For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தியைப்போல தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளிலும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: கருணாநிதி வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: குஜராத்தியைப்போல தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளிலும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி- பதில் அறிக்கை விவரம்:

கேள்வி: குஜராத்தியைப்போல தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளிலும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வை நடத்த வேண்டுமென மத்திய அரசை கல்வியாளர்கள் வலியுறுத்தியிருக்கிறார்களே?

பதில்: ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுதவேண்டும். ஜே.இ.இ. நுழைவுத் தேர்வானது, மெயின், அட்வான்ஸ்டு என இரண்டு நிலைகளை உள்ளடக்கியது. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. கல்லூரிகளில் சேர வேண்டுமானால், ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு தேர்ச்சியே போதுமானது.

குஜராத்தி மொழியில்...

2016ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு வருகிற ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படவுள்ளது. இதுவரையில், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. தற்போது முதல் முறையாக குஜராத் மாநிலத்திலும், டாமன் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் கூடுதலாக குஜராத்தி மொழியிலும் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதர மொழிகளிலும்...

இதர மொழிகளிலும்...

குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்குத் தரப்படும் இந்தச் சிறப்புச் சலுகை, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கும் வழங்கப்படவேண்டும். மத்திய அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

நிவாரண முறைகேடு

நிவாரண முறைகேடு

கேள்வி : சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பெருமழை பெய்ததைப் போலவே, தென் மாவட்டங்களிலும் தற்போது கனமழை பெய்து வருவதாகவும், அந்த மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளதே?

பதில் : மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் மிகப் பெரிய அளவுக்கு தவறுகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டுள்ளன. அதிகாரிகளுக்குப் பதிலாக ஆளுங் கட்சிக்காரர்கள்தான் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலையே எடுப்பதாகவும், அவர்கள் அவ்வாறு தயாரித்துக் கொடுக்கும் பட்டியலைத்தான் அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதாகவும், ஆளுங்கட்சியினர், உண்மையாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை எடுப்பதற்குப் பதிலாக, தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களின் பட்டியலை எடுப்பதாகவும் பல இடங்களிலிருந்து தெரிவிக்கிறார்கள்.

பிற மாவட்டங்களுக்கும்...

பிற மாவட்டங்களுக்கும்...

மேலும் பெருமழை பெய்து வரும் தென் மாவட்டங்களில் உள்ள மக்களும், தங்களுக்கு நிவாரணத் தொகை வேண்டுமென்று சில நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே அந்த மாவட்டங்களையும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இணைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் உதவிட தமிழக அரசு முன் வரவேண்டும்.

கடலூர் முறைகேடு

கேள்வி : அ.தி.மு.க.வினர் முதலமைச்சருக்கு துதி பாடுவதைவிட ஒருபடி மேலே சென்று ஒருசில மாவட்ட ஆட்சியர்கள் முதல் அமைச்சரைப் பாராட்டிக் கொண்டே தங்கள் தவறுகளை மறைத்துக் கொள்வதில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறதே?

பதில்: சேலம் மாவட்ட ஆட்சியர், அண்மையில் பெய்த பெருமழையே, "அம்மாவின் ஆணைக்கிணங்க" பெய்ததாக செய்தியாளர்களிடம் கூறியதைப் பற்றி முன்பே ஏடுகளில் செய்தியாகப் பார்த்தோம். தற்போது கடலூர் மாவட்டம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாப்பாடு அளித்த வகையில் 40 கோடி ரூபாயும், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக 60 கோடி ரூபாயும், மொத்தம் 100 கோடி ரூபாய் கடந்த ஒரு மாதத்தில் செலவிடப்பட்டதாக அந்த மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்ததாகவும், அந்தச் செலவுகளுக்கு முறையான கணக்கு இருக்கிறதா என்று அரசியல் கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன.

செம்மொழி தமிழாய்வு மையம்

கேள்வி : தி.மு.க. ஆட்சியில் தாங்கள் பெரு முயற்சி எடுத்துக் கொண்டு வந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முடக்கப்பட்டுக் கிடப்பதாக "தினமணி" நாளிதழே செய்தி வெளியிட்டிருக்கிறதே?

பதில்: தி.மு.கழக ஆட்சியில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு, 2008ஆம் ஆண்டு "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்" பதிவு செய்யப்பட்டு, 2009ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் நேரடிப் பார்வையில், நிதி உதவியில் செயல்படத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் சார்பில் வெளிவந்த "செம்மொழி" இதழ் 2011ஆம் ஆண்டு அக்டோபரில் நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் நிதி வழங்கி வந்த மத்திய அரசு, கடந்த நிதியாண்டு முதல் ஐந்து கோடி ரூபாயாகக் குறைத்துவிட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய பதவி இடங்களான "இயக்குனர்", "பதிவாளர்" போன்றவைகளுக்கு நிரந்தரமாக யாரையும் நியமிக்காமல், பொறுப்பு பதவி இடங்களாகவே இருந்து வருகிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்காக சென்னை பெரும்பாக்கத்தில் 6.71 எக்டேர் நிலம் கழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மத்திய அரசின் நிதி 3 கோடி ரூபாயிலிருந்து சுற்றுச் சுவர் மட்டும் எழுப்பப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளாக கிடப்பில்...

5 ஆண்டுகளாக கிடப்பில்...

அதன் பிறகு 250 கோடி ரூபாயில் கட்டடங்கள் எழுப்பும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியும், கடந்த ஐந்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்தப் பணியும் நடக்கவில்லை என்றும், அதுபற்றி அ.தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் தமிழறிஞர்கள் கூறுகிறார்கள். ஜெயலலிதா அரசு தமிழுக்காக ஆற்றிய சேவைகளில் இதுவும் ஒன்று போலும்! இவற்றையெல்லாம் மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேதனை அளிக்கிறது.

இவ்வ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has urged the Centre Should permit IIT entrance examinations in all languages like Hindi, English and Gujarati.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X