For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெருமாள்முருகன் விவகாரம்...தமிழக அரசு மீதான உயர்நீதிமன்ற விமர்சனத்துக்கு கருணாநிதி வரவேற்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: எழுத்தாளர் பெருமாள்முருகனின் 'மாதொருபாகன்' நூலுக்கான தடையை நீக்கியும் இந்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்தும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் வடிவிலான அறிக்கை விவரம்:

கேள்வி:- "மாதொருபாகன்" நாவலுக்கு தடை விதிக்க முடியாது என்றும், எழுத்தாளர்களின் உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அளித் துள்ள உத்தரவு பற்றி

பதில்: வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்புகளில் அதுவும் ஒன்றாகும். எழுத்தாளர் பெருமாள்முருகன், "மாதொருபாகன்" என்ற நாவலை எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தை எதிர்த்து, சிலர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு, 12-1-2015 அன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த் தைக் கூட்டத்தில் பெருமாள் முருகன் தரப்பில், அவர் மட்டுமே பங்கேற்றார். பேச்சுவார்த்தை முடிவைத் தொடர்ந்து பெருமாள்முருகன், தான் எழுதுவதையே நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார்.

Karunanidhi welcomes HC verdict in favour of Perumal Murugan

இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச. தமிழ்ச் செல்வன் நாமக்கல் கூட்ட முடிவினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கினை விசாரித்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் அவர்களும், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா அவர்களும் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

அந்தத் தீர்ப்பில், "ஒரு நாவலைப் படிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்களது விருப்பம். அந்த நாவல் பிடித்தால் படிக்கட்டும். பிடிக்கவில்லை என்றால் அதைத் தூக்கி எறியட்டும். ஆனால் ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக் கூடாது என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கட்டுப்படுத்தவோ, தீர்மானிக்கவோ முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேச்சுரிமை, கருத்துரிமைகளை வழங்கியுள்ளது. இந்த உரிமைகளுக்குக் குந்தகம் ஏற்படாமல் பாதுகாப்பது அரசின் கடமை. குறிப்பாக எழுத் தாளரின் உரிமையைப் பாதுகாப்பது அரசின் முக்கியக் கடமையாகும்.

இந்தக் கடமையை மாதொருபாகன் நாவல் பிரச்சினையில் அரசு செய்யத் தவறி விட்டது. அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமைகளைப் பாதுகாக்கவில்லை" என்றெல்லாம் தங்களது தீர்ப்பில் பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தி யிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

கேள்வி: வரும் 13ஆம் தேதி, தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சேலம், விழுப்புரம் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித் திருக்கிறார்களே?

பதில்: தமிழகத்தில் 2012-2013ஆம் நிதியாண்டில் பால் உற்பத்தி ஒரு கோடியே 54 இலட்சம் லிட்டர். தற்போது இது 2 கோடியே 5 இலட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.

ஆவின் பால் கொள்முதல் 2013-ல் 24 லட்சம் லிட்டராக இருந்தது. தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், ஆவின் நிறுவனம் பால் கொள்முதலைக் குறைத்து வருகிறதாம்.

சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் 31 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த நிலையில், தற்போது 25 இலட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 17 ஒன்றியங்களில் சேலம், விழுப்புரம் ஒன்றிய உற்பத்தியாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், "கோட்டா சிஸ்டம்" அமல்படுத்தி, ஒரு லிட்டர் பாலுக்கு 200 மி.லி., முதல் 300 மில்லி லிட்டர் வரை உற்பத்தியாளர்களிடம் திரும்ப வழங்குகின்றனர்.

இதன் காரணமாக போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம் என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். உற்பத்தி ஆகும் பால் முழுவதையும் கொள்முதல் செய்வோம் என்று அறிவித்துவிட்டு, பால் உற்பத்தியாளர்களை இப்படி வஞ்சிப்பது நியாயமே அல்ல!

ஆனால் இவர்களின் பிரச்சினைகளையெல்லாம் பேசித் தீர்ப்பதற்கு நாட்டில் மக்கள் நலனில் அக்கறையுள்ள ஓர் அரசு வேண்டுமே? பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதில் ஆர்வமுள்ள முதல் அமைச்சர் வேண்டுமே? பிரச்சினையை எடுத்துரைக்கும் தைரியமுள்ள அமைச்சர் வேண்டுமே? தமிழகத்தில் இருக்கிறதா? பால் உற்பத்தியாளர் உள்ளிட்ட தமிழக மக்களின் விரக்தியைக் கண்டு வேதனைதான் மிஞ்சுகிறது!

English summary
DMK leader Karunanidhi welcomed the Madras HC order on Tamil writer Perumal Murugan's novel issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X