• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோயைப் பரப்பும் ஆறுமுகநேரி தாரங்கதாரா ஆலை.. அவதியில் மக்கள்.. அலட்சியத்தில் அரசு!

|

திருச்செந்தூர்- முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. இந்த ஊருக்கு அருகே உள்ளதுதான் ஆறுமுகநேரி. இங்கு அமைந்துள்ள தாரங்கதாரா ஆலையின் கழிவுகளால் இன்று அப்பகுதி மக்களுக்கு எமனாக மாறி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி செத்துச் செத்துப் பிழைக்கும் அவலத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாக மக்கள் குமுறி வருகின்றனர். மேலும் அரசுத் தரப்பும் இந்த ஆலைக்கு மறைமுகமாக ஆதரவாக இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தாரங்கதாரா ஆலையின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கண்டித்து காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டும், அந்த ஆலையை முற்றுகையிட்டும், கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் மக்கள் எதிர்ப்புகளைக் காட்டினர். தொடர்ந்து போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளது.

ரசாயண ஆலை

ரசாயண ஆலை

ஆறுமுகநேரியில் அமைந்துள்ள இந்த தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலையானது எரிகாரம் எனப்படும் சோடியம் ஹைட்ராக்ஸைடு, திரவ குளோரின், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ட்ரிச்லோரோத்திலீன், டைட்டானியம் டைஆக்சைடு, இரும்பு குளோரைடு, பாலி வினைல் குளோரைடு மற்றும் உப்பு ஆகிய பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது.

கழிவுகள் அனைத்தும் கடலில்

கழிவுகள் அனைத்தும் கடலில்

இதில் பாலி வினைல் குளோரைடு தயாரிப்பதற்காக வினைல் குளோரைடு மோனமர் என்கின்ற மூலப்பொருள் பயன்படுத்தப்படுகின்றது. இங்குள்ள கழிவுகள் அனைத்தும் வாருகால் அமைத்து ஆலை கழிவுகளை கடலில் கலக்க செய்து விடுகின்றனர்.

கெட்டுப் போன கடல் நீர்

கெட்டுப் போன கடல் நீர்

இதன் காரணமாக கடல் நீர் மாசுபட்டு போவது மட்டுமின்றி நிலத்தடி நீரும் கெட்டுப் போயுள்ளது. இதனால் இங்கு வசிக்கும் 40 ஆயிரம் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களும் பல பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

மீனைச் சாப்பிட்டால் தோல் நோய்தான்

மீனைச் சாப்பிட்டால் தோல் நோய்தான்

இங்குள்ள கடலில் பிடிக்கப்படும் கடல் உணவு வகைகளான மீன், நண்டு உள்ளிட்டவைகளும், உப்பும், இந்த பகுதிகளில் விளையும் காய்கறிகள் என அனைத்தும் ரசாயனத்தால் பாதிக்கப்பட்டு தோல் நோய், சுவாச கோளாறுகளை ஏற்படுத்தி மக்களை ஸ்தம்பிக்க வைத்து வருகிறது.

தடை செய்ய கோரிக்கை

தடை செய்ய கோரிக்கை

இதுகுறித்து காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு இணை செயலாளர் ஷாலி கூறுகையில்,

காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக் கமிட்டியினர், நகர்மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் சேர்ந்துதான் தாரங்கதாரா ஆலையின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இனிமேல் எங்களால் இந்த ஊரில் வாழமுடியாத என்கிற அளவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றது ஆலை நிர்வாகம். இந்த தாரங்கதாரா வேதித் தொழிற்சாலை குறித்து தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு எந்தக் கவலையும் இல்லை. அதனால்தான் நாங்கள் வீதிக்கு வந்துள்ளோம் என்றார் கோபத்துடன்.

பல விதங்களில் பாதிப்புகள்

பல விதங்களில் பாதிப்புகள்

தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலையில் தயாரிக்கப்படும் பாலி வினைல் குளோரைடு ரெசின் என்பது குழாய்கள் தாயாரிப்பிலும், மோட்டார் வாகனங்கள், குழாய் இணைப்புகள், கம்பிகள் மற்றும் கேபிள்கள், பாட்டில்கள், கன்டெய்னர்கள், ஒளிப்பட சுருள்கள் மற்றும் நெகிழ்தன்மையுள்ள ரப்பர் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இதன் கழிவுகளால் பலவிதமான பாதிப்புகளை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புற்றுநோய் தாக்கம்

புற்றுநோய் தாக்கம்

மேலும், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் தாரங்கதாரா தொழிற்சாலையின் மாசு நிறைந்த கழிவுநீர் காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என குற்றம் சாட்டுகின்றனர் காயல் நகர மக்கள். 2011 ல் 500பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டியுட் தெரிவித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இவ்வூரில் ஆய்வகம் அமைக்க முடிவு செய்த சமயத்தில் அதுவும் நடக்காமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சருக்குக் கடிதம்

அமைச்சருக்குக் கடிதம்

காயல்பட்டனம் நகர்மன்றத் தலைவர் ஆபிதாசேக், தமிழகஅமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலத்திற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சின் எல்லைக்குள் அமைந்துள்ளது DCW தொழிற்சாலை. இப்பகுதியில் 1958ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்தொழிற்சாலை ஏற்படுத்தும் மாசுவினால், காயல்பட்டினம் மக்கள் பல ஆண்டுகளாக பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். சமீபத்தில் புற்றுநோயும் அதிகரித்துள்ளது.

விரிவாக்க அனுமதி கோரும் நிறுவனம்

விரிவாக்க அனுமதி கோரும் நிறுவனம்

நிலைமை இவ்வாறிருக்க - இந்நிறுவனம், தனது தொழிற்சாலையை விரிவாக்க அனுமதி கோரியிருந்தது. இதனை எதிர்த்து காயல்பட்டினம் மக்கள், 2012ம் ஆண்டு, ஆர்ப்பாட்டமும் நடத்தினர், கோரிக்கை மனுக்களும் வழங்கியுள்ளனர்.

இதுவரை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யாமல், விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதே மக்களின் கோரிக்கை. இதற்கிடையில் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஏப்ரல் மாதம், தொழிற்சாலையின் விரிவாக்கப்பணிகளுக்கு CTE என்ற அனுமதியை வழங்கியுள்ளது.

அனுமதி தரக் கூடாது

அனுமதி தரக் கூடாது

இதனை எதிர்த்து - காயல்பட்டினம் மக்கள் சார்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜூன் 20 அன்று பொது மக்களும், கருப்பு கொடி ஏற்றி, மனித சங்கிலி போராட்டமும் நடத்தினர். எனவே - மக்களிடம் எதிர்ப்பினை பெற்றுள்ள இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எத்தனை தடவைதான் முறையிடுவது...

எத்தனை தடவைதான் முறையிடுவது...

காயல்பட்டினம் பொது மக்கள் சார்பாககடந்த ஆண்டு 2011ல் நவம்பர் நடந்த சுற்றுச்சூழல் துறையின் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தாரங்கதாரா ஆலையை விரிவாக்கம் செய்யக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2012 அக்டோபர் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர். மீண்டும் 12.11.2012ல் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரை சந்தித்து காயல்பட்டினம் கரையையொட்டி அமைந்துள்ள கடல் மீண்டும் செந்நிறமாக மாறியுள்ளது குறித்த புகைப்படம், வீடியோ பதிவுகளை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்தனர்.

அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ஆசிஷ் குமார்

அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ஆசிஷ் குமார்

அவரும் வந்து ஆய்வு செய்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவரிடம் இப்பகுதி மக்கள் தாரங்கதாரா தொழிற்சாலை பல ஆண்டுகளாக கஷ்டங்கள் அனுபவித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் தாரங்கதாரா தொழிற்சாலை கடலில் கழிவு நீரினை திறந்து விடுகிறது. அதே போல இந்த ஆண்டும் கடலுக்குள் கழிவு நீரை திறந்து விட்டனர்.

செந்நிறமாக மாறிய கடல்

செந்நிறமாக மாறிய கடல்

அதனால் காயல்பட்டினத்தை ஒட்டிய கடல் செந்நிறமாக தற்போது மாறியுள்ளது. இதனால் மீன் வளமும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். காயல்பட்டினத்தில் அதிகளவில் புற்று நோய் உருவாகி வருவதற்கு இந்த ஆலையின் கழிவுகள்தான் காரணம். எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகாரும் தெரிவித்தனர்.

போராட்டங்கள் தீவிரமாகும்

போராட்டங்கள் தீவிரமாகும்

தொழிற்சாலையின் தென்கிழக்குப் பகுதியில் கடலில் கலக்கும் கழிவுநீர் ஓடையை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், உறுப்பினர்களான ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஜெ.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொருளாளர் ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலி, காயிதேமில்லத், இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஷேக் முஹம்மத் உள்ளிட்ட நகர பொதுநல அமைப்பினரும் பார்வையிட்டு பாதிப்புகளை அரசுக்குத் தெரியப்படுத்தி உள்ளனர்.இனி தீர்வு கிடைக்க வில்லையெனில் பல்வேறு போராட்ட களத்தில் இறங்கவுள்ளனர்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பலே விளக்கம்

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பலே விளக்கம்

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த 1960ம் ஆண்டு வாக்கில் அயர்ன் என்ற வேதிப்பொருள் அப்பகுதியிலுள்ள ஆற்று முகத்துவாரத்தில் தேங்கியது. உறைந்து போயுள்ள அக்கழிவு ஒவ்வொரு ஆண்டும் மழை நேரத்தில் கடல் நீரோடு கலந்து சிகப்பு நிறமாகி விடுகின்றது. மற்றபடி பாதரசம் என்பதெல்லாம் கிடையாது. தற்போது கழிவுகள் கலப்பதும் இல்லை என்று விளக்கம் அளிக்கின்றனர்.

ஆதாரம் காட்டும் மக்கள்

ஆதாரம் காட்டும் மக்கள்

ஆனால் காயல்பட்டிணம் மக்களோ ஆலையில் இருந்து பாலிதீன் பைகள் விரிக்கப்பட்ட சிறிய கால்வாய் வழியாக கழிவுகள் ஒரு குட்டையில் தேக்கிவைக்கப்பட்டுள்ளதை நம்மிடம் சுட்டிக்காட்டி, அதுதான் மழைக்காலத்தில் கடலில் கலக்கிறது என்று புகார் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச் சூழல் பொறியாளர் கே.கோகுல்தாஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவிற்கு பிறகு ஆலையின் கழிவுகள் வெளியேற்றத்தை தடை செய்யும் முயற்சிகளில் இறங்கிய நிலையில் அவரும் மாற்றப்பட்டார்.

இறுதி வரை போராட மக்கள் முடிவு

இறுதி வரை போராட மக்கள் முடிவு

எனினும் தீர்வு கிடைக்கும் வரை போராடியே தீருவது என்று உறுதியோடு இருக்கின்றனர் காயல்பட்டிணம் பகுதி மக்கள். புற்றுநோய் பயத்தில் வாழ்கின்ற காயல்பட்டிணம் மக்களுக்கும், செங்கடலாக உருவெடுக்கும் வங்க கடலினால் வாழ்விழக்கும் மீனவ மக்களுக்கும் தீர்வு சொல்ல வேண்டிய கடமை மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும்தான் இருக்கின்றது. ஆனால் இதையெல்லாம் தாண்டி 2010ல் இந்த ஆலை அபிவிருத்தி செய்யவும், கூடுதல் கட்டிடம் கட்டவும் விண்ணப்பித்தது. அதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2011ல் மக்கள் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டு கட்டிடம் கட்ட அனுமதியை 2014 பிப்ரவரியில் மத்திய அரசு வழங்கியது. அந்த அனுமதியை தொடர்ந்து 2014 தமிழக அரசும் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து இப்பகுதி மக்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கும் வரும் ஆகஸ்ட் கடைசியில் விசாரணைக்கு வருகிறது.

புன்னைக்காயலில் தடுப்பு அணை

புன்னைக்காயலில் தடுப்பு அணை

புன்னைகாயல் பகுதியை சார்ந்த சுமார் 2 ஏக்கர் நிலம் தாமிரபரணி ஆற்றின் அருகில் உள்ளது. இந்நிலத்தில் உடைமரங்கள் நிறைந்து காட்டுப் பகுதியாக இருந்ததால் பராமரிக்கப்படாமல் கிடந்துள்ளது. இந்நிலையில் ஆறுமுகநேரியில் உள்ள தாராங்க தாரா கெமிக்கல்ஸ் (டிசிடபிள்யூ) ஆலை நிர்வாகத்தினர் அந்த நிலத்தில் உள்ள மரங்களை வெட்டி, ஜேசிபி எந்திரங்கள் மூலம் மணல்களை அகற்றி தடுப்பு அணை ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். ஆத்தூர் பாலத்தின் அருகில் அந்த ஆலைக்காக குடிநீர் எடுக்க பம்பு செட் அமைத்துள்ளனர்.

நிலம் வீணாகிப் போனது

நிலம் வீணாகிப் போனது

ஆற்றுநீர் ஓட்டம் குறையும் போது கடல்நீர் ஏறி வருவதால் தண்ணீர் உப்பாகும் என்பதால் ஆலை நிர்வாகத்தினர் அணை போடுவது வழக்கம். இதற்காக தாமஸ் ரவிச்சந்திரன் என்பவரது நிலத்தில் உள்ள மணலை வெட்டி அணை போட்டுள்ளனர். இதனால் நிலம் முழுவதும் பள்ளமாக்கப்பட்டு அதில் தண்ணீர் தேங்கியுள்ளது. வீடு கட்டுவதற்கு பயன்படும் மணலை பல அடி ஆழத்திற்கு தோண்டி பாழ்படுத்தியதோடு நிலத்தை ஆக்கிரமித்தும் வைத்துள்ள ஆலை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள புன்னைகாயல் கிராம மக்கள் அடுத்தகட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Kayalpattinam and other areas are agitating against DCW firm based nin Arumuganeri. The chemical waste from the firm is spreading cancer among the villagers, people allege.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more