For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தயாநிதி மாறனை கைது செய்வதில் சி.பி.ஐ. அவசரம் காட்டுவது ஏன்?.. கருணாநிதி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை : தயாநிதி மாறனை சி.பி.ஐ. கைது செய்வதில் அவசரம் காட்டுவது ஏன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சி.பி.ஐ.யின் அவசரமும், அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் முயற்சியும் ஏன், அதன் பின்னணி என்ன என்பது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சந்திப்புகளைக் கூர்ந்து கவனித்து வருவோர்க்கு நன்றாகவே விளங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருணாநிதி எழுதியுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூடிறயுள்ளதாவது...

karunanithi

கேள்வி :- "கூகுள்" நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறாரே?

கலைஞர் :- தமிழர் அனைவரையும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்திடும் செய்தி இது. சுந்தர் பிச்சைக்கு வயது 43 தான் ஆகிறது. இந்த வயதில் சுந்தர் பிச்சை "கூகுள்" நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பது, தமிழர் ஒருவரின் தனிச் சிறப்பான அறிவாற்றலுக்குக் கிடைத்துள்ள உலகளாவிய கவுரவம். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்தான் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் பணியிலே சேர்ந்து தற்போது அதன் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

"எப்போதுமே ஒரு தரப்பினருக்கு மட்டுமான தொழில் நுட்பத்தை உருவாக்குவதல்ல கூகுளின் வேலை. கடைக்கோடியில் வசிக்கும் கிராமத்துச் சிறுவனுக்கும் சரி, ஹார்வர்டு பேராசிரியருக்கும் சரி, ஒரே மாதிரிதான் கூகுள் தேடுபொறி வேலை செய்யும். இதைத்தான் கூகுள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். சமநிலையைச் சாத்தியப்படுத்தும் சக்தியாகவே கூகுளை நான் பார்க்கிறேன்" என்று சுந்தர்பிச்சை குறிப்பிட்டிருப்பது அவரது சிந்தனை ஓட்டம் எவ்வளவு சிறப்பானது, ஆக்கபூர்வமானது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

தமிழர்களின் பெருமையை உலக அளவில் உயர்த்திக் காட்டிய சுந்தர்பிச்சைக்கு பிரதமரும், மற்றக் கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ள வாழ்த்துகளோடு என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்க நாட்டின் சிலிக்கான் பூமியில் சுந்தர் பிச்சை தமிழினத்தின் தனித் தன்மையையும், புகழையும் மேலும் உயர்த்துகின்ற வகையில் தன் பணியினைத் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

கேள்வி :- ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம், மத்திய அரசு நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்ற கேள்வியை கேட்டிருக் கிறதே?

கலைஞர் :- உண்மைதான். உச்ச நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராம்ஜெத்மலானி, யுக்சவுத்ரி ஆகியோர் சிறப்பாக வாதாடியிருக்கிறார்கள். பேரறிவாளனுக்காக வாதாடிய யுக்சவுத்ரி அவர்கள், குற்றவாளிகளின் தூக்கு தண்டனை, உச்ச நீதிமன்றத்தால், ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட போது, மாநில அரசாங்கம் அவர்களை விடுதலை செய்யலாம் என்று அறிவித்து விட்டது. அதோடு உச்ச நீதிமன்றத்தின் பணிகள் முடிவடைந்து விட்டன. குற்றவியல் நடை முறைச் சட்டத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. அதிலே மத்திய அரசுக்கு, பிரச்சினை இருந்தால், மத்திய அரசு மாநில அரசுக்குக் கடிதம் எழுதாமல், நீதிமன்றத்தை அணுகியது தவறு என்று கூறியிருக்கிறார். எனவே இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு, அவர்களை விடுதலை செய்ததோடு பிரச்சினையை முடிக்காமல், தேவையில்லாமல் மத்திய அரசிடம் அதற்கு ஒப்புதல் கேட்டு எழுதியதுதான் தவறாகப் போய் விட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. எனினும் இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. .

கேள்வி :- சசிபெருமாள் மரணம் பற்றியோ, மதுவிலக்கு பிரச்சினை காரணமாக நடைபெறும் போராட்டங்கள் பற்றியோ ஜெயலலிதா அரசு வாயே திறக்கவில்லையே?

கலைஞர் :- இதைப் பற்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து விட்டார்கள். ஏடுகளும் எழுதியுள்ளன. இந்த வாரம், விகடன் எழுதிய தலையங்கத்தின் தொடக்கத்திலேயே "கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடைப் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய போராட்டத்தில், தன் இன்னுயிரை இழந்திருக்கிறார் காந்தியவாதி சசிபெருமாள். அவர் செல்போன் கோபுரம் மீது ஏறியதும் அவரது மரணமும் சில சர்ச்சைகள் நிரம்பியது என்றாலும், அவரது நோக்கம் நேர்மையானது; தியாகம் மகத்தானது. மது என்னும் கொடிய நஞ்சை, இந்த மண்ணில் இருந்து அடியோடு அகற்ற வேண்டும் என்ற வெகுமக்கள் நலன் சார்ந்த கோரிக்கைக்காக, தன் உயிரையே தந்திருக்கிறார் சசிபெருமாள். ஆனால், டாஸ்மாக் மூலம் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் அரசுக்கு, இந்த ஒற்றை உயிரின் இழப்பு எந்த வலியையும் ஏற்படுத்தவில்லை.

அதனால்தான், மதுவிலக்கு அறிவிக்கக் கோரி சசிபெருமாளின் உடலை வாங்க மறுத்த அவரின் குடும்பத் தினரை, இரக்கம் இல்லாமல் கைது செய்திருக்கிறார்கள். அதனால்தான், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னையில் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். அதனால்தான், காக்கிச் சட்டை அணிந்த காவல் படை, கலிங்கப்பட்டி சாராயக் கடையைக் காவல் காக்கிறது. அதனால்தான், மாநிலம் முழுக்க போர்க்குரல்கள் எழுந்த பிறகும், போராட்டங்கள் தொடரும் போதிலும் ஆணவ மௌனம் காக்கிறது தமிழ்நாடு அரசு" என்றெல்லாம் எழுதியுள்ளது.

கேள்வி :- மத்திய முன்னாள் அமைச்சர், தயாநிதி மாறன் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அதிரடித் தீர்ப்பு பற்றி?

கலைஞர் :- நீங்களே அதிரடித் தீர்ப்பு என்றுதானே கேட்டிருக்கிறீர்கள். தயாநிதி மாறன் மீதான வழக்கு பற்றிய விவரங்களைத் தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் எந்த அளவுக்குக் கடுமையான செய்தியாக வெளியிட்டன என்பதும், அது ஏன் என்பதும் தமிழ்நாட்டு மக்களுக்கே புரியும். தி.மு. கழகம் இந்தப் பிரச்சினையில் விலகியே இருக்கிறது என்று யாரோ தி.மு. கழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கூறியதாக எழுதிப் பார்த்தார்கள். அவர் எதுவும் லஞ்சம் வாங்கியதாகவோ, வருவாய்க்கு அதிகமாகச் சொத்து குவித்து விட்டார் என்றோ, வெளிநாட்டுப் பணத்தைப் பரிசாகப் பெற்றுக் கொண்டார் என்றோ, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றோ வழக்கு இல்லை. தொலை தொடர்புத் துறை அமைச்சராக அவர் இருந்த போது அவரது இல்லத்தில் பல தொலைபேசிகள் பயன்பாட்டில் இருந்தன என்று கூறி சி.பி.ஐ.யின் காலம் கடந்த வழக்கு இது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பல நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். தயாநிதி மாறனைக் கைது செய்வதில் சி.பி.ஐ. அவசரம் காட்டுவது ஏன்?

தொலைபேசிகளுக்கான கட்டணத்தை வசூல் செய்யாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கைதானே இது; என்றும் குறிப்பிட்டு, இந்தப் பிரச்சினைக்கு ஏறத்தாழ ஒரு முற்றுப்புள்ளியே வைத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி சி.பி.ஐ.யின் அவசரமும், அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் முயற்சியும் ஏன், அதன் பின்னணி என்ன என்பது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சந்திப்புகளைக் கூர்ந்து கவனித்து வருவோர்க்கு நன்றாகவே விளங்கும்.

கேள்வி :- வரும் 15ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றும் போது மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது பற்றி அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறதே?

கலைஞர் :- அதைத் தவிர அ.தி.மு.க. அரசுக்கு வேறு வழியில்லை. தமிழகத்திலே உள்ள தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளும், சமுதாயத்தின் பல்வேறு பிரிவின ரும் மதுவிலக்குக்கு ஆதரவாகக் கொடி உயர்த்தி யுள்ளதால், நாள்தோறும் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அதனை அறிவிப்பதிலிருந்து அ.தி.மு.க. அரசு தப்ப முடியாது என்றே தோன்றுகிறது. ஒரு சிலர் முதலமைச்சர், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பார் என்றும், விற்பனை நேரத்தைக் குறைப்பார் என்றும் சொல்கிறார்கள். ஆனால் விற்பனை நேரத்தைக் குறைப்பதால் தீர்வு ஏற்படாது என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியே தெரிவித்துள்ளார்.

கேள்வி :- மாலைமுரசு ஆசிரியராக இருந்த பா. ராமச்சந்திர ஆதித்தன் வாழ்ந்த அவரது இல்லம் இடம் பெற்ற சாலைக்கு அவருடைய பெயரை வைக்க விரைவில் அரசு ஆணை பிறப்பிக்கப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்திருக்கிறாரே?

கலைஞர் :- தி.மு. கழக ஆட்சியில் பேரவைத் தலைவராகவும், வேளாண்மைத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய சி.பா. ஆதித்தனாரின் மூத்த மகன்தான் பா. ராமச்சந்திர ஆதித்தன். இவரும் சிறந்த பத்திரிகையாளர். அவருடைய பெயரில் சாலை அமைவது பொருத்தமான ஒன்று. அ.தி.மு.க. அரசு, வழக்கம் போல அறிவிப்போடு நிறுத்தாமல் ராமச்சந்திர ஆதித்தன் பெயரால் சாலையை அமைக்க உடனடியாக முன்வந்து, அதற்கான ஆணையினைப் பிறப்பிக்க வேண்டும்.

கேள்வி :- திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த சுவாதி என்ற ப்ளஸ் 2 படித்த பெண்ணுக்கும், அவருடைய தாயாருக்கும் நடைப்பயிற்சி மேற் கொண்ட சிலர் செய்த உதவி பற்றி

கலைஞர் :- மனித நேயம் அடியோடு பட்டுப்போய் விடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுத்தான் அது. அனைத்து நாளேடுகளிலும் அந்தச் செய்தி வந்துள்ளது. கோவைக்குச் செல்வதற்குப் பதிலாக, தவறிச் சென்னைக்கு வந்து விட்ட, அந்தப் பெண் உரிய நேரத்தில் கோவைக்கு நேர்காணலுக்கு விமானத்திலேயே செல்ல வழி வகுத்து கொடுத்த சரவணன், பரமசிவன், முருகேச பூபதி ஆகியோர் நன்றிக்கு உரியவர்கள்.

கேள்வி :- அ.தி.மு.க. ஆட்சி இன்னும் ஓராண்டு காலம் கூட இல்லாத நிலையில் அமைச்சரவையில் புதிதாக ஒருவரை ஜெயலலிதா சேர்த்திருப்பது பற்றி?

கலைஞர் :- ஜெயலலிதா அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட ஆனந்தன், பதவியேற்பதற்கு முன்பாகவே அவரைப் பற்றிய புகார் மனுவோடு 7-8-2015 அன்று முதல்வரைச் சந்திக்க வந்த ஜெயமணிக்கு அனுமதியே கிடைக்கவில்லை. அவரையும், அவருடைய 95 வயது பாட்டி சுப்பாத்தா, அம்மா காந்தம்மாள், மகன் அருண்குமார் ஆகியோரையும் கைது செய்து தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்திற்கே அழைத்துச் சென்று, அன்றிரவு வெளியே அனுப்பப்பட் டிருக்கிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஆனந்தன் ஏற்கனவே அமைச்சராக இருந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர். அப்போது ஏன் பதவியிலிருந்து அவரை நீக்கினார், அப்படி நீக்கப்பட்டவர் தற்போது மீண்டும் எப்படி அமைச்சராக்கப் பட்டார் என்பதெல்லாம் முதலமைச்சருக்கே தெரியும்.

9-8-2015 அன்று ஆனந்தன் அமைச்சராகப் பதவியேற்க இருந்ததை முன்னிட்டு அன்று காலை 6 மணி அளவிலேயே, ஜெயமணி உள்ளிட்ட நான்கு பேரையும் காவல் துறை மீண்டும் கைது செய்து அழைத்துச் சென்ற காவல் துறை ஆனந்தன் பதவியேற்பு முடிந்த பின் அன்று மாலையில் அவர்களை விடுவித்திருக்கிறார்கள். டி.ஜி.பி. யைச் சந்தித்து புகார் மனு கொடுக்க 10ஆம் தேதி சென்ற போதும் சந்திக்க மறுத்து விட்டார்களாம். அந்த அம்மையார், ஆனந்தன் மீது கூறுகிற குற்றச்சாட்டு, அவர் ஏற்கனவே அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது, சென்னையில் அவருடைய நிறுவனத்திற்காக குத்தகைக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றரை கோடி ரூபாயைப் பெற்றுக் கொண்டு இடமும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றெல் லாம் கூறியிருக்கிறார். எப்படிப்பட்டவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி ஜெயலலிதாவினால் வழங்கப்பட் டுள்ளது?

கேள்வி :- மூத்த அதிகாரி, முத்துக்குமார சாமி தற்கொலை வழக்கு என்ன ஆயிற்று?

கலைஞர் :- அந்த தற்கொலை வழக்கில் குற்றவாளி யாகக் கூறப்பட்டவர் அ.தி.மு.க. அமைச்சர். அவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனிலும் வெளியே வந்து விட்டார். இதுபோன்ற வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப் படுவார். அவர் வீடு சோதனையிடப்படும். ஆனால் இந்த வழக்கிலே அது இரண்டுமே நடைபெறவில்லை என்று காவல் துறை அதிகாரி ஒருவரே கூறுகிறாராம். செம்மரக் கடத்தல் வழக்கைப் போலவே இந்த வழக்கையும் சுருட்டி மூடி வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத்தான் கருத வேண்டியுள்ளது.

கேள்வி :- தமிழகம் ஊழல் மிகுந்த மாநில மாக மாறி விட்டது என்று பா.ஜ.க. கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறாரே?

கலைஞர் :- அதற்குப் பாராட்டு தெரிவிப்பதற் காகத்தான் பா.ஜ.க.வின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத் திற்குச் சென்றிருப்பாரோ?

கேள்வி :- பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள் பெருகிக் கொண்டு போவதாக செய்திகள் வர ஆரம்பித்து விட்டதே?

கலைஞர் :- இதுகுறித்து இன்று வெளிவந்துள்ள விகடன் தலையங்கத்தில், "காங்கிரஸ் ஆட்சியில் எங்கெங்கும் ஊழல்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக் கட்டுவோம், தேசத்தை மாற்றிக் காட்டுவோம்" என்ற நம்பிக்கையை விதைத்துத் தான் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பெற்றது. ஆனால், பதவியேற்ற ஒரே வருடத்தில் பா.ஜ.க. அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள். சத்தீஸ்கர் மாநிலப் பொது விநியோகத் திட்டத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், மராட்டிய மாநில பள்ளிக் கல்வித் துறையில் ஊழல், மத்தியப் பிரதேச அரசு ஊழியர்கள் தேர்வு வாரியமான வியாபம் ஊழல் என, பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் அனைத்திலும் வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுகள். இதற்கு பொறுப்பேற்றுப் பதில் சொல்ல வேண்டிய பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் இன்னமும் இறுக்கமான மௌனம் காக்கிறார்கள். டாம்பீகமாக அறிவிக்கப்பட்ட "மேக் இன் இந்தியா" என்னவாயிற்று? பிரதமரின் ஆடை அலங்காரங்களில்கூட அது இல்லை. "கிளீன் இந்தியா" வின் நிலைமை என்ன? ஒரு மாத கால ஊடக வெளிச்சத்தோடு முடிந்து போயிற்று. யோகாதினம்? அது இந்தித் திரைப்படப் பாடல் காட்சி போல பிரமாண்ட மாக இருந்தது. நாடாளுமன்றம் முடங்கிக் கிடக்கிறது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா தொடங்கி லலித் மோடி விவகாரம், வியாபம் ஊழல் என எதிர்க் கட்சிகள் கிடுகிடுக்க வைத்தாலும், பிரதமரிடம் பதிலே இல்லை" என்றெல்லாம் எழுதியிருப்பதில் இருந்தே மத்திய அரசு எந்தத் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கேள்வி :- 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா "சிறந்த கல்வித் தரம் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் மட்டுமே கல்வித் தரத்தை மேம்படுத்தும், அதற்கான அனைத்து முயற்சிகளுக் கும் இந்த அரசு துணை நிற்கும்" என்று கூறிய அறிவிப்பு என்ன நிலையில் உள்ளது?

கலைஞர் :- இந்தப் பிரச்னைக்கு "கிணற்றில் போட்ட கல்லாக கல்வித் திட்டங்கள்" என்ற தலைப்பில் "ஜூனியர் விகடன்" இதழ் எழுதும் போது, "அ.தி.மு.க. ஆட்சி இறுதிக் கட்டத்தை நெருங்குகிற இந்த நிலையில் மாணவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய திட்டங்கள் எல்லாம் நிறைவேறியதா? "இல்லை" என்று வேதனையுடன் உதட்டை பிதுக்கும் நிலைதான் இருக் கிறது" என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தே உண்மையைப் புரிந்து கொள்ளலாமே? மேலும் அந்த இதழ் "பள்ளிக் கல்வித் துறையில் தற்போது ஆசிரியர் கவுன்சிலிங்கில் ஊழல், இலவசப் பாடப் புத்தகங்கள் அச்சடிப்பதில் கமிஷன், அதிகாரிகளுக்கு இடையே கோஷ்டிப் பூசல் ஆகியவைதான் தலைவிரித்தாடுகின்றன. கடந்த நான்காண்டுகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் சொல்லிக் கொள்ளும்படி உருப்படியான ஒரு விஷயம்கூட இல்லையே என்பதுதான் கல்வியாளர் களின் கவலை" என்றும் எழுதியுள்ளது.

கேள்வி :- அரசுக் கல்லூரி ஒன்றின் முதல்வர், கல்லூரியில் மாணவர் ஒருவரைச் சேர்க்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது பற்றி ஆதாரப்பூர்வமாக செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- கோடிக்கணக்கில் புரளும் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் என்பதெல்லாம் ஒரு செய்தியா என்ன?

கேள்வி :- கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியை திடீரென்று மூடி, அதிலே படித்து வந்த மாணவர்களையெல்லாம் அலைக்கழிப்பதாகக் கூறப்படுகிறதே?
கலைஞர் :- உண்மைதான்! கொடநாடு எஸ்டேட்டில் உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள்தான் இந்தப் பள்ளியிலே படித்து வந்திருக் கிறார்கள். அண்ணா நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளி, இப்போது 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளதாம். சில ஆண்டுகளுக்கு முன்பு அதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த பொதுப் பாதை அடைக்கப்பட்டது. தற்போது பள்ளியையும் மூடியிருக்கிறார்கள். அனைத்தும் அதிகார ஆக்கிரமிப்பின் அட்டூழியச் செயல்கள்!

கேள்வி :- மேற்கு வங்க முதலமைச்சர், பிரத மரைச் சந்தித்து அவருடைய மாநிலத்திற்கு உதவி நிதியாக 21 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருக் கிறாரே?

கலைஞர் :- தமிழக முதலமைச்சர், பிரதமரை தன் வீட்டிற்கே அழைத்து 21 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை அளித்திருக்கிறார். பாவம், மம்தா டெல்லிக்கே சென்று, நாற்காலியின் முகப்பிலே பணிவாக அமர்ந்து கொண்டு உதவி கோரியிருக்கிறார். தமிழ்நாட்டுக்கும், வங்காளத்துக்கும் அதுதான் வித்தியாசம்! "அம்மா"வின் சாதனையே சாதனை என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒரு "ப்ளக்ஸ் போர்டு" வைத்து மகிழலாம்!

கேள்வி :- தமிழக அரசில் முதல் அமைச்சரின் கையெழுத்துக்காக ஏராளமான கோப்புகள் தேங்கிக் கிடப்பதாகச் சொல்கிறார்களே?

கலைஞர் :- எனக்குக் கிடைத்த தகவல், பத்து கோப்புகளை ஒன்றாக சேர்த்து, வரிசையாக ஒரே பேப்பரில் அதுபற்றி தட்டச்சு செய்து, அதிலே முதல்வ ரிடம் ஒரே கையெழுத்தினைப் பெற்று, கையெழுத்து கூட அல்ல, இனீஷியலைப் பெற்று அந்தப் பேப்பரை நகல் எடுத்து, ஒவ்வொரு கோப்பிலும் அந்தப் பேப்பரை வைத்து முதல்வர் அலுவலகத்திலிருந்து அனுப்பி விடுகிறார்களாம். அவ்வாறு செய்வது சரியல்ல என்றும், பின்னர் தணிக்கையில் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என்றும் சில அதிகாரிகள், தலைமைச் செயலகத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து கூறிய போதும், அது கவனிக்கப்படவில்லையாம்! என்னமோ நடக்குது; மர்மமா இருக்குது!

இவ்வாறு கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK leader karunanithi asked that why CBI is very keen to arrest dhayanithi maran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X