For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் உருப்பட்டேனா, இல்லையா.. கண்ணதாசன் கேட்ட கேள்வி

கண்ணதாசனை அவரது பள்ளி ஆசிரியர் மனதார வாழ்த்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: வாழ்வில் எவ்வளவு உயர்ந்தாலும் தங்கள் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் என்றுமே மரியாதை அளிக்க தவறுவதில்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த செய்தி.

அதுவும் இது கவிஞர் கண்ணதாசனை பற்றியது. இந்த சம்பவத்தினை கண்ணதாசன் குடும்பத்தினரே சொல்லும்போது இன்னும் பெருமையாகவே உள்ளது!

காரில் புறப்பட்டார்

காரில் புறப்பட்டார்

ஓஹோவென்ற உயரத்தில் கண்ணதாசனின் புகழ் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்த சமயம் அது! அப்போது செட்டிநாட்டு கிராமம் ஒன்றில் ஒரு விழாவிற்கு பேச்சாளராக கண்ணதாசனை அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் கலந்து கொள்ளவும் கண்ணதாசன் ஒப்புக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டார்.

காந்தி வந்த குருகுலம்

காந்தி வந்த குருகுலம்

இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், அமராவதிபுதூர் என்ற கிராமத்தை தாண்டிதான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் உள்ள குருகுலம் ஒன்றில்தான் கண்ணதாசன் படித்தார். மகாத்மா காந்தியே ஆசீர்வாதம் செய்யப்பட்ட குருகுலம் அது. அவ்வளவு ஃபேமஸ்!

பள்ளி வாசலில்..

பள்ளி வாசலில்..

இந்த கிராமத்திற்குள் கண்ணதாசன் கார் நுழைந்தது. அப்போது தான் படித்த பள்ளியை அங்கு பார்த்தார். உடனே காரை நிறுத்த சொல்லிவிட்டார். காரை விட்டு கீழே இறங்கி அந்த பள்ளியின் வாசலில் நடுரோட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டார்.

நான் உருப்பட்டேனா?

நான் உருப்பட்டேனா?

அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. பள்ளியில் இருந்தவர்கள், தெருவில் போனவர்கள் எல்லாம் கண்ணதாசனை பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றனர். விழாவுக்கோ நேரம் ஆகி கொண்டே இருந்தது. உடன் வந்தவர்கள் கேட்டார்கள், "என்னாச்சு.. ஏன் இப்படி உட்கார்ந்துட்டீங்க?" என்றனர். அதற்கு கண்ணதாசன், "இல்லை.. நான் இங்க படிக்கும்போது என் வாத்தியார், நீ உருப்பட மாட்டே... உருப்பட மாட்டே...ன்னு எப்பப் பார்த்தாலும் சொல்லிட்டே இருந்தார்... இப்போ நான் உருப்பட்டேனா, இல்லையா? எனக்கு தெரியலையே..." என்றார்.

என்னை எப்படி சொல்லலாம்?

என்னை எப்படி சொல்லலாம்?

கவிஞர் ஏதோ விளையாட ஆரம்பித்து விட்டார் என்று நினைத்தாலும் இதுக்கு என்ன பதில் சொல்வதென்றே யாருக்கும் தெரியவில்லை. திரும்ப திரும்ப "நான் உருப்பட்டுட்டேனா.. இல்லையா"... என்று கேட்டு கொண்டே இருந்தார். அந்த நேரம் பார்த்து எதிர்புறம் இருந்த ஒரு டீக்கடையில் பாட்டு சத்தம் கேட்டது. அது கண்ணதாசன் எழுதிய பாட்டுதான். உடனே கண்ணதாசன், "பாத்தீங்களா... என் பாட்டு ரேடியோவில் எல்லாம் வருது... அப்போ நான் உருப்பட்டேனே, இல்லையா? என் வாத்தியார் எப்படி என்னை அப்படி சொல்லலாம்?" என்றார்.

விரைந்து வந்த வாத்தியார்

விரைந்து வந்த வாத்தியார்

கவிஞர் இப்படி பிடிவாதம் பிடிப்பது ஊர்முழுக்க தெரிந்துவிட்டது. சிலர் ஓடிப்போய் கண்ணதாசனுக்கு பாடம் நடத்திய ஆசிரியரிடமே தகவல் சொன்னார்கள். உடனே வாத்தியாரும் கண்ணதாசனை நோக்கி வந்தார். அவ்வளவு நேரம் ரோட்டில் உட்கார்ந்து சத்தமாக வாத்தியாரை பற்றி பேசிக் கொண்டிருந்த கவிஞர், தூரத்தில் அவர் வருவதை பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தார். வாத்தியார் கிட்ட வர வர... கண்ணதாசனுக்கு கை கால் எல்லாம் வெடவெடவென உதறியது.

ஒன்னுமில்லீங்க ஐயா

ஒன்னுமில்லீங்க ஐயா

வாத்தியார் கிட்ட வந்து நின்றதும், கண்ணதாசனின் தன் கைகளை பவ்யமாக கட்டிக் கொண்டார். இப்போது வாத்தியார் பேசினார், "என்னப்பா... முத்து.. ஏன் இப்படி கீழே உட்கார்ந்துட்டு இங்கே சின்ன பிள்ளை மாதிரி என்ன பண்ணிட்டு இருக்கே?" என்றார். கண்ணதாசனோ, "ஒன்னுமில்லீங்க ஐயா...." என்றார்.

அப்பா மாதிரி ஆசிரியர்

அப்பா மாதிரி ஆசிரியர்

அதற்கு வாத்தியார், "இல்லையே... உன் சமாச்சாரம் வந்து சொன்னார்கள். நான் உன்னை சின்ன வயசுல உருப்பட மாட்டேன்னு சொன்னதைதானே கேட்டே? உன் ஆசிரியர் நான். உன் மேல் உரிமை எடுத்து என்னை தவிர வேறு யார் பேசமுடியும்? ஆசிரியர் திட்டினாலும் பெற்றோர் திட்டினாலும் அது பலிக்காது. அது உங்கள் நல்லதுக்காகத்தானே தவிர வேறு எதுக்காகவும் இல்லை. உன்னை நினைச்சு தினம் தினம் நான் பெருமைப்பட்டுட்டு இருக்கேன். அங்க பார்... விழாவுக்கு நீ வரப்போறன்னு... உனக்காக ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்காங்க. எத்தனை பேர் உன் பேச்சை கேட்க குவிஞ்சு கிடக்கிறாங்க... முதலில் விழாவுக்கு போ... நானும் உன் பேச்சை கேட்க பின்னாலயே வர்றேன்" என்றார்.

வாயடைத்து நின்ற கண்ணதாசன்

வாயடைத்து நின்ற கண்ணதாசன்

ஆசிரியர் பேச பேச கவிஞருக்கோ புல்லரித்து போனது. விளையாட்டுக்காக கண்ணதாசன் அப்படி கேட்டிருந்தாலும், தன் ஆசிரியரை நேரில் பார்த்ததும், அவருக்கு உரிய மரியாதை அளித்த விதத்தை கண்டு எல்லோருமே திகைத்து நின்றார்கள். மளமளவென பேசி கொண்டிருந்தவர், தன் ஆசிரியரிடம் வாயடைத்து நின்றதையும் கவனித்து கொண்டு நின்றார்கள். கடைசியில் விழாவுக்கு கிளம்பி செல்லும்போது கண்ணதாசன் தன் ஆசிரியரின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் வாங்கி சென்றதையும் மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டுதான் நின்றார்கள். உண்மையிலேயே ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஒரு அப்பா, அம்மா போலத்தான்!!

English summary
Kavignar Kannadhasan respect to his teacher
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X