For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திரா சிறையில் தமிழர் மர்ம மரணம்- அமைச்சர்களை அனுப்பி விசாரணை நடத்த கருணாநிதி வலியுறுத்தல்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்ட தமிழர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

Karunanidhi demands probe on Tamil labour death in AP

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் இருந்து, ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதிக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக பலர் கைது செய்யப்பட்டு, அந்த மாநிலத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். செம்மரம் கடத்தச் சென்றதாகக் கூறி கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத் தொழிலாளர் 20 பேரை ஆந்திர போலீசார் மற்றும் வனத்துறையினர், மனிதாபிமானம் சிறிதுமின்றி, மனித உரிமைகள் அனைத்தையும் பொருட்படுத்தாமல், சுட்டுக் கொன்றார்கள்.

செம்மரக் கடத்தல் வழக்கில் காவல் துறை அதிகாரி ஒருவரே முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆளுங்கட்சியினருடனான அவருடைய நெருக்கம் மற்றும் செல்வாக்கின் காரணமாக அந்த வழக்கு குப்பைக் கூடைக்குப் போய் விட்டது.

ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலையைத் தொடர்ந்து மேலும் நூற்றுக் கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் வாடிக் கொண்டிருப்பது பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்தேன்.

தமிழக அரசு ஆந்திர முதல்வருக்கு இது தொடர்பாக ஒரு கடிதத்தை எழுதியதுடன் தங்கள் பணி முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்வதற்காகச் சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் மீதும், அத்துமீறி நுழைந்ததாக வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சிறையிலே இருந்த ஒருவரை விடுத்து, "கொல்லப்பட்ட தொழிலாளர்கள் எல்லாம் செம்மரக் கடத்தல்காரர்கள்" என்று கூறும்படி காவல் துறையினரே துhண்டி விட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் 63 தமிழர்களை நெல்லூ மாவட்டத்தில் 2 இடங்களிலும், கடப்பா மாவட்டத்தில் 43 தமிழர்களையும் கைது செய்திருக்கிறார்கள். அந்தத் தமிழர்கள் எல்லாம் பல மாதங்களாக எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் சிறையிலேயே வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை விடுவிக்க தமிழக அரசின் சார்பில் உருப்படியான எந்தவித முயற்சியும் எடுக்காத நிலையில், கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் "நமக்கு நாமே" விடியல் மீட்புப் பயணத்தின் போது, கள்ளக்குறிச்சியில் உறுதியளித்தபடி, கழக வழக்கறிஞர்கள் இதிலே தலையிட்டு ஆந்திராவில் சிறையிலே இருக்கின்ற தமிழர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

இதன்படி கழக வழக்கறிஞர்கள் அந்தத் தமிழர்களை பிணை மூலமாகவாவது மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அதுபற்றிய செய்தி அடங்குவதற்குள், செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை இருளர் காலனியைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடப்பா சிறையிலே இருந்தவர், கடந்த 18-ந் தேதி இறந்திருக்கிறார்.

அவர் சிறையிலே இருந்த போது, ஏதோ உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அவருடைய குடும்பத்தினர் ரத்தினம் மறைவு குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று கோரி சாலை மறியலிலே ஈடுபட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு கடிதம் எழுதியதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல், அமைச்சரவையில் உள்ள இரண்டு மூத்த அமைச்சர்களை உடனடியாக ஆந்திராவுக்கு அனுப்பி, ஆந்திர முதலமைச்சரோடு இதைப் பற்றி விரிவாகப் பேசி, ஆந்திராவில் சிறையிலே உள்ள தமிழகத் தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக இல்லம் திரும்புவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has demanded that TN govt. should probe on the death of Tamil Labour in Andhra Jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X