For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நமக்கு நாமே" - ஸ்டாலின் அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்... கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: நமக்கு நாமே பயணம், மு.க.ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

நமக்கு நாமே என்ற பெயரில் தமிழகத்தையே சுற்றி முடித்து விட்டார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் அவர் சுற்றி வந்து மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சென்னையில் தனது பயணத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார் ஸ்டாலின். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி தனது இணையதளத்தில் எழுதியுள்ளதாவது...

உடன்பிறப்பே

உடன்பிறப்பே

12-2-2016 அன்று காலையில் என்னுடைய உதவியாளர் நித்யா என்னிடம் வந்து தளபதி அண்ணன் இன்றோடு 234 தொகுதிகளிலும் தான் மேற்கொண்ட "நமக்கு நாமே" பயணத்தை முடிக்க விருக்கிறார். அந்தப் பயணம் முடிந்தவுடன் நேரில் உங்களைச் சந்தித்து வாழ்த்து பெற வருகிறார் என்று கூறியவுடன் அவசர அவசரமாகக் குளித்து விட்டு பொருளாளர்" வருகைக்காக "தலைவர்" நான் காத்திருந்தேன்! அப்போது என்னுடைய கவனமும் நினைவும் எதிரே இருந்த தொலைக் காட்சி பெட்டியிலே பதியவில்லை; என்னிடம் சொல்லாமலேயே 1976ஆம் ஆண்டுக்குப் போய் விட்டன.

வேட்டையாடப்பட்ட கழகத்தினர்

வேட்டையாடப்பட்ட கழகத்தினர்

1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, "மிசா" சட்டத்தின்படி கழகத்தினர் வேட்டையாடப்பட்டார்கள். கழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, இன்றைய திராவிடர் கழகத் தலைவரும், அன்றைய பொதுச் செயலாளருமான இளவல் கி. வீரமணி, விடுதலை சம்பந்தம், நடிகவேள் எம்.ஆர். இராதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பழைய காங்கிரஸ் கட்சியினர் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தனர்.

முரசொலி மாறன்.. மு.க.ஸ்டாலின்

முரசொலி மாறன்.. மு.க.ஸ்டாலின்

சென்னை மாவட்டத்தில் கைதான சிலரைக் குறிப்பிட வேண்டுமென்றால் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, நீலநாராயணன், மு.க. ஸ்டாலின், சிட்டிபாபு, ஆர்.டி. சீத்தாபதி, டி.ஆர். பாலு, அ. செல்வராசன், சா. கணேசன், சோ.மா. ராமச்சந்திரன், பழக்கடை ஜெயராமன், ஆயிரம் விளக்கு உசேன், வழக்கறிஞர் ஆர். கணேசன் என்று நீண்ட பட்டியலே உண்டு. சென்னையைப் போலவே மற்ற மாவட்டங்களிலே உள்ள கழக முன்னணியினர் எல்லாம் கைது செய்யப்பட்டுச் சிறைக் கொட்டடியில் தள்ளப்பட்டனர்.

மிசா கைதிகள்

மிசா கைதிகள்

மாநிலத்தில் மற்ற சிறைகளில் இருந்த மிசாக் கைதிகளைக் காண அவர்களது நெருங்கிய உறவினர்கள் வாரம் ஒரு முறை அனுமதிக்கப்பட்ட போதும் சென்னைச் சிறையிலே இருந்த மிசாக் கைதிகளைக் காண பெற்றோருக்கோ உறவினருக்கோ அனுமதியில்லை. முக்கிய தலைவர்கள் எல்லாம் சிறைக்குள் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்ற செய்தி மட்டும் பரவி, அந்த உடன் பிறப்புக்களின் இல்லத்தினர் என்னைச் சந்தித்து கதறினார்கள்.

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்

அதன் பிறகு காவல் துறையின் தலைமை அதிகாரியை நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாளைக்குள் சிறையில் உள்ள மிசாக் கைதிகளைக் காண அவர்களுடைய உறவினர்களுக்கு அனுமதி தராவிட்டால், சிறை வாயிலில் நான் சாகும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்வதாக அறிவித்த பிறகு தான் அனுமதி வழங்கப்பட்டது.

மாறனுக்கு ஜன்னி கண்டது

மாறனுக்கு ஜன்னி கண்டது

அந்த முறையில் தான் மாறனையும் ஸ்டாலினையும் பார்க்க நான், எனது குடும்பத்தினருடன் சிறைக்குச் சென்றேன். மாறனுக்கு உடல் நலிவு ஏற்பட்டு, "ஜன்னி" கண்டு சென்னை பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அங்கே சென்றிருந்த போது தான் செய்தி சொல்லப்பட்டது; பிறகு ஸ்டாலினைப் பார்க்க மட்டும் அனுமதித்தார்கள்.

திருமணமான புதிதில் சிறைக்குப் போன ஸ்டாலின்

திருமணமான புதிதில் சிறைக்குப் போன ஸ்டாலின்

திருமணமாகி ஒரு சில மாதங்களே முடிவுற்ற நிலையில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஸ்டாலினைச் சுற்றி சிறை அதிகாரிகள் சூழ்ந்து நிற்க, முழுக்கை சட்டை போட்டுக் கையை மூடிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் காண நேரிட்டது.

நேரி் கண்டதும் வந்த கண்ணீர்

நேரி் கண்டதும் வந்த கண்ணீர்

என்னைக் கண்டதும், தன் கண்களில் ததும்பியிருந்த கண்ணீரை வெளிவராமல் மறைத்துக் கொண்டு என் எதிரே அமர்ந்திருந்தார். "அடித்தார்களாமே; உண்மையா?" என்று கேட்டேன். "இல்லை" என்று தலையை மட்டும் ஆட்டினார். வாய் திறந்து வார்த்தைகளில் சொன்னால் கதறி அழுது விடக் கூடும் என்ற உணர்ச்சி நிலை!

அன்று சந்தித்த அதே ஸ்டாலின்

அன்று சந்தித்த அதே ஸ்டாலின்

அன்று சந்தித்த அதே ஸ்டாலினைத் தான், நான் 12-2-2016ஆம் தேதி காலையில் கோபாலபுரத்தில் சந்தித்தேன். அதுவரை என் மனதிலே நிழலாடிக் கொண்டிருந்த நினைவுகளை ஒதுக்கிவிட்டு, ஸ்டாலினை நெஞ்சார வாழ்த்தினேன்.

கன்னியாகுமரியில் தொடங்கி

கன்னியாகுமரியில் தொடங்கி

234 தொகுதிகள் - 2015 செப்டம்பர் 20ஆம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையருகே ஸ்டாலின் தொடங்கிய "நமக்கு நாமே" விடியல் மீட்புப் பயணம், 2016 பிப்ரவரி 12ஆம் தேதி தியாகராயநகரில் நிறைவடைந்துள்ளது. நடுவே 146 நாட்களில், இடையில் ஒரு சில நாட்கள் வேறு சில கழக நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு விட்டு, மற்ற நாட்களில் எல்லாம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதியையும் உள்ளடக்கி தனது பயணத்தை தம்பி ஸ்டாலின் வெற்றிகரமாக முடித்துள்ளார்.

மக்களைச் சந்தித்துள்ளார்

மக்களைச் சந்தித்துள்ளார்

தமிழகத்திலே உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளையெல்லாம் நேரடியாகக் கேட்டிருக்கிறார். இடையில் பெரு வெள்ளத்தினாலும், மழையினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று அங்கேயுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, நிவாரண உதவிகளையும் வழங்கியிருக்கிறார்.

பாராட்டாமல் இருக்க முடியாது

பாராட்டாமல் இருக்க முடியாது

அவருடைய இந்தப் பயணம் முழு வெற்றி பெற, மாவட்டக் கழகச் செயலாளர்கள் எல்லாம் அல்லும் பகலும் அயராமல் ஆற்றிய அரும் பணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால் எந்த மாவட்டக் கழகச் செயலாளரும், அந்தப் பணியைச் சுமையென நினைக்காமல், சிரமமாக நினைத்துப் பாராமல் மிகுந்த மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் அந்தப் பணியினை மேற் கொண்டார்கள் என்பதை நான் அறிவேன். இன்னும் சொல்லப் போனால், அந்தப் பயணத்தின்போது ஸ்டாலின் உடல் அளவில் அங்கெல்லாம் சென்ற போது, அவரது உணர்வுகளில் எனது நினைவுகளும், எண்ணங்களும் தான் நிறைந்திருந்தன.

மகிழ்ந்த தாய்மார்கள்.. களிப்புற்ற கூட்டத்தினர்

மகிழ்ந்த தாய்மார்கள்.. களிப்புற்ற கூட்டத்தினர்

பயணத்தின்போது, அவரைக் கண்டு மகிழ்ந்த அந்தத் தாய்மார்கள் - வழி நடுவே அவரை மறைத்துக் கை குலுக்கிக் களிப்புற்ற கூட்டத்தினர் - முக மலர்ச்சியோடு தங்களுடைய சிறிய "டீக்கடை"க்குள் அழைத்துச் சென்று, ஸ்டாலினுக்கு "டீ" வழங்கிய அந்தப் பெரிய உள்ளங்கள் - தாங்கள் பெற்ற குழந்தைகளை ஸ்டாலின் கைகளிலே கொடுத்து அவர் அந்தக் குழந்தைகளைப் பாசத்தோடு நெஞ்சார அணைப்பது கண்டு மகிழ்ந்த தாய்மார்கள் - இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.

அப்பா.. பெயர் சூட்டுங்கள்

அப்பா.. பெயர் சூட்டுங்கள்

இன்னும் சொல்லப் போனால், பயணத்திற்கு முன்பாகவே ஸ்டாலின் என்னைச் சந்தித்து, தான் இவ்வாறு ஒரு சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்து, அந்தப் பயணத்திற்கு "அப்பா! ஒரு பெயரை நீங்கள் தான் சூட்ட வேண்டும்"" என்று கேட்டுக் கொண்டார். அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை!

இரவெல்லாம் விழித்திருந்து வைத்த பெயர்

இரவெல்லாம் விழித்திருந்து வைத்த பெயர்

இந்தப் பயணத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று தான் யோசித்துக் கொண்டே இருந்தேன். அதன் பிறகு தான் "நமக்கு நாமே" என்ற பெயர் என் நினைவிலே வந்து, மறுநாள் காலையில் என்னைச் சந்தித்த ஸ்டாலினிடம் அந்தப் பெயரை எழுதிக் கொடுத்தேன். 234 சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் மூன்று கட்டங்களாகப் பயணத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. கடந்த நான்கு மாதங்களில் சுமார் 3 கோடி மக்களையாவது அவர் இந்தப் பயணத்திலே சந்தித்திருப்பார்.

ஆளுங்கட்சியினரிடம் பீதி

ஆளுங்கட்சியினரிடம் பீதி

"நமக்கு நாமே" பயணத்தைப் பற்றிய செய்திகள் தமிழக மக்களிடம் பரவி ஆளுங்கட்சியினரிடையே பீதியை ஏற்படுத்தத் தொடங்கியது. அதேநேரத்தில் உயர்ந்த இடத்திலே இருப்பவர்களும், அரசிலே உள்ள மூத்த அதிகாரிகளும் "நமக்கு நாமே" பற்றிய செய்திகளைப் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தார்கள். பயணத்தின் ஒவ்வொரு நாள் காலையிலும் ஸ்டாலின் என்னைத் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, முதல் நாள் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளை யெல்லாம் எடுத்துச் சொல்லும்போது, ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனது மெலிந்த உடல் இதையெல்லாம் தாங்கிக் கொள்ளுமா என்று எனக்கு நானே எண்ணிக் கவலைப்பட்டாலும், அதை வெளியே காட்டிக் கொண்டதில்லை.

அப்போது தோன்றாமல் இல்லை

அப்போது தோன்றாமல் இல்லை

மக்களை நேரில் சந்திக்க வேண்டும், அவர்களிடம் ஆட்சியினரின் தவறுகளை எடுத்துரைக்க வேண்டும் என்று தம்பி ஸ்டாலினுக்கு இப்போது வந்த எண்ணம் எனக்கும் அந்தக் காலத்தில் தோன்றாமல் இல்லை. 26-11-1980 அன்று திருச்செந்தூர் கோயில் வளாக விடுதியில் அறநிலையத் துறையின் உதவி ஆணையாளர் சுப்ரமணியப் பிள்ளை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அறங்காவலர்களால் படுகொலை செய்யப்பட்டு, அதற்குத் தற்கொலை என்று பெயர் சூட்டி மறைத்திட முயன்ற போது தி.மு. கழகம் போர்க் குரல் கொடுத்தது.

நான் மேற்கொண்ட நீதி கேட்டு நெடிய பயணம்

நான் மேற்கொண்ட நீதி கேட்டு நெடிய பயணம்

விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நீதிபதி பால் அவர்கள் தனது அறிக்கையிலே குறிப்பிட்ட குற்றவாளிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தி.மு. கழகத்தின் சார்பில் எனது தலைமையில் 15-2-1982 அன்று மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை கழகத் தோழர்கள் உடன் நடந்து வர "நீதி கேட்டு நெடிய பயணம்" ஒன்றை நான் மேற்கொண்டேன்.

எட்டு நாள் நடந்தேன்

எட்டு நாள் நடந்தேன்

மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை 200 கிலோ மீட்டர் தூரம் - எட்டு நாட்கள் - எட்டுப் பொதுக் கூட்டங்கள் - பல இலட்சம் மக்களைச் சந்தித்த நிகழ்வு அது! அந்தப் பயணம் மேற்கொண்ட போது மூன்றாவது நாள் காலையில் என் கால் முழுவதும் கொப்பளங்கள்.

கால் முழுவதும் கொப்புளம்

கால் முழுவதும் கொப்புளம்

என்னுடன் பயணத்தில் வந்த உதவியாளர் கொப்பளங்களைக் கண்டு கதறி, பயணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியதை நான் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. என்னுடன் பயணத்தில் வந்த மருத்துவர்கள் கொப்பளங்களுக்கு வழி நெடுக சிகிச்சை அளித்துக் கொண்டே வந்தனர். அந்த நினைவு தான் எனக்கு தம்பி ஸ்டாலின் தொலைபேசியில் பேசிய போது வந்தது.

எழுச்சியும்.. மருட்சியும்

எழுச்சியும்.. மருட்சியும்

தம்பி ஸ்டாலின் தமிழகம் முழுதும் 234 தொகுதிகளிலும் மேற்கொண்ட "நமக்கு நாமே" விடியல் மீட்புப் பயணம் நமது கழக உடன்பிறப்புகளுக்கிடையே எழுச்சியையும், மக்களிடையே நம்பிக்கை கலந்த விழிப்புணர்ச்சியையும், நடுநிலையாளர்களிடையே நல்லெண்ணத்தையும், எதிர்க் கட்சியினரிடையே மருட்சியையும், பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத்தாரிடையே ஆக்கப் பூர்வமான ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. "நமக்கு நாமே" என்ற பெயரே எல்லோருடைய இல்லங்களிலும் இரண்டறக் கலந்து விட்ட சொல்லாகியிருக்கிறது.

இது மைல் கல்

இது மைல் கல்

மொத்தத்தில் ஸ்டாலினின் இந்தப் பயணம் வெற்றிப் பயணம்; கழக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய புதுமைப் பயணம்; இந்தப் பயணம் தம்பி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமானதொரு மைல் கல்!

மனதார பாராட்டுகிறேன்.. வாழ்த்துகிறேன்

மனதார பாராட்டுகிறேன்.. வாழ்த்துகிறேன்

திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது பெற்றுள்ள எழுச்சிக்கு, அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் அடுத்தடுத்த தவறுகள் காரணம் என்றாலும், தம்பி மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட இந்த "நமக்கு நாமே" பயணத்தின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கழகத்தின் மீது பாசமும் நேசமும் கொண்டு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. கழகத்தின் இத்தகைய எழுச்சிக்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்த கழகத்தின் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலினை, அவரது நமக்கு நாமே பயணம் 234 தொகுதிகளிலும் முடிவுற்றிருக்கிற இந்த நேரத்தில் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK president Karunanidhi has praised his son and party treasurer M K Stalin of his Namakku Naame tour and recalled his memories on Stalin's earlier political journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X