For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Exclusive: குறள் வழி வாழ்ந்தவர் கலைஞர்.. நடிகர் ராஜேஷ் நெகிழ்ச்சி

திருக்குறளை கடைப்பிடித்தவர் கருணாநிதி என ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் அங்கம்தான் கருணாநிதி- நடிகர் ராஜேஷ்- வீடியோ

    சென்னை: ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் அங்கம்தான் கருணாநிதி என்று நடிகர் ராஜேஷ் பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

    நடிகர் ராஜேஷ்!! தொழிலதிபர், எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர், ஆராய்ச்சியாளர்... தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை இரு முறை வென்றவர்... மிக நுட்பமான படைப்பாளி!

    Karunanidhi will not postpone anything: Actor Rajesh

    உலக அரங்கில் எந்த மூலையில் நிகழ்ந்த அரசியலாகட்டும், சினிமாவாகட்டும், பிற கலைப்படைப்பாகட்டும், அவற்றை பற்றி ஆழமாக, தீர்க்கமாக எடுத்துரைத்து விவாதிக்கும் அறிவுஜீவி.

    கருணாநிதி மீது இவருக்கு ஈடுபாடு அதிகம்.. நெருக்கம் அதிகம்... பழக்கம் அதிகம்.. பாசம் அதிகம்..

    கருணாநிதி பற்றி என்ன சொல்கிறார் என பார்ப்போமா:

    கேள்வி: கருணநிதி உங்கள் மனதில் எப்படி பதிந்துள்ளார்?

    ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தில்தான் தெரியும் அவன் எப்படி வாழ்ந்தான் என்பதின் அர்த்தம். அப்படித்தான் கருணாநிதியின் மரணமும். 95 வயதில் மரணமடையும்போது அவருக்காக வந்த கூட்டங்களை பார்க்கும்போதும், அவருக்காக மக்கள் அழுததை பார்க்கும்போதும் வியப்பு அனைவருக்கும் வந்து செல்லும். ஆனால் கூட்டத்தை பார்த்து நான் ஒன்றும் அதிசயப்படவில்லை - ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் எனக்கு தெரியும் இவ்வளவு கூட்டம் இவருக்கு வரும் என்று. தொலைக்காட்சி மட்டும் இல்லையென்றால் இதைவிட இரண்டு மூன்று மடங்கு கூட்டம் வந்திருக்கும்.

    Karunanidhi will not postpone anything: Actor Rajesh

    இன்றைய இளைஞர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். திருக்குறளில் 605-வது குறள் ஒன்று உள்ளது. "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்,கெடுநீரார் காமக் கலன்" இந்த குறளைதான் கலைஞர் அதிகமாக தன் வாழ்க்கையில் பின்பற்றினார். 'காலம் தாழ்த்துதல்' அவரிடம் கிடையாது. எதையுமே தள்ளி போட மாட்டார். எழுத வேண்டும் என்று நினைத்தால் உடனே எழுதிவிடுவார். இன்னைக்கு ரிசப்ஷன் நாளைக்கு கல்யாணம் என்றால் இன்றைக்கே ரிசப்ஷனுக்கு சென்றுவிடுவார். ஏனெனில் நாளை வேறு வேலை ஏதாவது வரக்கூடும் என நினைத்து அப்போதே செய்வார்.

    அதேபோல ஒரு விஷயம் மறந்து போச்சு என்றோ, நினைவில்லை என்றோ அவர் சொல்லி நான் கேட்டதே இல்லை. காரணம் 1971-லிருந்து அறிமுகமானவர், 1980-களிலிருந்து நேரடியாக பழக்கமானவர்.

    இதற்கு அடுத்ததாக சோம்பேறித்தனம். சோம்பலாக அவர் உட்கார்ந்து நான் பார்த்ததே இல்லை. ஏதாவது எழுதி கொண்டும், படித்து கொண்டும், பேசிக் கொண்டும்தான் இருப்பார். உலகத்திலுள்ள மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவர்களை எடுத்துக் கொண்டாலும், அல்லது ஆற்றல், அறிவாளிகளை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் படிப்பார்கள், பேசுவார்கள், எழுதுவார்கள். பேச்சு என்பது மேடைப்பேச்சாக இருக்கலாம், அல்லது தனிப்பட்டவர்களிடம் விவாதமாகவும் இருக்கலாம்.

    அடுத்ததாக தூக்கம். ஒரு மனிதன் 8 மணி நேரம்தான் தூங்க வேண்டும். அதுவும் வயது ஆனால் 5 மணி நேரமாக குறைந்துவிடும். ஆனால் அதையும் கருணாநிதி இரண்டாக பிரித்து கொண்டார். மதியம் 2-லிருந்து 5 மணி தூக்கம், இரவு 12.30 மணியிலிருந்து 4.30 மணி வரை தூக்கம் என வகுத்து கொண்டார். இரவு 9-லிருந்து விடியகாலை 5 மணி வரை அவர் தூங்கியதே கிடையாது.

    Karunanidhi will not postpone anything: Actor Rajesh

    எனக்கு பள்ளிக்கூடத்துல வாத்தியார் சொல்லுவார், "ஒரு படகில் ஏறி பயணம் செய்யும்போது, இந்த காலம் தாழ்த்துதல், சோம்பேறித்தனம், மறதி, தூக்கம் என இந்த நான்குமே 4 துவாரங்களாகி தண்ணீர் உள்ளே புகுந்து படகே முழுகிவிடும் என்று மிக எளிமையாக விளக்கம் சொல்வார். இந்த திருக்குறளைதான் கருணாநிதி இறுதி வரை கடைப்பிடித்தார்.

    அதுமட்டுமல்லாமல் பவர்ஃபுல் மீடியாவை தன்னிடம் வைத்திருந்தார். ஒன்று, அரசியல், பத்திரிகை, மேடைப்பேச்சு, சினிமா, புத்தகங்கள் போடுவது, டிவி. இந்த 6 வகை மீடியா மூலமும் மக்களை அவர் சந்தித்து கொண்டே இருந்தார். இதன்மூலம் எழுதுவது, பேசுவது, படிப்பது இந்த 3-ம்தான் ஒரு மனிதனுக்கு நினைவாற்றலை பெருக்கும். அதனால்தான் நம் நாட்டில் வயதானவர்கள், மகாபாரதம் ராமாயணம் படிப்பார்கள், அதேபோல ஸ்ரீராமஜெயம் எழுதுவார்கள்.

    இப்படி கருணாநிதியும் எழுதுவது படிப்பது பேசுவதுதான் நினைவாற்றலை அளிக்கும். அதனால்தான் தன் இடது பக்க மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருந்தார். நம் அனைவருக்கும் வலது பக்கமூளைதான் அதிகமாக வேலை செய்தது. இடது பக்க மூளை பலருக்கு வேலை செய்வதில்லை. ஆனால் கலைஞருக்கு இரண்டுமே வேலை செய்தது. டிவியில் அவரது வசனங்கள் மூலமாகவோ, அல்லது அரசியல் பேச்சுக்கள் மூலமாகவோ, முரசொலி நாளிதழ் மூலமாகவோ ஏதாவது ஒன்றில் அவர் நம்முடன் கலந்து கொண்டே இருந்தார். திரும்ப திரும்ப நம்மிடம் நினைவூட்டப்பட்டே வந்துள்ளார்.

    தலைவர்கள் இரண்டு விஷயத்தை கையாள்வார்கள், கம்யூனிஸ்ட்டுகள் பொருளாதார விடுதலையை பேசுவார்கள். ஆனால் இது போன்ற தலைவர்கள் சமுதாய விடுதலையை பற்றி பேசினார்கள். பொருளாதார விடுதலை வந்தாலே சமுதாய விடுதலை தானாக வந்துவிடும் என்பது கம்யூனிஸ்களின் வாதம். ஆனால் இவர்கள் சமுதாய விடுதலைதான் முக்கியம், பிறகுதான் பொருளாதார விடுதலை என்பார்கள்.

    தந்தை பெரியார் எவ்வளவோ போராட்டங்களை செய்திருக்கிறார், எவ்வளவோ பேசினார், எழுதினார், சொன்னார்... ஆனால் அனைத்தையுமே ஆட்சி என்று வந்தால்தான் நிறைவேற்ற முடியும் என்று காத்திருந்து அவர் சொன்ன அனைத்தையும் நிறைவேற்ற பாடுபட்டவர் கருணாநிதி. சொல்வதைவிட அவற்றை செயல்படுத்துவதுதான் கடினம். பெரியார் பதவி ஆசை இல்லாதவர், எந்த பதவியில் அவர் இல்லாவிட்டாலும், அவருக்கு பிள்ளைகள் இல்லாவிட்டாலும் அறிஞர் அண்ணாவும், கருணாநிதியும்தான் பிள்ளைகளாக இருந்து அவருடைய ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றினார்கள்.

    கேள்வி: அவரது கவிதைகளில் உங்களுக்கு பிடித்தது?

    அந்த காலத்திலேயே கலைஞர் 1946-ல் ஒரு ஹைகூ எழுதியிருக்கிறார். அது ஒரு சுரண்டலை பற்றியது. சுரண்டலை பற்றி எவ்வளவோ பேர் புத்தகங்களே போட்டாலும் கருணாநிதியின் அந்த ஹைகூ வெகு சிறப்பானது.

    Karunanidhi will not postpone anything: Actor Rajesh

    கால்கள் ஓடுகின்றன... ஆனால்
    பரிசுகள் வாங்குவதோ கைகள்
    கைகள் விளையாடுகின்றன.. ஆனால்
    பதக்கங்கள் வாங்குவதோ கழுத்துகள்

    என்றார். இங்கேயே சுரண்டல் பற்றி சொல்லுகிறார் கருணாநிதி. கால்கள் ஓடி கஷ்டப்படும்போது, பரிசுகளை கைகள் வாங்கி கொள்கின்றன என்கிறார். உழைப்பவர் ஒருவர், அனுபவிப்பவர் ஒருவர் என்று சொல்லுகிறார். சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை பற்றி, சுரண்டல்களை பற்றி, ஏமாற்று வித்தைகளை பற்றி, சமூக அமைப்பை, கருத்தியல் ரீதியாக எப்படி மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை பற்றி அவர் இரண்டு வரிகளில் சொல்லுகிறார், காட்டிலே புலி மானை வேட்டையாடுகிறது, நாட்டிலே மான் புலியை வேட்டையாடுகிறது... என்றார். என்ன ஒரு அருமையான கவிதை.. இந்த இடத்தில்தான் அவருடைய புரட்டி தன்மை வெளிப்படுகிறது. எந்த அளவுக்கு இயற்கையையும், மனித வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்த்து சிந்தித்திருந்தால் இப்படிப்பட்ட கருத்துக்கள் வெளிவந்திருக்கும்?

    இதையெல்லாம் நாங்கள் அப்போது படித்துவிட்டுதான் அவர் மீது மயக்கம் கொண்டோம். அவருடைய வசன நடைகள்தான் எனக்கு வல்லினம், மெல்லினம், இடையினம் கொடுத்தன. எதிலுமே தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், எதிர்க்கட்சிகளின் விமர்சன தாக்குதல் இருக்கலாம், அவருடைய போராட்டத்தையோ, வயதுக்கு மீறிய அவர் செய்தி நற்செயல்களையோ, தினமும் அவர் எழுதிய எழுத்து பணியையோ எதையுமே யாருமே குறைத்து மதிப்பிட்டது இல்லை.

    கேள்வி: கலைஞர் குறித்து உங்களது தனிப்பட்ட அனுபவம்?

    அந்த காலத்திலேயும் இந்த காலத்திலேயும் சரி, தமிழ்நாட்டில் நெருங்கிய திமுக உறுப்பினர்களாட்டும், தொண்டர்களாகட்டும், சினிமா சம்பந்தப்பட்ட கலைஞர்களாகட்டும், அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்வார். என் திருமணம் 83-ல் நடந்தது. அதற்கும் வந்தார். என் மகள் திருமணம் 2011-ல் நடைபெற்றது. அதற்கும் வந்தார். என் அம்மா இறந்தபோது அவர் முதலமைச்சராக இருந்தார். அப்போது அனுதாப தந்தி அனுப்பி வைத்தார். இது போல அனைவரின் வீட்டு நல்லது கெட்டதிலும் கருணாநிதி பங்கெடுக்கும் தமிழ்ப் பண்பாட்டை கடைபிடித்தார். எனவேதான் ஒவ்வொரு குடும்பத்திலும் பிரிக்க முடியாத அங்கமாகி விடுவார் கருணாநிதி.

    கேள்வி: அவரை நீங்க எப்போ கடைசியா பார்த்தீங்க? உங்களை அப்போ அடையாளம் கண்டுக்கிட்டாரா?

    என்னால் மறக்கவே முடியாது. 2017, டிச.20 எனக்கு பிறந்த நாள். மகள் செல்வி, கருணாநிதியிடம் போய் சொன்னாங்க, "நடிகர் ராஜேஷ் வந்திருக்கார்.. பட்டுக்கோட்டைகாரர்... உங்களுக்கு தெரியுதா பாருங்க? இன்னைக்கு அவருக்கு பிறந்த நாளாம். உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்க வந்திருக்கிறார்" என்று சொன்னார். அப்போ என்னை பார்த்து சிரித்து, மெதுவாக கையை தூக்கி என் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் பண்ணினார். உடனே ஷால் (பொன்னாடை) இருக்கும் இடம் நோக்கி திரும்பவும், அவரிடம் ஒரு ஷால் உடன கொடுக்கப்பட்டது. அதை எனக்கு அவரே தன் கையால் போர்த்திவிட்டார். அதேபோல எம்ஜிஆரையும் நான் டிச.20-ம் தேதிதான் பார்த்தேன். எம்ஜிஆரை கடைசியாக பார்த்துவிட்டு வந்ததும் நான்தான்.

    கேள்வி: தனிப்பட்ட முறையில் படங்கள், அல்லது நடிப்பு பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறாரா?

    என்னிடம் கேட்டார், என்ன நீங்க ஒரு 50 படம் பண்ணியிருப்பீங்களா? என்றார். இல்லை, நான் 150 படம் நடித்திருக்கிறேன் என்றேன். ஓஹோ... அதனால்தான் வாரத்தில் டிவியில் 4 முறை படங்களில் வருகிறீர்களா என்றார். இப்ப எத்தனை படம் பண்ணிட்டிருக்கீங்க.. 2 படம்தான் நடிச்சிட்டிருக்கேன். இப்பதான் யாருமே கதாபாத்திரமே சரியாக எழுதுவதில்லையே... அப்பறம் எப்படி உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்றார் சிரித்தபடியே. அதேபோல என் மனைவி இறந்தபோதும், "வருத்தப்படாதீங்க. கலங்காதீங்க. மனம் தளர்ந்திடாதீங்க என்றார். எனக்கு அது ஆறுதலாக இருந்தது.

    Karunanidhi will not postpone anything: Actor Rajesh

    கேள்வி: நீங்கள் அவருக்கு ஒரு பரிசு கொடுத்தீர்களே? அது என்ன என்று சொல்ல முடியுமா?

    நான் ஒருமுறை சீனா போனேன். திரும்பி வரும்போது, மாசே துங் எம்பளம் ஒண்ணு அவருக்காக வாங்கிட்டு வந்தேன். அதை ஆசையா வாங்கி பார்த்த அவர், தன்னுடைய சேருக்குப் பக்கத்துல இரண்டு, மூன்று மாதங்களுக்கு வைத்திருந்தார். யாராவது வந்து அந்த அதைபற்றி கேட்டால், 'ராஜேஷ் வாங்கிட்டு வந்தார்'னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பார். ஒரு புத்தரின் சிலையும் வாங்கி கொடுத்தேன். அதற்கு மறுநாள்தான் அவர் பதவி ஏற்பதாக இருந்தது. அப்போது சொல்கிறார், "புத்த பூர்ணிமாவுடன் பதவியேற்றார்" என்றார்.

    கேள்வி: யாரேனும் அவருக்கு பரிசுகளை கொடுத்தால் அதை ஆர்வமுடன் வாங்கி மதிப்பளிப்பவராமே?

    ஆமாம். கருணாநிதி முதல்வராக இருந்த சமயம். சட்டசபைக்கு கிளம்பி கொண்டிருந்தார். அப்போது ஒரு பெரியவர் அமெரிக்காவிலிருந்து வரும்போது முழுக்கை வெள்ளை சட்டையை கலைஞருக்காக வாங்கிட்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி கொண்ட கருணாநிதி, அப்புறமா அந்த சட்டையை போட்டுக்கலாம்னு எல்லாம் நினைக்கல. அதை கையோட வாங்கி கொண்டார். தான் போட்டிருந்த சட்டையை அப்போதே கழட்டி, புது சட்டையை அங்கேயே பிரிச்சி, அப்பவே அதை போட்டுக்கிட்டார். நாமெல்லாம் இப்படி ஒரு துணியை 2 நாள் கழிச்சுதான் போடுவோமே. ஆனால் அந்த சட்டையை போட்டுக்கிட்டதோடு மட்டுமில்லாமல், "நல்லா இருக்குய்யா சட்டை" என்று சொல்லிவிட்டு சட்டமன்றம் கிளம்பி சென்றுவிட்டார். அதேபோல ஒரு பிரபலமான நாவலாசிரியர் ஒருவர் கருணாநிதிக்கு மூட்டு வலி என்பதால் ஒரு தைலம் வாங்கிட்டு வந்து கொடுத்தார். அதையும் உடனே வாங்கி, அவருக்கு முன்னாடியே மூட்டுகளில் தேய்க்க தடவ தொடங்கிவிட்டார். இதை எதற்காக சொல்லுகிறேன் என்றால், எழுதுவதானலும் சரி, எண்ணெய் தேய்த்து கொள்வதானாலும் சரி, எதையுமே காலம் தாழ்த்துவது அவரிடம் கிடையாது.

    கேள்வி: காலம் தாழ்த்துவது அவரிடம் இல்லை என்பதற்கு உங்களுக்கு தெரிந்த வேறு உதாரணம் சொல்ல முடியுமா?

    பிரபலமான தினசரி பத்திரிகை ஒன்று, கருணாநிதி பற்றி அன்றைய தினம் சிறு பிழையுடன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. காலை 5.30 மணிக்கு வழக்கம்போல் அந்த செய்தியை படித்த கருணாநிதி, உடனடியாக அதற்கு விளக்கம் அளித்து பதில் கடிதம் எழுதினார். ஒரு இளைஞனை அழைத்து அந்த கடிதத்தை கொடுத்து ஆசிரியரிடம் வீட்டிற்கே சென்று கொடுத்து வர சொன்னார். காரில் இளைஞனை அனுப்பி வைத்தால் லேட்டாகும் என்று நினைத்து பைக்கில் போக சொன்னார். அந்த ஆசிரியர் கையில் 8.30 மணிக்கே அவரது வீட்டிலேயே கடிதம் கிடைத்துவிட்டது. இதுதான் கலைஞர். அந்த ஆசிரியர் மிக வியந்து பாராட்டி சொன்னார், "என்னங்க... நான் தெரியாமல் ஒரு சிறு தவறு செய்துவிட்டேன். இப்படி பிழையை சுட்டிக்காட்டி இவ்வளவு துரிதமாக செயல்பட்டு என் தவறை திருத்துகிறாரே" என்று ஆச்சரியப்பட்டு சொன்னார்.

    கேள்வி: கருணாநிதி நிறைய நகைச்சுவை கலந்து பேசுபவர் என தெரியும். அப்படி உங்களிடம் ஏதாவது பேசியிருக்கிறாரா?

    ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயம். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருந்தேன். அந்த வாழ்த்து பத்திரிகைகளில் செய்தியாகவும் வந்திருந்தது. ஒரு சில நாட்கள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதியை சந்திக்க நேர்ந்தது. அப்போது காரில் ஏற செல்ல முயன்றவர் என்னை பார்த்ததும் நின்றுவிட்டார், "என்ன ராஜேஷ்... விளம்பரம் பார்த்தேன்" என்றார். நான் புரிந்துகொண்டேன் யாரை சொல்கிறார் என்று. "ஆமாம்.. ஒரே துறை, முதலமைச்சர் என்பதால் வாழ்த்து என்றேன். "பார்த்தேன்... சிரித்தேன்...'பாசப் பயணம் தொடருதோ என்று நினைத்தேன்" என்று கமெண்ட் அடித்தார். ஒரு சிறிய கட்டத்துக்குள்ள இருக்கிற செய்தியைக்கூட விடாமல் படிப்பவராக இருக்கிறாரே? என்று எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. நினைவாற்றல், சொல்லாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் என அனைத்திலுமே சிறந்து விளங்கினார். அதனால்தான் அவருக்கு நான்கு பக்க மூளையும் வேலை செய்துள்ளது" என்று பெருமையுடன் கூறி முடித்தார் ராஜேஷ்.

    English summary
    Karunanidhi will not postpone anything: Actor Rajesh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X