For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏன் மூட வேண்டும் நோக்கியாவை?.. கருணாநிதி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: நோக்கியா தொழிற்சாலை பிரச்சினை கடந்த இரண்டாண்டு காலமாக பேசப்பட்டு வரும் நிலையில் அ.தி.மு.க. அரசு அந்த நிர்வாகத்தினரை அழைத்துப் பேசி இந்தத் தொழிற்சாலை தொடர்ந்து நடைபெறுவதற்கும், அங்கே பணியாற்றிய தொழிலாளர்களின் வேலை போகாமல் பார்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?

அங்கே பணியாற்றிய தொழிலாளர்கள் எல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அல்லவா? அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு இல்லையா? இனியாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு, நோக்கியா ஆலைத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியிலே ஈடுபடுவார்களா என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.

நோக்கியா ஆலை மூடப்படுவதை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார். அதிலிருந்து...

ஆளுங்கட்சி காதில் விழுகிறதா

ஆளுங்கட்சி காதில் விழுகிறதா

சென்னை அருகே, திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலை, வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் மூடப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ள செய்தி, தொழிலாளர்களிடமும் எதிர்க் கட்சிகளிடமும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்ற போதிலும், அது பற்றி தமிழகத்தை ஆளுங்கட்சி ஏதாவது காதில் போட்டுக் கொண் டிருக்கிறதா என்றால் இல்லை என்றே வேதனையோடு கூற வேண்டியுள்ளது.

தம்பி தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது

தம்பி தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது

உலகின் மிகப் பெரிய மொபைல் போன் உற்பத்தி ஆலையாக, சென்னை அருகே, திருப்பெரும்புதூரில் 2005ஆம் ஆண்டு நோக்கியா ஆலை தொடங்கப்பட்டது. தம்பி தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த போது, பெரு முயற்சி செய்து, தமிழக அரசின் ஒத்துழைப்போடு இந்தத் தொழிற் சாலையை தமிழகத்திற்குக் கொண்டு வந்தார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

இந்தியாவில் 93 கோடி கைபேசி உபயோகிப்பாளர்களின் தேவைகளில் 60 சதவிகிதத்தை நோக்கியா நிறுவனம்தான் நிறைவு செய்து வந்தது. மாதம் ஒன்றுக்கு ஒன்றரை கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்தத் தொழிற்சாலையில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.

இளம் பெண்களுக்கு அதிக வாய்ப்பு

இளம் பெண்களுக்கு அதிக வாய்ப்பு

குறிப்பாக 60 சதவிகிதத்திற்கு மேல் இளம் பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டனர். இலாபகரமாக இயங்கி வந்த இந்தத் தொழிற் சாலையை, கடந்த ஏப்ரலில் உலகின் கணினி மென்மொருள் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியா மட்டுமல்லாமல், பிற நாடுகளில் இருந்த நோக்கியா நிறுவனங்களையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது.

விருப்ப ஓய்வு

விருப்ப ஓய்வு

நோக்கியா தொழிற்சாலையில் நிரந்தரத் தொழி லாளர்கள் 8,500 பேர்; பயிற்சியாளர்கள் 6,000 பேர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் 6,000 பேர். இந்த நிறுவனத்தின் சார்பு நிறுவனமான "பாக்ஸ்கான்" தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் 7,000 பேர். இவர்களில் 6 ஆயிரம் பேருக்கு வெளியே தெரியாமலேயே விருப்ப ஓய்வு கொடுத்து, சில மாதங் களுக்கு முன்பாக அந்த நிறுவனம் வெளியேற்றி விட்டது.

நிரந்தரமாக மூட முடிவு

நிரந்தரமாக மூட முடிவு

அதற்குப் பிறகு பணியாற்றி வந்தவர்களையும் இப்போது வேலை இழக்கச் செய்கின்ற அளவுக்கு அந்தத் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையை மூடுவது பற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நோக்கியா மொபைல் போன் உற்பத்தி ஆலையை, கடந்த ஏப்ரல் மாதம் முதல், மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இதில் திருப்பெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையும் ஒன்று. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல் போன்களுக்கான ஆர்டரை அளிக்கவில்லை. ஆர்டர் இல்லாத நிலையில், திருப்பெரும்புதூர் ஆலை, நவம்பர் 1ஆம் தேதி முதல் மூடப்படுகிறது.

நோக்கியாவின் விளக்கம்

நோக்கியாவின் விளக்கம்

மொபைல் போன்கள் வாங்க, நோக்கியா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம், நவம்பர் 1ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளதால், ஆலையை மூடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் நிறுவனத்தின் பங்குதாரர்கள், தொழிலாளர் ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

அனுமதி பெற வேண்டு்

அனுமதி பெற வேண்டு்

ஒரு நிறுவனத்தை மற்றொரு வருக்கு விற்றாலோ அல்லது வேறு நிறுவனம் வாங்கினாலோ இந்தியக் கம்பெனி சட்டத்தின் அனுமதியைப் பெற வேண்டும். கம்பெனி லா போர்டு மத்திய, மாநில அரசுகளின் தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் ஒரு நிறுவனத்தை விற்கவோ, வாங்கவோ இயலாது. 2013ஆம் ஆண்டு ஜனவரியில் இந்திய வருமான வரித் துறை நோக்கியா தொழிற் சாலையில் சோதனை நடத்தியது. இந்திய வருமான வரித்துறைக்கு, சென்னை நோக்கியா நிறுவனம், 21 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதை செலுத்த வேண்டுமென்று சம்மன் அனுப்பியது. அந்தத் தொகையை தவணை முறையில் கட்ட சலுகையும் வழங்கியது.

கணக்குகள் முடக்கம்

கணக்குகள் முடக்கம்

ஜூன் 2013இல் நோக்கியா நிறுவனம் 700 கோடி ரூபாயை முதல் தவணையாக இந்திய வருமான வரித் துறைக்குச் செலுத்தியது. செப்டம்பர் 2013இல் நோக்கியா நிறுவனம் இந்தியாவில் உள்ள தங்களது தொழிற்சாலை, சேவை மற்றும் அனைத்துச் சொத்துக்களையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அமெரிக்க டாலர் 7.7 பில்லியன், அதாவது இந்திய மதிப்புப்படி 47 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப் போவதாக அறிவித்தது. எனவே வருமான வரியை செலுத்தும் வரை சென்னை நோக்கியா தொழிற்சாலையின் சொத்துக்கள் மற்றும் கணக்குகளை முடக்கியது. அதை எதிர்த்து நோக்கியா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

நிபந்தனகளுடன் அனுமதி

நிபந்தனகளுடன் அனுமதி

டெல்லி உயர் நீதிமன்றம் நோக்கியா நிறுவனத்தின் கணக்குகளை மட்டும் ரிலீஸ் செய்ய உத்தரவிட்டது. சொத்துக்களை அல்ல. டிசம்பர் 2013ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோக்கியா நிறுவனத்தின் சொத்துக் களையும் ரிலீஸ் செய்து மைக்ரோசாப்ட் நிறுவனத் திற்கு விற்க சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. அந்த நிபந்தனைகளுக்கு எதிராக பிப்ரவரி 2014இல் நோக்கியா நிறுவனம் உச்ச நீதி மன்றத்தை அணுகியது. நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய தடைவிதிக்கக் கூறி மார்ச் 2014 அன்று இந்திய வருமான வரித் துறையும், உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

சட்டச் சிக்கல்கள்

சட்டச் சிக்கல்கள்

மேலும், தமிழக வணிக வரித் துறைக்கு 2,400 கோடி ரூபாய் நோக்கியா நிறுவனம் விற்பனை வரி செலுத்த வேண்டும் என்று வணிக வரித் துறை நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்தச் சட்ட சிக்கல்களாலும், சென்னை நோக்கியா நிறுவனம் செய்து கொண்ட விற்பனை ஒப்பந்தம் முடங்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்து கொண்ட விற்பனை ஒப்பந்தம் முடங்கியதால், நோக்கியா நிறுவனம், மொபைல் போன் உற்பத்தியை படிப்படியாகக் குறைத்தது. அதைத் தொடர்ந்துதான் நிரந்தர ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்து தொழிலாளர்களை வலியுறுத்தியபோது, 7 ஆயிரம் ஊழியர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள். 1,600 தொழிலாளர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

போராட்டத்திற்குப் பலன் இல்லை

போராட்டத்திற்குப் பலன் இல்லை

2014 ஏப்ரல் 25ஆம் தேதியன்று மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கும் முடிவைக் கைவிட்டது. அதைத் தொடர்ந்துதான் நோக்கியா நிறுவனம் தங்களது தொழிற்சாலையை நவம்பர் மாதம் முதல் மூடப் போவதாக அறிவித்துள்ளது. அதை எதிர்த்து நோக்கியா தொழிலாளர்கள் நடத்திய போராட்டத் திற்கு பலன் ஏற்படவில்லை. தற்போது எஞ்சியிருக்கும் 1,100 தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பும் முயற்சியிலே உற்பத்தியை நிறுத்தி வைப்பு என்ற போர்வையில் நிறுவனத்தை மூட முயன்றுள்ளது.

ஒரு லட்சம் பேருக்கு வேலை இல்லை

ஒரு லட்சம் பேருக்கு வேலை இல்லை

நோக்கியா தொழிற்சாலைகள் மாத்திரமல்ல; மேலும் பல நிறுவனங்கள் தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து மூடப்பட்டதின் காரணத்தினால் சுமார் ஒரு இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மின் பற்றாக்குறை, அரசின் தவறான அணுகுமறை, தொழில் துறை அக்கறை கொள்ளாதது, தொழிலாளர் உறவு முறை சரியில் லாமல் இருப்பது போன்ற அரசின் அலட்சியப் போக்கினால், தொழிற்சாலை மூடல், தொழி லாளர்கள் வேலை இழப்பு என்பது இந்த ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

துயரங்களைக் கொட்டி

துயரங்களைக் கொட்டி

நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் எல்லாம் தங்கள் துயரத்தைக் கொட்டி பேட்டி கொடுத்துள்ளார்கள். இந்தத் தொழிற்சாலை மூடப்படுவதால் அதைச் சார்ந்துள்ள நிறுவனங்களும் மூடப்படக் கூடுமென்றும், அங்கே பணியாற்றும் அலுவலர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தொழிற்சாலை மூடப்படு வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.

வழக்குத் தொடருவோம்

வழக்குத் தொடருவோம்

நோக்கியா பொது தொழிலாளர் சங்க கவுரவத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் சவுந்தரராஜன்,சட்டத்திற்குப் புறம்பாக நோக்கியா நிர்வாகம் அறிவித்துள்ள ஆலை மூடலை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்றும், ஆலையை மூடுகிறோம் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதிலிருந்து தப்பிக்க, "உற்பத்தி நிறுத்தி வைப்பு" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து போராடும் கம்யூனிஸ்டுகள்

தொடர்ந்து போராடும் கம்யூனிஸ்டுகள்

நோக்கியா தொழிற்சாலையில் தொழிலாளர்கள் நலம் பேணுவது குறித்து நீண்ட நாட்களாக மார்க்சிஸ்ட் கட்சிக்கும், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவைக்கும் இடையில்கருத்து மாறுபாடுகள் உண்டு என்ற போதிலும், இரண்டு தொழிற் சங்கங்களுமே அந்தத் தொழிற்சாலை மூடப்படக் கூடாது என்பதிலும், அங்கே பணியாற்றும் தொழிலாளர் களின் நலம் பேணப்பட வேண்டும் என்பதிலும் தனித்தனியாகப் போராடி வருகிறார்கள்.

திமுக சார்பில் போராட்டம்

திமுக சார்பில் போராட்டம்

நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்கக் கோரி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்ற 17-10-2014 வெள்ளிக் கிழமை காலை 10 மணி அளவில் திருப்பெரும் புதூரில் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவைச் செயலாளர் மு. சண்முகம் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

தமிழக அரசு என்ன செய்கிறது

தமிழக அரசு என்ன செய்கிறது

ஆனால் தமிழகத்தில் அரசு என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அந்த அரசின் சார்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்ட போது மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெற்ற இந்நிறுவனம், ஆலையை நிறுத்தும்போது மட்டும் மத்திய, மாநில அரசுகளைக் கேட்க வேண்டாமா? இந்தத் தொழிற்சாலையை தொடர்ந்து நடத்துவதற்கு என்ன பிரச்சினையை அந்த நிறுவனம் சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? மிக இலாபகரமாக நடைபெற்ற இந்தத் தொழிற்சாலையினை ஏன் மூட வேண்டும்?

அரசே கையகப்படுத்தலாமே

அரசே கையகப்படுத்தலாமே

அங்கே பணியாற்றிய தொழிலாளர்களின் வருங்காலத்தை உத்தேசித்துப் பார்த்து, அந்தத் தொழிற்சாலையை தமிழக அரசே கையகப்படுத்தி, தொடர்ந்து நடத்தலாம் அல்லவா? அதைப்பற்றியெல்லாம் அந்தத் துறையின் அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டாரா? தொழிலாளர்களில் ஒருவர், தொழிற்சாலை வாசலிலேயே இந்த ஆலை மூடுவதைக் கண்டித்து தற்கொலை செய்து கொள்ள முயன்று, நல்ல வேளையாகக் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளாக என்ன செய்தார்கள்

இரண்டு ஆண்டுகளாக என்ன செய்தார்கள்

கடந்த இரண்டாண்டு காலமாக இந்தப் பிரச்சினை பேசப்பட்டு வரும் நிலையில் அ.தி.மு.க. அரசு அந்த நிர்வாகத்தினரை அழைத்துப் பேசி இந்தத் தொழிற்சாலை தொடர்ந்து நடைபெறுவதற்கும், அங்கே பணியாற்றிய தொழிலாளர்களின் வேலை போகாமல் பார்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? அங்கே பணியாற்றிய தொழிலாளர்கள் எல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அல்லவா? அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு இல்லையா? இனியாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு, நோக்கியா ஆலைத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியிலே ஈடுபடுவார்களா என்றுதான் நாடு எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has urged the TN govt to take some action in Nokia issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X