For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குலாம் நபி ஆசாத்தின் வருகையும், பாஜகவைத் தவிர்க்கும் கருணாநிதியும்!

By Manjula
Google Oneindia Tamil News

-ஆர் மணி

திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விரைவில் சென்னை வரவிருப்பதாக செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வந்த வண்ணமுள்ளன.

குறிப்பாக பிப்ரவரி 9ம் தேதி சென்னையிலிருந்த வெளி வரும் மூன்று முன்னணி ஆங்கில நாளிதழ்களில் சொல்லி வைத்தாற்போல இந்த செய்தி வந்திருக்கிறது. அதாவது இந்த வார இறுதியில் குலாம் நபி ஆசாத் சென்னை வரப் போகிறார் என்றும், அவரது வருகை மீண்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணி மலர்ந்து விட்டதற்கான அச்சாரமாக இருக்கப் போகிறதென்றும் அந்தச் செய்திகளில் உள்ளது.

Karunanithi's new alliance strategy

ஒரு பக்கம் பாஜக - தேமுதிக - திமுக கூட்டணி உருவாகப் போகிறதென்று செய்திகள் உலா வந்து கொண்டிருக்கும் நேரத்தில், இப்படியொரு செய்தி வந்ததுதான் விவரமறிந்த அரசியல் பார்வையாளர்களை நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வைத்துள்ளது. ஒரே கட்டத்தில் விஜயகாந்த்தைப் போன்றே பாஜகவுடனும், காங்கிரசுடனும் திமுக பேசிக் கொண்டிருக்கிறதா என்ற சந்தேகத்தையும் இந்தச் செய்திகள் கிளப்பிவிட்டுக் கொண்டிருப்பது மறுக்க முடியாததுதான்.

ஆனால் திமுக உயர்மட்டத் தலைவர்களிடம் பேசிப் பார்த்தால் கிடைக்கும் தகவல்கள் வேறு மாதிரியாகவே இருக்கின்றன. திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் எப்போதுமே இருக்கும் ஒரு மூத்த தலைவர் கூறுவது இதுதான்:

‘பாஜகவுடன் கூட்டணியில் சேர கருணாநிதி விருப்பம் காட்டவில்லை. தயங்குகிறார். காரணம் இது திமுகவுக்கு காலங்காலமாய் வாக்களித்து வரும் இஸ்லாமியர்கள், கிறிஸ்த்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளை முற்றிலுமாக கட்சியிடமிருந்து பிரித்து விடும். மாறாக பாஜகவுக்கு இருக்கும் சொற்ப வாக்கு வங்கியிலிருக்கும் வாக்குகளும் கூட அப்படியே திமுகவுக்கு வராது. காரணம் இது பாரம்பரியமாகவே ஜெயலலிதாவுக்கு ஆதரவான வாக்கு வங்கிதான். மேலும் திமுகவின் நம்பத்தன்மையையும் இது மேலும் சிதைத்து விடும்!'

ஆனால் பாஜகவுடன் திமுக கூட்டணி சேரப் போகிறதென்ற சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட் செய்திக்கு பின்னர் அரசல் புரசலாக கிளம்பியிருக்கும் இந்த செய்தியை மட்டுப்படுத்தவே திமுக தலைவர் தரப்பிலிருந்து நன்கு திட்டமிட்டு குலாம் நபி ஆசாத் சென்னை வருகிறார் என்ற செய்தி முன்னணி ஆங்கில நாளிதழ்களில் பரப்பப்பட்டதாகவும் ஒரு பேச்சிருக்கிறது.

‘விஷயம் மிகவும் தெளிவானது. பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதில் திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு - இவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள், திமுகவின் அரசியல் முடிவுகளில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் என்பது மறுக்க முடியாததுதான் - மட்டுமே ஆர்வமிருக்கிறது. கட்சியின் பெரும்பான்மையானோருக்கும், கருணாநிதிக்கும் இதில் பெரிய ஆர்வமில்லை. ஏனெனில் இதனால் வரும் பாதகங்களை அவர்கள் நன்றாக அறிந்தே இருக்கிறார்கள்' என்று கூறுகிறார் திமுக தலைமைக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர்.

இதனிடையே பாஜக - திமுக கூட்டணிக்கு அதிகளவில் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் என்றே கூறப்படுகின்றது. ஒருபக்கம் தன்னை பாஜகவும், மறு பக்கம் திமுகவும் வருந்தி, வருந்தி அழைத்தாலும், விஜயகாந்த் இரண்டு கட்சிகளையும் சேர்த்தே அணி அமைக்க விரும்புகிறாராம். காரணம் திமுகவின் வாக்குகளைக் கொண்டு எம்எல்ஏ சீட்டுக்களையும், பாஜகவின் பண பலம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பலத்தைக் கொண்டு அடுத்த மூன்றாண்டுகளுக்கு மத்திய அரசின் அதிகாரத்தையும் சுவைத்துப் பார்க்கவே கேப்டன் இப்படிப்பட்ட கூட்டணியை விரும்புகிறார் என்றும் அவருக்கும், தேமுதிகவுக்கும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தேமுதிகவின் இந்த அழுத்தத்திற்கு தான் உடன்படப் போவதில்லை என்பதை மறைமுகமாக கேப்டனுக்கு உணர்த்தவே திமுக தரப்பிலிருந்து குலாம் நபி ஆசாத் விரைவில் வந்து கருணாநிதியை சந்திக்கப் போகிறார் என்ற செய்தியை பரப்பியிருப்பதாக விஷயமறிந்த வட்டாரங்களில் நம்பப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 20ம் தேதி காஞ்சிபுரத்தில் நடக்கவிருக்கும் தேமுதிக மாநாட்டில் கேப்டன் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வம் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. 20ம் தேதியும்கூட விஜயகாந்த் நிச்சயம் தனது முடிவை அறிவிக்க மாட்டார், தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் கமிஷன் முறையாக அறிவிக்கும் நாள் வரையில் இந்த இழுபறி நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. திமுக தரப்பிலும் அதிகாரபூர்வமாக பாஜகவுடன் கூட்டணி இல்லையென்று கூறப்படவில்லை.

திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் ‘புதிய தலைமுறை' யின் நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் பேசும்போது, ‘இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை' என்று தான் பட்டும் படாமல் பேசினார். ஆனால் திமுக தலைவரிடமிருந்தோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகனிமிருந்தோ இதுபற்றி எந்த கருத்தும் வெளிப்படவில்லை.

திமுகவின் அதிகார பூர்வ ஏடான ‘முரசொலியில்' பாஜக வுடனான கூட்டணி பற்றிய தகவல்களுக்கு எந்த பதிலும் இல்லை. வழக்கமாக இது போன்ற செய்திகள் கிளம்பும் போதெல்லாம் உடனடியாக அதற்கான எதிர்வினை ‘முரசொலியில்' கிடைத்து விடும். ஆனால் இந்த முறை ‘முரசொலி' அடக்கியே வாசிக்கிறது.

இதுதான் வழக்கமான கருணாநிதியின் பாணி. அதுவும் இந்த முறை எந்த கட்சியும் திமுகவுடன் சேரத் தயாராக இல்லை, திமுக தான் வலியப் போய் கட்சிகளை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்திற்கு பதிலடியாகவே கட்சி இப்படிப்பட்ட அணுகுமுறையை கையாண்டுக் கொண்டிருக்கிறது.

பாஜக- திமுகவுடனான கூட்டணி பற்றி அதிகாரபூர்வமான முறையில் பதில் சொல்லாமலும், மற்றோர் புறம் குலாம் நபி ஆசாத் சென்னை வருகிறார் என்ற செய்தியை பரப்புவதன் மூலமும் இந்தியாவின் இரண்டு பெரிய கட்சிகளும் எப்போதுமே திமுகவின் தயவை தேர்தல் காலங்களில் நாடி வருவது தவிர்க்க முடியாதது என்பதுதான் திமுக உணர்த்த நினைக்கும் செய்தியாகத் தெரிகிறது.

இதெல்லாம் சரிதான். தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி, இந்தத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி சேரப் போகிறதா இல்லையா என்பதுதான். இது திமுகவின் பலவீனங்களை மட்டுமே பொறுத்தது அல்ல. மாறாக பாஜகவின் அரசியல் வல்லமை மற்றும் காய்களை சாமர்த்தியமாக நகர்த்தும் திறைமையையும் பொறுத்ததுதான்.

2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கீழ் தளத்தில் திமுக - காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடந்தது. முதல் தளத்தில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்தது. இரண்டாவது தளத்தில் கலைஞர் தொலைக் காட்சி நிர்வாகிகளிடம் அமலாக்கப் பிரிவு விசாரித்துக் கொண்டிருந்தது. இவை இரண்டுமே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு சம்மந்தமானைவையாகும். இப்படிப்பட்ட பிளாக்மெயில் அணுகுமுறையால் தான் காங்கிரஸ் தலைவர், கருணாநிதியின் பாஷையில் சொன்னால் 'சொக்கத் தங்கம் சோனியா காந்தி' 63 எம்எல்ஏ சீட்டுக்களை திமுகவிடமிருந்து பிடுங்கினார். அவமானத்தை விழுங்கிக் கொண்டு இந்த 63 காங்கிரஸ்காரர்களை 63 நாயன்மார்கள் என்றே விளித்து தனது பலவீனத்தை வார்தை ஜாலங்களால் மறைத்துக் கொண்டார் திமுக தலைவர்.

இந்த முறை மத்தியில் அசுர பலத்துடன் இருப்பது பாஜக. திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர்களும் சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கும் ஊழல் வழக்குகளில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டுதானிருக்கின்றனர். அதுவும் 2ஜி ஊழல் வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில் எந்த நேரமும் தீர்ப்பு வரலாம், அந்தத் தீர்ப்பு பாதகமாக வந்தால் அ.ராசா வும், கனிமொழியும் மீண்டும் திஹார் சிறைவாசத்துக்குத்தான் போக வேண்டியிருக்கும். சோனியா காந்தி கடைபிடித்த அதே அணுகுமுறையை நரேந்திர தாமோதரதாஸ் மோடி கடைப்பிடித்தாரானால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திமுக - பாஜக - தேமுதிக கூட்டணி கூட உருவாகலாம். சொக்கத் தங்கம் சோனியா கடைபிடித்த அணுகுமுறைக்கு பேர் போனவர்தான் இரண்டாவது இரும்பு மனிதர் மோடியும்.

கூட்டணி முடிவுகள் கட்சியின் நலன் சார்ந்து எடுக்கப்பட்டதெல்லாம் அந்தக் காலம். குடும்ப நலன் சார்ந்து எடுக்கப்படுவது இந்தக் காலம். இதில் மிகவும் சிக்கலானது எந்தளவுக்கு தனது குடும்ப உறுப்பினர்களின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல் திமுக தலைவர் இருக்கப் போகிறார் என்பதுதான். இதுவரையில் கருணாநிதி, பாஜக கூட்டணி என்ற ஆசை வலையில் விழாமல்தான் இருந்து கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் குலாம் நபி ஆசாத் வருகை பற்றிய தகவல்கள் பரப்பப்படுவது.

2011 மீண்டும் நிகழாதென்றலாம் உறுதியாக இப்போதைக்கு கூற முடியாது. அப்படி நிகழ்ந்தால் அது ஜெயலலிதாவுக்கு தங்கத் தாம்பாளத்தில் மீண்டும் ஆட்சியை வைத்துக் கொடுத்தது போலத்தான் என்பது வேறு கதை. இதுவும் திமுக தலைவருக்கு தெரியும்தான். ஆனால் தண்ணீரை விட ரத்தம் கெட்டியானது என்பார்களே (blood is thicker than water) அது எக்காலத்துக்கும் பொருத்தமான உண்மையென்பதால் அதற்கு இந்த 91 வயது முதிர்ந்த அரசியல்வாதியும் விதிவிலக்கில்லைதானே.

இப்படி ஒருவேளை நிகழ்ந்தால் அது கார்ல் மார்க்சின் வார்த்தைகளையே நினைவு படுத்தும். ‘வரலாறு ஒவ்வோர் முறையும் திரும்ப, திரும்ப நிகழும். முதன் முறை அது கேலிக்கூத்தானதாக இருக்கும், இரண்டாம் முறை அது துன்பியல் நாடகமாக இருக்கும்!'

2011-ஐ போல பிளாக் மெயில் அரசியலுக்கு திமுக தலைவர் அடிபணிந்தால் முடிவும் 2011-ஐ போலவே, இன்னும் சொல்லப் போனால் அதை விட மோசமானதாகவே இருக்கக் கூடும்.

இதனிடையே இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது கிடைத்த தகவல் குலாம் நபி ஆசாத் வரும் 13ம் தேதி சென்னை வருகிறார். திமுக தலைவரைச் சந்தித்துப் பேசவிருக்கிறார் என்பதுதான். இது கூட்டணிக்கான முதல் கட்ட பேச்சுவார்தைதான். சந்தேகமில்லை. .... ஆனால் கூட்டணி உறுதியாகுமா? அல்லது தேமுதிகவை அசைத்துப் பார்க்கும் உத்தியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

English summary
Columnist R Mani says that DMK is trying to sideline BJP and trying to form a new alliance with Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X