For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க கருணாநிதி கடும் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சேலம் இரும்பாலையைத் தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

சேலம் இரும்பாலைத் திட்டமும், சேதுக் கால்வாய்த் திட்டமும் நிறைவேற்றப்பட வேண்டுமென பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின் 1967 ஜூலை 23 ஆம் நாளில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்வகையில் தமிழகம் முழுவதும் 'எழுச்சிநாள்' கடைப்பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணா அவர்கள் மறைவுக்குப் பின் நான் முதல்வராக இருந்த போது, 21-3-1970 அன்று டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சேலம் உருக்காலைத் திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு இல்லாவிட்டால், ஐந்தாண்டுத் திட்ட வரைவையே தமிழ்நாடு ஏற்றுக் கொள்ள முடியாது என்று பேசினேன்.

அதன் விளைவாகத் தான் 17-4-1970 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, நான்காம் அய்ந்தாண்டுத் திட்டத்திலேயே சேலம் உருக்கு ஆலை துவக்கப்படும் என்று அறிவித்தார். அதே ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் உருக்கு ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா என் தலைமையில் நடைபெற்று, பிரதமர் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.

2,500 பணியாளர்கள்

2,500 பணியாளர்கள்

முதலில் உருட்டாலையாகத் தொடங்கப்பட்டு இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் புகழ் பெருக்கி நிற்கிறது. இதில், 300 அதிகாரிகள், 1000 நிரந்தரப் பணியாளர்கள், கூட்டுறவு சங்கம் மூலம் பணியாற்று பவர்கள் 350 பேர், 500 ஒப்பந்தப் பணியாளர் என 2,500க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், இந்த உருக்காலை மூலம் மறைமுக வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்.

தனியார்மயமாக்குவதா?

தனியார்மயமாக்குவதா?

இங்கே கார்பன், மற்றும் சாதாரண ஸ்டீல், சுருள், நாணயவில்லை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகிய பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ரெயில் பெட்டித் தொழிற்சாலைக்கு மட்டும், ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த அளவுக்கு வளர்ந்து வரும் சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் முயற்சி தொடங்கியிருப்பதாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

எஃகு உற்பத்தி கூடத்தால் கடன்சுமை

எஃகு உற்பத்தி கூடத்தால் கடன்சுமை

சேலம் உருக்காலை, தொடக்கம் முதல் லாபகரமாக இயங்கி வருகின்றது. 2003ஆம் ஆண்டு முதல் 2010வரை ஆண்டுக்கு சராசரியாக 100 கோடி ரூபாய் இலாபம் ஈட்டித் தந்துள்ளது. அதற்குப் பிறகு 2 ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் அங்கே ஒரு எஃகு உற்பத்திக் கூடம் அமைத்ததால், உருக்காலையின் கடன் சுமை அதிகமானது.

தனியார்மயமாக்க முயற்சி

தனியார்மயமாக்க முயற்சி

ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை இலாபத்தில் இயங்கி வந்த உருக்காலை, தற்போது இழப்பில் இயங்குவதாகக் கூறி, தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான முயற்சி நடைபெறுவதாகச் செய்திகள் வருகின்றன. சேலம் உருக்காலையை தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மத்திய விற்பனை மையம் கொல்கத்தா விற்கு மாற்றம் செய்யப்பட்டதால், உருக்காலையின் வாடிக்கையாளர்கள் பலர் குறைந்து விட்டார்களாம். இதைக் காரணமாகக் காட்டி, தனியாரிடம் இந்த உருக்காலையை ஒப்படைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடாமல், நிர்வாகத் திறமை மிக்க நபர்களை பணியமர்த்த வேண்டும்.

மின் உற்பத்தி நிலையம் அமைக்கலாம்

மின் உற்பத்தி நிலையம் அமைக்கலாம்

தனியாக மின் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ. 7.70 காசுகள் வரை செலவு ஏற்படும். ஆனால் உருக்காலையில் 4 ரூபாய்க்கு ஒரு யூனிட் உற்பத்தி செய்யலாம். இங்கு 120 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றை நிறைவேற்றினால், 60 மெகாவாட் உருக்காலைக்கும், 60 மெகாவாட் தமிழ்நாடு மின்சார வாரியத் திற்கும் கிடைக்கும்.

அதிமுக அரசு முட்டுக்கட்டை போட வேண்டும்

அதிமுக அரசு முட்டுக்கட்டை போட வேண்டும்


ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை சேலத்தில் தொடங்கலாம். தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் இது போன்ற பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்க்காமல் முயற்சி மேற்கொண்டது. எனவே தமிழக அ.தி.மு.க. ஆட்சியினர், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாயிற்றே என்று எண்ணாமல், சேலம் உருக்காலையைத் தனியாருக்குத் தாரை வார்க்கின்ற முயற்சிக்கு முட்டுக் கட்டை போடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கிட வேண்டுமென்றும், மத்திய அரசும் தமிழகத்தின் நலன் கருதியும், ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை எண்ணிப் பார்த்தும், இந்தப் பொதுத் துறை நிறுவனத்தின் மீது கை வைக்காமல் இருக்க வேண்டு மென்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has opposed the Centr'es move to privatise the Salem Steel Plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X