For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Exclusive: கருணாநிதி போல ஜெ.வுக்கும் குடும்பம் இருந்திருந்தால்... ஆனந்தராஜ் நெகிழ்ச்சி

கருணாநிதியிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டதாக ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி மறைவு- நடிகர் ஆனந்தராஜ் நெகிழ்ச்சியான பேட்டி- வீடியோ

    சென்னை: சிலரை பார்த்தாலே இவர் இப்படித்தான், அப்படித்தான் என்று முத்திரை குத்திவிடுகிறோம். அதற்கு காரணம் அவர்களது கடந்த கால சம்பவமோ,செயலோ, வார்த்தையோ நம்மை எப்போவதாவது மனதில் தங்கிவிடுவதே அதற்கு காரணம். அது நல்ல விஷயமாகவும் இருக்கலாம், கெட்ட விஷயமாகவும் இருக்கலாம்.

    ஆனால் கணிப்புகளை சரியாக போடுங்கள் என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தி இருக்கிறார் ஒருவர். செயல் வேறு, மனசு வேறு.... புறம் வேறு - அகம் வேறு என்பதை நிரூபித்து இருக்கிறார் ஒருவர். அவர்தான் நடிகர் ஆனந்தராஜ். பலவித பரிமாணங்களில் பலவித படங்களில் தன்னை நிரூபித்துகொண்டு பரிமளித்தவர். ஜெயலலிதா ஆட்சியின்போது தீவிர நம்பிக்கைகுரிய விசுவாசி.

    Karunanidhi is a talented master: Actor Anandharaj

    ஆனால் கருணாநிதி மறைவின்போது இவரது செய்கைகள் சில வியக்க வைத்தன. இவரது பேச்சு கவனிக்க வைத்தன. சில வார்த்தைகள் உருக வைத்தன. இது அதிமுக ஆனந்தராஜ்தானா? என பல நூறு வியப்பு கேள்விகளை கேட்டுவிட்டு சென்றது. அதனையெல்லாம் அவரிடமே கேட்டால் என்ன என்று தோன்றியது. அப்போது "யாரிடமும், எந்த மீடியாவிலும் சொல்லாத சில விஷயங்களை ஒன் இந்தியா-விற்காக பகிர்ந்து கொள்கிறேன்" என்று மனப்பூர்வமாக சொன்னார். அவர் அப்படி என்னதான் சொன்னார் என்று பார்ப்போமா?

    கேள்வி: சார்... நீங்க ஒரு நாடறிந்த அதிமுக பிரமுகர். ஆனால் கருணாநிதி நோயுற்ற போதிலிருந்து மறைவு வரை அங்கேயே சுற்றி சுற்றி வருவதை பார்க்க முடிந்தது. கருணாநிதியின் மேல் உங்களுக்கு இப்படி ஒரு பாசமா?

    கருணாநிதி மறைவு ஒரு பேரிழப்புதான். எப்படி தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் நம்முடன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அதேபோல் கருணாநிதியும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். என்றுமே அவருக்கு மரணம் கிடையாது. எவ்வளவோ சாதனைகளை செய்துவிட்டு சென்றிருக்கிறார் கருணாநிதி. அவருடன் ஒப்பிடவோ, அவரது சாதனையை முறியடிக்கவோ யாராலும் முடியாது. அவர் இன்னும் கொஞ்சம் நாள் நம்முடன் இருந்திருக்க கூடாதா என்று நாம் நினைத்தால், அது நம்முடைய பேராசைதான். வலியுடனே போராடி கொண்டிருப்பதைவிட அண்ணா, பெரியாருடன் கலந்துவிட்டதை நினைத்து ஆண்டவருக்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

    Karunanidhi is a talented master: Actor Anandharaj

    கேள்வி: இவ்வளவு சாதனைகள் செய்த கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க அரசு எடுத்த நிலைப்பாடு, அதன்பின் நடந்த மக்கள் போராட்டம், அதனை தொடர்ந்து சட்டதீர்ப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    முதலில் இது தேவையில்லாத ஒன்றுதான் என எனக்கு தோன்றியது. நான் ஒரு அதிமுக-காரனாக இப்போதுவரை இருந்தாலும், அன்றைய தினம் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க தமிழக அரசு தானாகவே முன்வந்திருக்க வேண்டும். அப்படி ஒரு பிரச்சனையும் ஏற்படுத்தாமல் தானாகவே தமிழக அரசு இடம் கொடுத்திருந்தால், அதிமுக அரசுக்கு மக்கள் முன்னிலையில் நல்ல பெயர் கிடைத்திருக்கும் என்பது என் கருத்து. ஆனால் அந்த நல்ல பெயரை நீதிமன்றம் இன்று எடுத்துக் கொண்டது. அதற்காக நீதிமன்றத்திற்கும், நீதியரசருக்கும் என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    கேள்வி: மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய நீங்களும் தனிப்பட்ட முறையில் விருப்பப்பட்டீர்களா?

    நிச்சயமாக. காரணம் கடற்கரையை அதிகமாக நேசித்த தலைவர் கருணாநிதி மட்டும்தான். இந்த செய்தியை நான் யாரிடமும் கூறியது கிடையாது. கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது அவரை பார்க்க வேண்டும் என்றால் தலைமை செயலகத்துக்கோ, அவரது வீட்டுக்கோ போய் சந்திக்க வேண்டும் என்பது கிடையாது. காலை 5 மணிக்கு மெரினா பீச் போனால் அவரை பார்க்கலாம். அந்த அளவுக்கு எளிமையாக இருந்தார். நம்மையெல்லாரையும் விட கடற்கரையை நேசித்து கிடந்தார். இப்போது அதே கடற்கரையில் அவர் ஓய்வெடுப்பதும், உறங்கி கொண்டிருப்பதும் எனக்கு மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான்.

    கேள்வி: உங்களுக்கும் கருணாநிதிக்கும் உள்ள பழக்கம் பற்றி சொல்லுங்களேன்?

    நான் 1987-ம் ஆண்டு அவர் முதல்வராக இருந்த சமயம். நான திரைப்படக்கல்லூரியில் படித்து முடித்தேன். அப்போது திரைப்படக் கல்லூரி விழாவுக்கு வந்திருந்தார். அந்த ஆண்டில் திரைப்படக்கல்லூரியின் சிறந்த மாணவனுக்கான விருதினை எனக்கு வழங்கினார். நான் பெருமிதம் கொண்டு வாங்கி வந்துவிட்டேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டேன். சில காலம் கழித்து ஏவிம் நிறுவனம் சம்பந்தமான ஒரு படத்தின் நூறாவது நாள் விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் எனக்கு ஒரு பரிசு கொடுக்கிறார் கருணாநிதி. அப்போது என்னை பார்த்ததும் கேட்டார், நீங்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்தானே? என்றார். எனக்கு சிலிர்த்துவிட்டது. இது எப்படி அவருக்கு நினைவிருக்க முடியும்? ஒரு நாளில் எத்தனையோ பேரை சந்திக்க நேரிடும் முதலமைச்சருக்கு என்னை எப்படி நினைவில் வைத்து கொள்ள முடியும் என்று ஆச்சரியப்பட்டுவிட்டேன். அப்போது எடுத்து கொண்ட போட்டோவை நான் இன்னமும் பத்திரமாக வைத்துள்ளேன்.

    கேள்வி: நீங்கள் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தீர்கள். அப்போது திமுகவையும் கடுமையாக சாடி பேசினீர்கள். கருணாநிதி மீது இவ்வளவு மரியாதையும், பாசமும் வைத்த நீங்கள், அப்படி பிரச்சாரத்தின் போதெல்லாம் எதிராக விமர்சனம் செய்துவிட்டோமே என்ற வருத்தம் உங்களுக்கு இப்போது இருக்கிறதா?

    ஆமாம். வருத்தம் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் நான் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை. நான் ஒரு கட்சியை சார்ந்திருக்கிறேன். அந்த கட்சிக்கு நான் விசுவாசமாக இருந்தேன். அதனால் அரசியல் ரீதியாகத்தான் விமர்சனம் செய்தேனே தவிர, தனிப்பட்ட தாக்குதலை எப்பவுமே நடத்தவில்லை. அவரை நான் அப்பா என்றுதான் கூப்பிடுவேன். அவர் என்னை தம்பி என்றுதான் பாசத்தோடு அழைப்பார். இருந்தாலும் மேடைகளில் அவரை காயப்படுத்தியிருக்கிறேன். எனக்கு சிறந்த நடிகருக்கான விருதினை கொடுத்தது கருணாநிதிதான். தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் கொடுத்ததும் அவர்தான். இப்படி எல்லாமே எனக்கு கொடுத்து அழகுபார்த்த அவருக்கு நான் காயங்களை மட்டுமே கொடுத்திருக்கிறேன். நான் வலிகளை மட்டுமே அவருக்கு கொடுத்திருக்கிறேன். அதனால் நான் மனம்வருந்தி, அஞ்சலி செலுத்தும்போது, என் வருத்தங்களை அவரது பாதத்தில் வைத்தேன். அவர் உயிரோடு இருப்பதாக நினைத்து என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்னேன். என் மன்னிப்பை அவர் ஏற்று கொள்வார் என்றே நம்புகிறேன்.

    கேள்வி: எதிர்பாராத நேரத்தில் என்னை மேடையேற்றி அழகுபார்த்தவர் கருணாநிதி என்று ஒருமுறை பேட்டியில் நீங்கள் சொன்னதாக ஞாபகம். அது என்ன சம்பவம்? என்ன மேடை?

    ஆமாம். அது உதயநிதியின் திருமண விழா. அறிவாலயத்தில் அந்த விழா நடைபெற்றது. ஒரு நடிகர் என்ற முறையில் அந்த விழாவில் நான் கலந்து கொண்டேன். திருமண மண்டபம் சென்றவுடன் பார்த்தால், எல்லோருமே திமுகவை சேர்ந்த நடிகர்கள் உட்கார்ந்திருந்தார்கள். குறிப்பாக நெப்போலியன், பாண்டியன், சந்திரசேகர், தியாகு என இருந்தனர். அப்போது திமுகவில் இருந்த சரத்குமார்கூட அங்கு உட்கார்ந்திருந்தார். அப்போது நடிகர்கள் சார்பாக பேச வேண்டும் என்று கூறி கருணாநிதி என் பெயரை அழைத்து பேச சொன்னார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த விழாவில் நான் பேசியது மிகப்பெரிய மகிழ்ச்சிதான்.

    கேள்வி: கருணாநிதி முன் பேசியது இவ்வளவு மகிழ்ச்சி என்கிறீர்கள். அவரது பேச்சை நீங்கள் கேட்டு வியந்திருக்கிறீர்களா?

    அவர் பேச்சு என்றால் எனக்கு உயிர். முன்பெல்லாம் பனகல் பார்க்கில்தான் பொதுக்கூட்டம் நடக்கும். பெரும்பாலான திமுகவின் கூட்டம் அங்குதான் நடக்கும். பொதுக்கூட்டம் என்பதால் ஸ்பீக்கர்கள் நிறைய கட்டிவிட்டிருப்பார்கள். அந்த பேச்சை கேட்பதற்கென்றே நான் சென்றிருக்கிறேன். ஏன், நானும் விஜயகாந்த்தும்கூட அந்த கூட்டங்களுக்கு சென்றுவிடுவோம். அங்கே யாருக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக நின்று கருணாநிதி பேச்சை எத்தனையோ முறை கேட்டுவிட்டு வந்திருக்கிறோம். அதேபோல நாங்கள் காரில் செல்லும்போதுகூட கருணாநிதி பேச்சை டேப்பில் கேட்டுகொண்டே செல்வோம். இந்த பேச்சு கருணாநிதிக்கு இயற்கை தந்த வரப்பிரசாதம். அதேபோல எவ்வளவு பிரச்சனையை அவரிடம் கொடுத்தாலும் அதை உடனடியாக தீர்த்து வைக்கும் தன்மை வாய்ந்தவர். அதனால் கருணாநிதியின் குடும்பம் ஒரு வாழ்த்துக்குரிய குடும்பம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரை 95 வயது வரை பாதுகாத்து வந்ததற்கு அந்த குடும்பத்திற்கு என் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    கேள்வி: சரி கருணாநிதி பற்றி இவ்வளவு பேசும் இந்த நேரத்தில், மறைந்த ஜெயலலிதா பற்றி உங்களுக்கு ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறீங்களா?

    ஒரு வருத்தம் எனக்கு தனிப்பட்ட முறையில் இருக்கு. அது என்னவென்றால், இதேபோன்ற ஒரு குடும்பம் மறைந்த ஜெயலலிதாவுக்கு இருந்திருக்க கூடாதா? என்று ஏக்கப்பட்டிருக்கிறேன். அப்படி ஒரு குடும்பம் ஜெயலலிதாவுக்கு இருந்திருந்தால், இன்னும் சில காலம் அவர் நம்முடன் இருந்திருக்க மாட்டாரோ என்று நினைத்து வேதனைப்பட்டிருக்கிறேன். இது என் தனிப்பட்ட ஆசை. குடும்பம் என்று இருந்தால், கண்டிப்பாக அவரை பொத்தி பாதுகாப்பாக வைத்து நம்முடன் இன்னும் சில காலம் வாழ வைத்திருப்பார்களோ என்ற ஏக்கம் எனக்கு இன்று மட்டுமல்ல... என்றுமே இருக்கிறது!

    Karunanidhi is a talented master: Actor Anandharaj
    English summary
    Karunanidhi is a talented master: Actor Anandharaj
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X