For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்து நாளையுடன் 60 ஆண்டுகள்- கருணாநிதி வாழ்த்து

தமிழ்நாடு உட்பட மாநிலங்கள் தனித்தனியாக உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ராஜதானியானது மொழிவாரி மாநிலங்களாக தனித்தனியாக பிரிந்து நாளையுடன் 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

நாளை நவம்பர் 1 - 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தான், மொழிவழி மாநிலங்கள் பிரிந்து, தமிழ்நாடு தனி மாநிலமாகவும், ஆந்திரா தனி மாநிலமாகவும், கேரளா தனி மாநிலமாகவும், கர்நாடகா தனி மாநிலமாகவும் பிரிந்து, அறுபது ஆண்டுகள் ஆகின்றன.

Karunanidhi greets States Formation Day

பேரவையில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், ஜீவா அவர்கள் "இந்த அவையில் கன்னடர் இருக்கிறார்கள், தெலுங்கர் இருக்கிறார்கள், கேரள தேசத்தினர் இருக்கிறார்கள், ஆனால் நவம்பர் முதல் தமிழர்கள் மட்டுமே இருக்கப் போகிறார்கள் என்பதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது"என்று கூறினார்.

மொழி வழி மாநிலம் அமைய பெரும் பாடுபட்டவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவா, சிலம்புச் செல்வர், சங்கரலிங்கனார், நேசமணி போன்ற தலைவர்களாவர். அதற்காக பல போராட்டங்கள் எல்லாம் நடைபெற்றன.

அந்தக் காலத்தில் "மதராஸ் ஸ்டேட்"(சென்னை ராஜதானி) என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. மொழிவழி மாநிலங்கள் பிரிந்த போதும், "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட மறுத்தது அப்போதிருந்த காங்கிரஸ் அரசு. இந்த மாநிலத்தின் பெயர் "மதராஸ்" என்று அழைக்கப்பட்டதை, "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டும் தீர்மானத்தை 1967ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் தேதியன்று தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் முதலமைச்சராக இருந்து சட்டப் பேரவையில் கொண்டு வந்தார்.

அந்தத் தீர்மானம் ஒருமனமாக நிறைவேறியது. அப்போது அண்ணா அவர்கள் பேரவைத் தலைவராக இருந்த ஆதித்தனார் அவர்களை நோக்கி,"சட்டமன்றத் தலைவர் அவர்களே, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நன்னாளில் நான் "தமிழ்நாடு" என்று சொல்வதற்கும், அவை உறுப்பினர்கள் "வாழ்க" என்று சொல்வதற்கும் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன்" என்றார்.

பேரவைத் தலைவர் உடனே அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன் பின்னர், "தமிழ்நாடு" என்று அண்ணா மூன்று முறை உரக்கக் குரல் எழுப்பவும், எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று என்று முழக்கமிட்ட சம்பவமும் நடைபெற்றது. அவ்வாறு பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகச் சட்டப் பேரவையில் "தமிழ்நாடு"என்று பெயர் சூட்டிய தீர்மானத்திற்கு அடுத்த ஆண்டு ஐம்பதாம் ஆண்டு பிறக்க இருக்கின்ற நேரத்தில் மொழிவழி மாநிலங்கள் பிரிந்து நாளையோடு அறுபதாம் ஆண்டு நிறைவு பெறுகின்ற நேரத்தில் தமிழ் மக்களை எல்லாம் வாழ்த்துகிறேன். தமிழ்நாடு என்று பெயர்அமைய பாடுபட்ட தலைவர்களை எல்லாம் போற்றுகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi greeted on Monday for the Tamilnadu State formation day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X