For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோலைக்குயில் பாடும், கோலமயில் ஆடும்.. குறளின் குரலாய் ஒலித்த கருணாநிதி

Google Oneindia Tamil News

-ராஜாளி

சென்னை: தமிழினத்தின் அடையாளமாய் திகழ்கிறது திருக்குறள் என்றார் ஒருமுறை கருணாநிதி. அந்த திருக்குறளின் குரலாய் திகழ்ந்தார் கருணாநிதி. 80 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தோடு பயணித்த கருணாநிதி பெரும்பாலும் பேசியதும் எழுதியதும் திருக்குறளை பற்றியே வாழ்ந்ததும் திருக்குறளின் அடிப்படையிலேயே.

1953ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்படுகிறார் கருணாநிதி. சிறையில் இருந்தவர் அங்குள்ள சிறைக் கைதிகளுக்கு வள்ளுவரைப் பற்றி பாடம் நடத்தியதோடு அங்கு திருக்குறள் மன்றம் ஒன்றையும் ஆரம்பித்து நடத்தினார். 1963 - ம் ஆண்டு சட்டமன்றத்தில் வள்ளுவரின் படத்தை வைக்க வேண்டுமென்று குரல் கொடுதத்தன் விளைவாக 1964- ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் தமிழக சட்டசபையில் வள்ளுவரின் படத்தை திறந்து வைக்கிறார். 1966ல் கருணாநிதியின் முயற்சியால் மைலாப்பூரில் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் திருவள்ளுவர் சிலையொன்றை திறந்து வைக்கிறார். பின்னர் அண்ணாவின் தலைமையில் ஆட்சியமைந்தபோது பொதுப்பணித்துறையோடு சேர்த்து போக்குவரத்து துறையையும் கவனித்துக் கொண்டிருந்த இவரது காலத்தில் தனியார் பேருந்துகள் அனைத்தும் அர்சுமயமாக்கப் படுகிறது. அதோடு அனைத்துப் பேருந்துகளிலும் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெறச் செய்கிறார் கருணாநிதி.

Karunanidhi and Thiruvalluvar

போராட்டங்களின்போது மட்டுமல்லாது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தபின்னரும் வள்ளுவரின் புகழை தொடர்ந்து பாட அவர் தவறியதில்லை. 1969ல் அவர் முதல்வராக இருந்தபோது, தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டும் என்று உத்திரவிட்டு, அந்த நாளை, அரசு விடுமுறை நாளாக அறிவிக்கிறார். ஆண்டுதோறும் தமிழக காவல்துறையினரின் நன்னடத்தையை பாராட்டி பதக்கங்கள் வழங்குவதுண்டு. அந்தப் பதக்கத்தில் திருவள்ளுவர் திருவுருவம் இடம்பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்.

ஒரு நாள் சட்டசபையில் முதல்வர் கருணாநிதியிடம் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியை சார்ந்த அனந்தநாயகி திமுக ஆட்சியில் பேருந்துகளில் திருவள்ளுவர் படங்களை வைத்து, திருக்குறள்களை எழுதியுள்ளீர்கள் அதில் நான் படித்த ஒரு குறள், 'யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு', என்று இருந்தது. இது அந்த பேருந்தின் ஓட்டுநருக்கா அல்லது நடத்துனருக்கா அல்லது பயணிகளுக்கா?", என்றுக் கிண்டலாகக் கேட்க, கருணாநிதி உடனடியாக எழுந்து, "அம்மையார் அனந்த நாயகி அவர்கள், 'யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு', என்ற திருக்குறள் யாருக்குப் பொருந்தும் என நல்ல கேள்வியைக் கேட்டிருக்கிறார். நாக்கு யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் அக்குறள் பொருந்தும்", என்று பதில் கூறுகிறார்.

பின்னர் 1973 -ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 27 ம் நாள் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வள்ளுவருக்கு கோட்டம் ஒன்று அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். விரைந்து கட்டி எழுப்பப்பட்ட கோட்டம் 1976-ம் ஆண்டு முடிவடைகிறது. திறப்பு விழாவுக்கு நாளும் குறிக்கப்படுகிறது. ஆனால் அப்போது மத்திய அரசால் அவரசநிலை பிரகடனப் படுத்தபட்டதால் திமுக ஆட்சி அகற்றப்படுகிறது. அதோடு வள்ளுவருக்காக அவர் கட்டிய கோட்டத்தை அவரால் திறந்து கூட வைக்க முடியவில்லை. அந்தக் கோட்டத்தை அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி திறந்து வைக்கிறார். பார்வையாளராக விழாவில் கலந்து கொள்ளாமல் விழாவை புறக்கணிக்கிறார் கருணாநிதி. இறுதியில் அந்த கட்டிடத்தை அவர்தான் எழுப்பினார் என்ற கல்வெட்டு கூட அங்கிருந்து அகற்றப்படுகிறது. தற்போது அந்த கட்டிடம் கருணாநிதியால் கட்டப்பட்டது என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இன்றி காணப்படுகிறது.

அவர் ஆட்சியில் இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா மாளிகைகளிலும், விடுதிகளிலும் திருவள்ளுவர் படம் இருக்க வேண்டும், திருக்குறள் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்று உத்திரவிட்டார்

அதன்பிறகு 1989 ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு வானுயர சிலை ஒன்றை நிறுவ திட்டமிடுகிறார். அப்போது ஆட்சி மாற்றம் நடைபெறுகிறது அதனால் அந்த திட்டமும் கிடப்பில் போடப்படுகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி 1996-ம் ஆண்டு சிலை அமைக்கும் பணியை மீண்டும் துவக்குகிறார். சிலையை வடிவமைக்கும் பொறுப்பு பிரபல சிற்பி கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்படுகிறது. வெவ்வேறு இடங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று இரு நூற்றாண்டுகள் சங்கமிக்கும் 2000 ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் வள்ளுவரின் சிலையை திறந்து வைத்தார் கருணாநிதி.

கன்னியாகுமரியில் வைக்கப்பட்ட சிலை அறத்துப் பாலின் 38 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலையின் பீடம் 38 அடி உயரத்திலும், பொருட்பாலையும், இன்பத்துப் பாலையும் குறிக்கும் வகையிலும் 95 அதிகாரங்கள் என்பதையும் நினைவு படுத்தி 95 அடி உயரத்திலும் நிறுவப்பட்டுள்ளது. அறத்தின் மீதே பொருட்பாலும், இன்பத்துப் பாலும் இருத்தல் வேண்டும் என்ற பொருளில் இதை நிறுவியுள்ளார் கருணாநிதி.
இந்தச் சிலையை பற்றி குறிப்பிட்ட அவர் 'சோலைக்குயில் பாடும், கோலமயில் ஆடும், மோனத்தவமிருக்கும், வானத் திருமேனி, வண்ணப்பொடி தூவும் வாணவில்லாய் வளையும், நீலகடல் ஓரம் நித்தம் தவம் புரியும், குமரியல்லோ சென்றோம், குதிகுதித்து நின்றோம், இங்கு வான்முட்டும் சிலையொன்று வள்ளுவருக்கு அமைத்துள்ளோம்', என்று குதூகலப்படுகிறார். அதேபோல, "சமத்துவப் பேரொலியாய், சமுதாயப் புரட்சி எனும் தத்துவமாய், பெருஞானியாய், மகத்துவம் மிகக்கொண்ட மனிதகுல திருவிளக்காய், பூமிக்கே அளித்து இருக்கும் புத்தெழுச்சி மிக்கப் புனிதன் தந்த இந்தத் திருக்குறள்", என்றுப் பெருமையோடு, குறிப்பிட்டுள்ளார்

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டு ஆண்டுகள் 18 தாண்டியும் அது திறக்கப்படாமலேயே இருக்கிறது. அப்போது கர்நாடகாவை எடியூரப்பா தலைமயிலான அரசு ஆண்டுகொண்டிருக்கிறது. அங்கு சென்ற கருணாநிதி திருவள்ளுவர் சிலையை திறக்க வேண்டுகோள் வைக்க எடியூரப்பாவும் ஒரு வேண்டுகோளை கருணாநிதியிடம் வைக்கிறார். சென்னையில் கர்னாடக கவிஞர் சர்வக்ஞரின் சிலையை நிறுவ வேண்டும் என்று, உடனடியாக ஏற்றுகொண்ட கருணாநிதி 2009 ம் ஆண்டு இரு சிலைகளையும் திறக்க ஏற்பாடு செய்கிறார். இப்படி பெங்களூருவிலும் வள்ளுவனுக்கு சிலை திறந்ததோடு இரு மாநில உறவுக்கும் வழி கோலினார் கருணாநிதி.

குறளுக்கு கதை சொல்லி ஓவியமும் தீட்டி அதை குறளோவியம் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார் கருணாநிதி. தினமணிக்கதிர், குங்குமம். முரசொலி போன்ற இதழ்களில் அவர் எழுதிய திருக்குறள் கதைகளை தொகுத்து 1985 ம் ஆண்டு வெளியிட்டார். குறளோவியம் கண்ட கருணாநிதி 1330 குறள்களுக்கும் உரை எழுதி அதை திருக்குறள் கலைஞர் உரை என்ற நூலாக 1996 -ம் ஆண்டு வெளியிட்டார்.

இப்படி தனது பேச்சு எழுத்து வாழ்வியல் முறை என்று அனைத்திலும் குறளின் குரலாய் ஒலித்த கருணாநிதி சென்னை பாரிமுனை என் எஸ் சி போஸ் சாலையில் உள்ள ஒரு அரசு கட்டிடத்திற்கும் குறளகம் என்றே பெயர் வைத்துள்ளார். ஆக திருக்குறள் இருக்கும் வரை குறளின் குரலாய் ஒலித்த கருணாநிதியின் குரலும் இருக்கும்

English summary
Karunanidhi was a ardent follower of Thiruvalluvar. He built the giant statue for Valluvar at Kanniyakumari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X