For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீர மங்கை கவுசல்யா மீது பேஸ்புக், டிவிட்டரில் வன்மம்.. எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கௌசல்யா மீது தொடரும் ஆபாச அர்ச்சனைகள், என்று திருந்தும் இந்த சமூகம் ?- வீடியோ

    சென்னை: காதல் கணவர் சங்கரை இழந்தபோதிலும், தீரத்தோடு போராடி, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த கவுசல்யாவுக்கு எதிராக ஆபாச, அறுவெறுப்பு தாக்குதல்கள் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

    இந்த தாக்குதல்களை வெளியிடுவது ஜாதிய அடிப்படை கட்டுமானத்தில் ஊறிப்போனவர்கள்தான் என்றபோதிலும், விஷத்தை தேனில் கலந்து கொடுப்பதை போல, இதற்கு பாசம், குடும்ப கவுரவம் என்றெல்லாம் பெயர் சூட்டி நைசாக பிறர் மனதுக்குள் புகட்டுகிறார்கள் என்பதில்தான் ஒளிந்துள்ளது சூத்திரம்.

    கணவனை கண்முன்னே பறி கொடுத்தது மட்டுமல்லாது, தானும் கொலைவெறியர்களின் அரிவாளால் வெட்டுபட்டு புழுபோல ரோட்டில் கிடந்து துடித்ததை மனதில் உருவேற்றி வைராக்கியமாக மாற்றி போராடி வருகிறார் கவுசல்யா.

    பரவும் பறை ஒலி

    பரவும் பறை ஒலி

    சோகம், நெருக்கடி தாங்காமல் ஒருமுறை விஷம் குடித்து தற்கொலை செய்யப்போன அவரை மீட்டு கவுன்சலிங் கொடுத்து அவரை வாழ வழி செய்து வைத்தது காவல்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள். அதன்பிறகே பெரியாரின் புத்தகங்களை படித்து, அம்பேத்கரை உள்வாங்கி, ஜாதி கட்டமைப்புக்கு எதிராக பறை ஒலி எழுப்ப ஆரம்பித்துள்ளார் கவுசல்யா.

    வாழ்க்கையே ஒரு பாடம்

    வாழ்க்கையே ஒரு பாடம்

    உண்மையில் கவுசல்யாவின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்க கூடிய பாடம். சட்டப்படி இதுவரை அவர் எந்த தவறும் செய்துவிடவில்லை. தப்பு செய்தவர்கள் எல்லோரும் எதிர்முகாமை சேர்ந்தவர்கள்தான். 18 வயதை தாண்டிய பிறகு மனதுக்கு பிடித்தவரை கரம்பிடித்தார். அதற்காக வெட்டுபட்ட போதிலும், திரும்பி அவர் வாள் எடுக்கவில்லை, சட்டத்தையே கையில் எடுத்தார். இந்திய சட்டம் தன்னை நம்பிய கவுசல்யாவுக்கு நியாயத்தை வழங்கியுள்ளது.

    சமகால இன விடுதலை போராளி

    சமகால இன விடுதலை போராளி

    எந்த நிலையிலும் மன வலிமை குறையாமல் இருப்பது, உரிமைக்காக எதிர்த்து போராடுவது, சாவின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தபோதிலும் அச்சமின்றி களமாடுவது என சம காலத்தில் வாழும் வலிமைமிகு ஒரு இன விடுதலை போராளியாகத்தான் கவுசல்யா பார்க்கப்பட வேண்டும். ஆனால், இப்படி அவர் அடையாளப்படுத்தப்பட்டுவிட கூடாது என்பதில் ஜாதிய அமைப்புகள் மிகவும் தெளிவாக உள்ளன.

    மனசாட்சியை அடகு வைத்தவர்கள்

    மனசாட்சியை அடகு வைத்தவர்கள்

    இதனால்தான் அவர் சங்கரின் தம்பிகளுடன் எடுத்த குரூப் புகைப்படத்தை கூட ஆபாசமாக சித்தரிக்கின்றன. குளத்திற்கு சென்ற போட்டோவை போட்டு அதை கும்மாளம் என்று கூறி எக்காளமிடுகிறார்கள். கவுசல்யா மகிழ்ச்சியாக இருந்துவருவதாகவும், அவர் கணவன் இறந்த துக்கம் இல்லாதவர் என்றும் கூறி மனசாட்சியின்றி செய்தி பரப்புகிறார்கள் கயவர்கள்.

    பெண்களுக்கு நாதி இல்லையோ

    பெண்களுக்கு நாதி இல்லையோ

    இப்படி நச்சு கருத்துகளை நயவஞ்சகமாக பரப்பும் இவர்கள், கணவன் இறந்ததும் ஒரு பெண்ணை உடன்கட்டை ஏற்ற வேண்டும் என்கிறார்களா? அல்லது, மொட்டையடித்து மூலையில் உட்கார வைக்க வேண்டும் என்கிறார்களா? கணவன் இறந்த பிறகு 24 மணி நேரமும் ஒரு பெண் புன்சிரிப்பை கூட உதிர்க்காமல் ஜடமாக மாற வேண்டும் என்கிறார்களா? எதை முன் வைக்கிறது இந்த படங்கள்? தங்கள் வீடுகளிலும் இதே நெறிமுறைதான் இருக்கிறதா என்பதை நினைத்து பார்க்க கூட அவர்கள் மனது இளகவில்லையே!

    கொலையே செய்தாலும் மன்னிக்க வேண்டுமோ

    கொலையே செய்தாலும் மன்னிக்க வேண்டுமோ

    ஒருபக்கம் ஆபாச கருத்துகள், மறுபக்கம் பெற்ற தந்தையையே தூக்கு மேடை அனுப்பிவிட்டார் என்ற சென்டிமென்ட் நாடகங்கள் என சமூக வலைத்தளங்களை கழிவுகளை கொட்டும் இடமாக்கி வைத்துள்ளனர் சமூக வலைத்தள ஜாதியாளர்கள். பெற்ற மகன் தெரியாமல் தப்பு செய்துவிட்டான் என்ற வாதத்தை கூட புறம்தள்ளிவிட்டு, தேர்க்காலில் ஏற்றி கொன்றான் மனுநீதி சோழன் என்றபோது புல்லரிப்புக்கு உள்ளான இவர்கள்தான், கொலையாளி என தெரிந்த தனது தந்தைக்கு நீதிமன்றத்தின் வாயிலாக தண்டனை வாங்கிக்கொடுத்த கவுசல்யாவை பாசமற்றவர் என சான்றளித்து குதுகலிக்கிறார்கள். சங்கரையும் தாயும், தந்தையும்தான் பெற்று கஷ்டப்பட்டு வளர்த்திருப்பார்கள் என்பதை வசதியாக மறந்தும் விடுகிறார்கள்.

    கலங்காத கவுசல்யா

    கலங்காத கவுசல்யா

    இவர்கள் நோக்கம் பாசத்தை பறைசாற்றுவது இல்லை, ஒழுக்கத்தை கற்பிப்பதும் கிடையாது. ஒரே நோக்கம், ஜாதி மறுப்பு திருமணம் செய்துவிட்டு தலை நிமிர்ந்தும் நிற்கிறாரே என்பதுதான். கவுசல்யா நாளை பல பெண்களுக்கு ஜாதி மறுப்பு பாடத்தை கற்பித்துவிடுவாரே என்ற நடுக்கம் இதை செய்ய வைக்கிறது. ஆனால் எத்தனையோ துயரங்களை கண்முன் சந்தித்து எதிர்த்தடித்துள்ள வீரப்பெண் கவுசல்யா, இந்த வீணர்களை கண்டு அஞ்சிவிடமாட்டார் என்பதன் அடையாளம்தான் இன்றைய பேட்டி. "அவரை தந்தை என்று சொல்ல வேண்டாம், குற்றம் செய்தார், தண்டனை அனுபவிக்கிறார். அவ்வளவுதான்" இந்த ஒரு வரி போதும், கவுசல்யா தனது பாதையில் மிக தெளிவாக உள்ளார் என்பதை காண்பிக்க.

    English summary
    Kausalya who is fighting for justice for her husband Shankar's cruel murder comes under horrifying social media attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X