி : திராவிடக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து விமர்சனம் செய்து பேசி வருகிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

கருணாநிதி: திராவிடக் கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று சத்தியம் செய்திருக்கிறார். அவர் இப்படி சத்தியம் செய்வதற்கு எந்த அர்த்தமும் கிடையாது. அவ்வப்போது அவர் இதுபோன்ற உறுதிமொழிகளையும், சூளுரை களையும் வெளியிட்டிருக்கிறார். எந்த வகையில் அவர் நிலையாக இருக்கிறார் என்பது போகப் போகத் தெரியும்.

கேள்வி : தி.மு.கழகத் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை எதிர் பார்க்கலாமா?

கருணாநிதி: தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாக, அதில் என்னென்ன இடம்பெறும் என்பதை செய்தியாளர்களிடம் வெளிப்படையாக விமர்சிக்க முடியாது. தேர்தல் அறிக்கை வெளி வந்த பிறகு, படித்துப் பார்த்தால் அதில் என்னென்ன உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி : சட்டப் பேரவைத் தேர்தலுக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

கருணாநிதி: நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்

English summary
DMK leader Karunanidhi has condemned the police lathi charge against Chennai Pachaiyappa College Students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X