For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானிய விலை மண்ணெண்ணெய் விநியோக ரத்து முடிவு பிற்போக்குத்தனமானது: கருணாநிதி, வைகோ கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மானிய விலை மண்ணெண்ணெய் விநியோகத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு பிற்போக்குத்தனமானது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் மானிய அளவைக் குறைக்கும் வகையில், ரேஷன் கடைகளில் மானியத்துடன் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விநியோகத்தை முழுமையாக நிறுத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

Karunanidhi opposes move to scrap kerosene supply through PDS

இதைப் பற்றி அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கு, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி விரைவில் கடிதம் எழுத விருப்பதாகவும் நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பா.ஜ.க. மத்திய அரசில் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அரசின் பல்வேறு துறைகளுக்கான மானியங்களைக் குறைப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, டீசல் போன்றவைகளுக்கான மானியம் கடந்த நிதி நிலை அறிக்கையில் 63 ஆயிரத்து 427 கோடி ரூபாயாக இருந்தது, தற்போது மண்ணெண்ணெய் மீதான மானியத்தைக் குறைத்து விட்டால், மத்திய அரசின் மானியம், 5 ஆயிரத்து 852 கோடி ரூபாய் குறையுமென்று கூறுகிறார்கள்.

மத்திய அரசு வழங்கும் மானியத்தின் அளவு குறையுமென்ற போதிலும், மண்ணெண்ணெயை எரிபொருளாகவும், விளக்கேற்றவும் பயன்படுத்துவோர் மிகவும் அடித்தட்டிலே உள்ள கிராமப்புற மக்கள் தான் என்பதை மனதிலே கொண்டு, அப்படிப்பட்ட ஏழையெளிய மக்களைப் பாதிக்கும் இத்தகைய பிற்போக்கு நடவடிக்கைகளைக் கை விட்டு விடுவது தான் நல்லது.

ரேஷன் கடைகளில் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசும் மத்திய அரசுக்கு இந்தக் கருத்தினை அரசின் சார்பில் வலியுறுத்த முன்வரும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

வைகோ கண்டனம்

இதேபோல் வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை மத்திய அரசு நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மானியங்களை படிப்படியாக ரத்து செய்யும் முடிவுக்கு வந்திருக்கின்றது. நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.1 விழுக்காடாக கொண்டுவர வேண்டும் என்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் சாதாரண ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் மீது கை வைத்து இருக்கின்றது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் முற்றிலுமாக ரத்து செய்வதற்கு முதல்படியாக மின் இணைப்பு பெறாத குடும்பங்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய நிதித்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கு, 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்கள் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைத்துவிட்டதாகவும், இரண்டு விழுக்காட்டிற்கு குறைவானவர்கள் மட்டுமே மண்ணெண்ணெய் எரிபொருளாக பயன்படுத்துகின்றனர் என்றும் மத்திய அரசு கூறுகிறது.

வறுமைக்கோடு பற்றிய புள்ளி விபரங்களை வெளியிட்ட மத்திய அரசு, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 29 ரூபாய்க்கு மேலும், கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 23 ரூபாய்க்கு மேலும் வருவாய் ஈட்டுவோர் வறுமைக்கோட்டுக்கு மேலே வாழ்வதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தெரிவிக்கப்பட்டது.

நடைமுறையில் சாத்தியமில்லாத மோசடியான புள்ளி விபரக் கணக்குகளை அவ்வப்போது மத்திய அரசு கூறுவது வழமையாகிவிட்டது.

தற்போது மண்ணெண்ணெய் விநியோகத்தை பங்கீட்டுக் கடைகளில் வழங்குவதை நிறுத்துவதற்கும் மத்திய நிதி அமைச்சகம் புள்ளிவிபரங்களை பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.5 கோடி குடும்பங்களுக்கு பொதுவிநியோக முறையில் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் ரூபாய் 13.70 பைசாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் தொன்னூறு விழுக்காடு பேர் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள்.

மத்திய அரசின் நடவடிக்கையால் இனி இவர்களுக்கு பங்கீட்டு கடைகள் மூலம் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவது நிறுத்தப்பட்டுவிடும். மின் இணைப்பு பெறாதவர்களுக்கு, நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய் வழங்கி மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சமையில் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவோம். மக்கள், மானியம் இல்லாமல் முழுத்தொகையை செலுத்தி சமையில் எரிவாயு உருளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பின்னர் நுகர்வோரின் வங்கிக்கணக்கில் மானிய தொகை வரவு வைக்கப்படும் என்று சாத்தியமற்ற, குழப்பங்கள் நிறைந்த திட்டத்தை கொண்டு வந்து மோடி அரசு மக்களை அலைக்கழிக்கிறது. தற்போது அதே முறையில் மண்ணெண்ணெய் வழங்குவதையும் செயற்படுத்த முயற்சிப்பது, மத்திய அரசின் நோக்கத்தை தெளிவாக பிரதிபலிக்கிறது. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மற்றும் அரிசி, கோதுமை போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்துக்கும் மானியங்களை ரத்து செய்து, பொதுவிநியோகத் திட்டத்தையே சீர்குலைக்கும் திட்டம் இவை என்பதில் ஐயப்பாடு இல்லை.

தமிழ்நாட்டிற்கு தற்போது மத்திய அரசு வழங்கும் 29,060 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய், 45 விழுக்காடு தேவையை மட்டுமே பூர்த்தி செய்து வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த மண்ணெண்ணெய் தேவைக்கு, 65140 கிலோ லிட்டர் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தி வரும் நிலையில் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவதையே நிறுத்திவிட மத்திய அரசு எடுத்துள்ள முடிவு கண்டனத்துக்குரியது. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவதை தொடர வேண்டும். சாதாரண எளிய மக்களின் நலன் கருதி மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has strongly opposed the Centre’s plan to scrap supply of subsidised kerosene through the Public Distribution System (PDS).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X