For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம்.. அக்கறையற்ற மத்திய அரசு.. சீறும் கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு அக்கறையற்று இருந்ததற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி ஆகும், என்று இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தாலும்; இலங்கையின் ஆதிக் குடி மக்களான ஈழத் தமிழர் களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வந்த எண்ணிலடங்காத கொடுமைகளுக்கும், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கும் தாமதமாகவேனும் நீதியும் நியாயமும் கிடைக்கு மென்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், அதிர்ச்சி தரும் விதமாக அமைந்திருக்கிறது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நேற்று (1-10-2015) நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம்.

Karunanidhi slams Centre on UNHRC Stand in Srilanka issue

அந்தத் தீர்மானம் பற்றி இன்று வெளி வந்துள்ள 'தி இந்து' ஆங்கில நாளிதழின் தலைப்பிலேயே "U.N. body asks Sri Lanka to probe ‘rights abuses" - அதாவது "மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை; விசாரணை நடத்த வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுச் செய்தி வெளியாகியிருக்கின்றது. மேலும் அந்தச் செய்தியில், "Sponsored by the U.S., the U.K. and other countries, including Sri Lanka, the resolution called upon Colombo to establish a credible judicial process, with the participation of Commonwealth and other foreign judges, defence lawyers and authorised prosecutors and investigators, to go into the alleged rights abuses" என்று வெளி வந்துள்ளது.

அதாவது, "அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தில், இலங்கை அரசு, காமன்வெல்த் உள்ளிட்ட வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அங்கீகரிக்கப்பட்ட குற்றஞ்சாட்டுவோர் மற்றும் புலன் விசாரணை நிபுணர்கள் ஆகியோர் பங்குபெறும், நம்பகத் தன்மை உள்ள நீதி விசாரணை அமைப்பு ஒன்றை உருவாக்கி, மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும்" என்று செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தொடக்கத்தில் கொண்டு வந்த தீர்மானத்தில் இருந்த "சர்வதேச" என்ற சொல் இந்தத் தீர்மானத்தில் நீக்கப்பட்டுள்ளது. உலகத்தின் பல்வேறு விசாரணை அமைப்புகளாலும் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட இனப் படுகொலை பற்றி இந்தத் தீர்மானத்தில் எதுவும் இடம் பெறவில்லை.

மேலும் அந்தத் தீர்மானத்தில் இந்த விசாரணையை "இலங்கை" அரசே நடத்த வேண்டு மென்று குறிப்பிட்டிருப்பது, குற்றம் சாட்டப்பட்டவரிடமே குற்ற விசாரணை அதிகாரத்தை ஒப்படைப்பதற்குச் சமமாகும். நீதி விசாரணையை காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளைக் கொண்டு நடத்தினாலும், அவர்கள் இலங்கை அரசின் நேரடிப் பார்வையில் இலங்கையிலே இருந்து கொண்டு விசாரணை நடத்தினால், அதன் முடிவு எப்படியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்க இடம் வருமல்லவா? மேலும் காமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பீடத்தில் தற்போது இலங்கை தான் இருந்து வருகிறது என்பதையும் ஒதுக்கி விட முடியாது.

கொடுமையிலும் கொடுமையாக, அந்தப் போர்க்குற்றங்களைச் செய்த சிங்களப் பேரினவாத இலங்கைக்கு ஆதரவாக நம்முடைய இந்தியாவும் மவுனம் சாதித்துள்ளது. நாடற்றவர்கள் நாதியற்றவர்களாகி விட்ட நிலை தான் இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை என்ற நாட்டுக்கு ஆதரவாகத் தான் அமெரிக்காவும் இருக்கிறது, இங்கிலாந்தும் இருக்கிறது, சீனாவும் இருக்கிறது, அந்த நாடுகளோடு இந்தியாவும் இருக்கிறது.

இலங்கையில் இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரின் போது, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழு விசாரணை நடத்தியது. அந்தக் குழுவின் அறிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஜனவரியில் இலங்கை அரசின் வேண்டுகோளின்படி அறிக்கை தாக்கல் செய்வது ஆறு மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த அறிக்கை கடந்த 16-ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய அரசும் பெரும் பாதிப்புக்காளான தமிழர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டுமென்ற உள்ளார்ந்த எண்ணத்தோடு, சுதந்திரமான, நம்பகத் தன்மையுள்ள சர்வ தேச விசாரணை வேண்டும் என்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும், இந்தியாவே அதற்கானதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன் மொழிய வேண்டுமென்றும் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகமும், "டெசோ" அமைப்பும் தெரிவித்து வந்தன.

தமிழக அரசின் சார்பிலே கூட கடந்த 16-9-2015 அன்று சட்டப் பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தில் "போர் விதிகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வ தேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும். அமெரிக்கா, இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.

ஆனால் "குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது" என்பதைப் போல மத்திய அரசு தனியே தீர்மானமும் கொண்டு வரவில்லை; மாறாக இலங்கையும், அமெரிக்காவும் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தையும் ஆதரித்து விட்டது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், உலகத் தமிழ் அமைப்புகளின் எதிர் பார்ப்புகளுக்கு மாறாக நிறைவேற்றப்பட்டுள்ள நீர்த்துப் போன தீர்மானத்தையாவது இலங்கை அரசு முழு மனதோடு நேர்மையான முறையிலே நிறைவேற்றுமா என்பது பெரும் ஐயப்பாட்டுக்கு உரியது தான். ஏனெனில் இலங்கைச் சிங்கள அரசின் கடந்த கால வரலாறு யாருக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இலங்கை ராஜபக்சே அரசு, 2005 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு களை விசாரிப்பதற்காக, இலங்கை உச்ச நீதி மன்ற நீதிபதி நிஸங்க குமார உதலகாமா அவர்களைக் கொண்ட விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தது. அமைத்து மூன்று மாதங்களுக்குப் பின்னர், உதலகாமா விசாரணைக் கமிஷன் பணிகளைக் கூர்ந்தாய்வு செய்வதற்காக, சர்வ தேச அளவில் தனிச் சான்றாண்மை மிக்க 11 பேர் அடங்கிய சுதந்திரமான குழு ஒன்றும் அமைக்கப் பட்டது.

இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி அவர்கள் அந்தக் குழுவின் தலைவராக இருந்தார். ஆனால் 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்தக் குழு, சிங்கள அரசுக்கு, அரசியல் ரீதியான உறுதிப்பாடு இல்லை எனக் காரணம் கூறி தங்களுடைய பணிகளைக் கை விட்டனர்.

மீண்டும் ராஜபக்சே அரசு 2010ஆம் ஆண்டு மே மாதத்தில் "கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு" என்ற விசாரணை அமைப்பை உருவாக்கியது. 18 மாத விசாரணைக்குப் பின்னர் நல்லிணக்க ஆணைக் குழு 15-11-2011 அன்று தன்னுடைய அறிக்கையை இலங்கை அரசுக்கு வழங்கியது. எனினும் அந்த அறிக்கையின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. அதிபர் ராஜபக்சேவினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழு என்பது சர்வதேச விசாரணை எதையும் தடுப்பதற்கான உபாயமே என்று மனித உரிமைகள் தொடர்பான உலக அமைப்புகள் கருத்து தெரிவித்தன.

கடந்த காலங்களில் தமிழர்களோடு சிங்களத் தலைவர்கள் செய்து கொண்ட 14 ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படவே இல்லை என்பதோடு அவற்றுக்கு மாறான நிகழ்வுகளே இலங்கையில் சிங்களவர்களால் நடத்தப்பட்டன என்பதையும்; தற்போது இலங்கை அதிபராக இருக்கும் மைத்திரி பால சிறீசேனா அவர்கள் தனது தேர்தலுக்கு முன்பு சர்வ தேச விசாரணை வேண்டுமென்று வாக்குறுதி அளித்தவர் என்பதையும்; தற்போது நான்காவது முறையாக இலங்கைப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, 2002ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமராக இருந்த போது, நார்வே நாட்டு ஆஸ்லோ நகரில், விடுதலைப் புலிகள் உடனான பேச்சுவார்த்தை முடிவில், ஒன்று பட்ட இலங்கை நாட்டில் சிங்களர்களுக்கு என்று ஒரு மாநிலமும், தமிழர்களுக்கு என்று மற்றொரு மாநிலமும் ஆக இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்தவர் என்பதையும்; உலகத் தமிழர்கள் ஒரு போதும் மறந்து விட மாட்டார்கள்.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறையேறியுள்ள தீர்மானம் தமிழர்களுக்கு முழுமையான அளவுக்கு நிறைவையோ, நம்பிக்கையையோ தரக் கூடிய ஒன்றல்ல. ஆனால் இது பற்றி அக்கறையோடு ஆதரவாக இருந்திருக்க வேண்டிய மத்திய அரசும் தமிழர்களுக்கு உகந்த நிலை எடுக்கவில்லை என்பதையும், தமிழக அரசின் தீர்மானத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், ஈழத் தமிழர்கள் பட்டுள்ள ஆழமான காயங்களுக்கு உரிய மருந்தாகாது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has condemned the Centre's stand in UNHRC on resolution against Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X