• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூலிப்படையினர் கொட்டமடிக்கும் நகரமா சென்னை? 'ஒன்இந்தியா' செய்தியை மேற்கோள்காட்டி கருணாநிதி கேள்வி

By Veera Kumar
|

சென்னை: கூலிப்படையினர் கொட்டமடிக்கும் நகரமாக சென்னை மாறிவருகிறதா? காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். தனது அறிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட்டில் "சரமாரி கொலைகள்.. சங்கடத்தில் போலீஸ்... அச்சத்தில் மக்கள்.. இது நம்ம சென்னை!" என்ற தலைப்பில் 8-6-2016 அன்று வந்த செய்தியையும் கருணாநிதி மேற்கோள்காட்டியுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஒரு வார காலத்தில் சில ஏடுகளில் வந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் என்று பார்த்தால், 2-6-2016, நந்தனத்தில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 1 கோடி நகை, பணம் கொள்ளை. உசிலம்பட்டி அருகே அக்காள், தம்பி படுகொலை.

Karunanidhi

3-6-2016 திருச்சுழியில் திமுக ஒன்றியப் பொருளாளர் படுகொலை. 4-6-2016 தாம்பரம் பகுதியில் 3 பெண்களிடம் செயின் பறிப்பு. திருவண்ணாமலையில் 13 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை. திருவண்ணாமலை மாவட்டத்தில், மழுவம்பட்டு கிராமத்தில், பார்வையற்ற ஒருவர் மகள், 13 வயது மாணவி, அஸ்வினி பலாத்காரம் செய்து படுகொலையும் செய்யப்பட்டுள்ளார்.

6-6-2016 சோழவரம் அருகே தம்பதிகளைக் கட்டிப் போட்டி நகை கொள்ளை. 7-6-2016 அம்பத்தூர் பழ வியாபாரி வீட்டில் இரண்டரை லட்சம் கொள்ளை. சென்னை பெரியமேட்டில் நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை. அதாவது பரஸ்மல் ஜவன்ராஜ் என்ற பைனான்ஸ் அதிபர், சென்னையில் பெரியமேடு பேக்கர்ஸ் சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

8-6-2016 பட்டுக்கோட்டையில் வரதராச பெருமாள் கோவிலில் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை. ஆரணியில் 5 கடைகளில் கொள்ளை. பெரியமேடு காவல் நிலையம் அருகே தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் இளங்கோ என்பவர் வெட்டிக் கொலை. சென்னை மணப்பாக்கத்தில் 7 புதிய கார்கள் கொள்ளை. வில்லிவாக்கத்தில் பூட்டிய வீட்டில் 15 பவுன் கொள்ளை. அரியலுhர் அருகே தமிழர் நீதிக் கட்சி நிர்வாகி முருகேசன் கொலை.

9-6-2016 மாஜி டி.எஸ்.பி. வீட்டில் கோவையில் 30 பவுன் நகை கொள்ளை. வட பழனியில் வங்கி ஊழியர் நாகேஸ்வர ராஜ் படுகொலை. இந்தப் பட்டியலில் கள்ளக் காதலனுக்காக நடத்திய கொலைகள் சேர்க்கப் படவில்லை. அதையும் பார்த்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கத்தில், உயர் நீதி மன்ற வழக்கறிஞர், முருகன் என்பவர் பட்டப் பகலில், கூலிப் படையினரால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

10-6-2016 அன்று காலையில் "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேட்டில் "Is Chennai Losing Its "Safe" Tag After A String Of Brutal Killings In The City In Broad Daylight? MURDER, IN FULL PUBLIC VIEW - Gangsters now emboldened by weak Policing" (பட்டப் பகலில் தொடர்ந்து பொதுமக்கள் கண்ணெதிரே நடைபெற்ற படுகொலைகளின் காரணமாக சென்னை பாதுகாப்பான நகரம் என்று கருதப்பட்ட பெருமையை இழந்து விட்டதா? கொலை செய்யும் கூலிப் படையினர் பலவீனமடைந்து, விட்ட காவல் துறையினரினால் துணிவு பெற்று விட்டார்களா?) என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு தமிழகத்தில் முற்றி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி விரிவாக எழுதியுள்ளது.

அதே இதழில் வெளிவந்த செய்தியில், "In many cases, the main accused and co-conspirators are not identified. It could be due to corruption, inefficiency, and interference of senior officers" (அதாவது முக்கியமான குற்றவாளிகளும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் பல வழக்குகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குக் காரணம், உயர் அதிகாரிகளின் தலையீடு, திறமையின்மை மற்றும் லஞ்சம்) என்றும் பெயர் குறிப்பிடவிரும்பாத - ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக எழுதி யுள்ளது.

"ஒன் இண்டியா" இணைய தளப் பத்திரிகையில், "சரமாரி கொலைகள்.. சங்கடத்தில் போலீஸ்... அச்சத்தில் மக்கள்.. இது நம்ம சென்னை!" என்ற தலைப்பில் 8-6-2016 அன்று வந்த செய்தியில், "சென்னையில் அடுத்தடுத்து பயங்கரக் கொலைகள் நடந்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.

கிட்டத்தட்ட தினசரி ஒரு கொலை என்ற அளவில் கொலைகள் பெருகி வருவதால் மக்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் வாழும் நிலை ஏற்பட்டு வருகிறது. சமீப காலத்தில் அடுத்தடுத்து பல கொலைகள் நடந்து விட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் பிடிபட்டு விட்டனர் என்றாலும் கூட கொலைகள் நின்றபாடில்லை என்பதுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியுள்ளது.

மே 30ம் தேதி சென்னை எழும்பூரில் பிரபல பெண் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோகினி என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரது கை கால்களைக் கட்டிப் போட்டு கொன்றிருக்கின்றனர். இதுதொடர்பான குற்றவாளிகள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

ரோகினியிடமிருந்து பணம் பறிப்பதற்காக இந்தக் கொலையைச் செய்ததாக கொலையாளிகள் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கொலைக்கு சில நாட்களுக்கு முன்புதான் அதே எழும்பூர் பகுதியில் சாந்தா என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். அதில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அடுத்தடுத்து சென்னையில் கொலைகள் பெருகி வருவதால் மக்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று எழுதப் பட்டுள்ளது.

"தினமலர்" நாளேட்டிலோ "திருட்டு நிலவரம்" என்ற தலைப்பில் பறி கொடுத்தவர் யார்? எங்கே? எத்தனை மணிக்கு? எத்தனை பவுன்? எப்படி திருட்டு நடைபெற்றது? யார் விசாரிக்கிறார்கள்? என்ற விவரங்களை யெல்லாம் பெட்டிச் செய்தியாக, கட்டங்கள் கட்டி விவரமாக வெளியிட்டிருக் கிறார்கள்.

ஏன்; இன்று (11-6-2016) காலையில் வந்த செய்திகளில் சட்டம், ஒழுங்கு சம்பந்தப்பட்டவை எத்தனை தெரியுமா?

சென்னை ராயபுரத்தில் பட்டப் பகலில் 50 இலட்சம் ரூபாய் நகை, பணம் கொள்ளை. வேளச்சேரி சூப்பர் மார்க்கெட்டில் 102 சவரன் நகை கொள்ளை. அண்ணா நகரில் கூலித் தொழிலாளி வீரையா அடித்துக் கொலை

கொடுங்கையூரில் கத்தி முனையில் 6 இலட்சம் "விக்" கொள்ளை. தாம்பரம், சேலையூர், சிட்லப்பாக்கம் பகுதிகளில் ஒரு வாரத்தில் 14 பேரிடம் 64 சவரன் பறிப்பு.

இப்படித் தொடர்ந்து சென்னை மாநகரத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் கடந்த பத்து நாட்களில் மட்டும் நடந்த பட்ட பகல் படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள், செயின் பறிப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா; அது முறையாக விழிப்போடு செயல்படுகிறதா? அல்லது பொதுத் தேர்தல் பணியோடு தாங்கள் ஆளுங்கட்சிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் முடிந்து விட்டதாக அவர்கள் கருதி அரிதுயிலில் ஆழ்ந்து விட்டார்களா என்று தான் எவருக்கும் எண்ணத் தோன்றும்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள்? "தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு யாருடைய தலையீடும் இன்றி சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதால் தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாகப் பாதுகாக்கப்படுகிறது. எவ்வித அச்ச உணர்வு இல்லாமலும் தங்களது சொத்துக்களை பிறர் அபகரித்து விடுவார்களோ என்னும் பயம் இல்லாமல் வாழ்வதற்கேற்ற சூழல் தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

குற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து குறைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றெல்லாம் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தும், அந்த உறுதியைக் காப்பாற்றும் லட்சணம் இது தானா? முதல் கோணலால், முற்றிலும் கோணலாகி விடாதா?

ஆட்சியின் தொடக்கத்திலேயே சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றுவதில் இவ்வளவு பெரிய தொய்வு ஏற்பட அனுமதிக்கலாமா? சென்னை மாநகரம், கூலிப் படையினர் கட்டுப்பாடின்றிக் கொட்டமடித்துக் கொண்டாடும் நகரமாக மாறி வருகிறதா? என்ற வினாக் கணைகள் அனைவருடைய நெஞ்சத்தையும் துளைத்து வேதனைப்படுத்துவது இயல்பானது தானே? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Karunanidhi slams Chennai police for their inefficiency to curb crimes in the city and he referred 'OneindiaTamil' website news to add strengthen to his points.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X