For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உல்லாச விடுதியும், உம்மன் சாண்டியும்.. ராமதாஸ் வெளியிட்ட திடுக் தகவல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: உல்லாச விடுதிகள் நலனுக்காகத்தான் முல்லை பெரியாறு அணை உயரத்தை அதிகரிக்க கூடாது என்று கேரள அரசியல்வாதிகள் குரல் கொடுத்து வருகிறார்கள் என்ற புதுக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக - கேரள எல்லையில் வண்டிப் பெரியாறு என்ற இடத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் உண்ணாநிலை போராட்டம் நடத்தியுள்ளன.

இரு மாநில ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான காங்கிரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆகும். முல்லைப் பெரியாறு அணை சிக்கல் என்பது முடிந்து போன ஒன்றாகும்.

தீர்ப்பு

தீர்ப்பு

முல்லைப் பெரியாறு வழக்கில் 07.05.2014 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணை நீர்மட்டத்தை உடனடியாக 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்ட பின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆணையிட்டது.

வலிமை

வலிமை

அதன்படி நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முல்லைப்பெரியாறு அணை மிக வலிமையாக இருப்பதாக அதை ஆய்வு செய்த வல்லுனர் குழு அளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு தான் உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.

புதிய அணை கூடாது

புதிய அணை கூடாது

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் உறுதியாக கூறிவிட்டனர். ஆனால், அந்த தீர்ப்பை மதிக்காமல் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தமிழகம் ஒத்துழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது உச்சநீதிமன்ற அவமதிப்பு மட்டுமின்றி, தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.

உம்மன்சாண்டி

உம்மன்சாண்டி

அதிலும், குறிப்பாக கேரள முதலமைச்சராக இருந்த உம்மன்சாண்டி அவர்களே இந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருப்பது பொறுப்பற்ற செயல் ஆகும். இப்போராட்டத்தின் போது உம்மன் சாண்டி தெரிவித்தக் கருத்துக்கள் ஏற்க முடியாதவையாகும்.

ஏமாற்றுவேலை

ஏமாற்றுவேலை

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்பட்டாலும் தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் விடப்படும். அதை உறுதி செய்த பிறகு தான் இப்போதுள்ள முல்லைப்பெரியாறு அணை இடிக்கப்படும் என்று உம்மன்சாண்டி கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.

சிரமம் உள்ளது

சிரமம் உள்ளது

இப்போதுள்ள முல்லைப் பெரியாற்று அணையே தேனி மாவட்ட படுகை மட்டத்திற்கு கீழ் இருப்பதால் அந்த அணையின் நீர்மட்டம் 105 அடிக்கு மேல் உயர்ந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். முல்லைப் பெரியாற்றில் புதிய அணை இப்போது உள்ள அணை மட்டத்திலிருந்து 500 அடிக்கும் கீழ் கட்டப்பட்டால் குறைந்தபட்சம் 605 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்பட்டால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இது முழுக்க முழுக்க சாத்தியமற்ற ஒன்றாகும். தமிழக மக்களை ஏமாற்றும் நோக்குடன் தான் இந்த வாதத்தை சாண்டி முன்வைக்கிறார்.

முதல்வர் முதிர்ச்சி

முதல்வர் முதிர்ச்சி

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது சட்டப்படி சாத்தியமில்லை. இவ்விஷயத்தில் தமிழக அரசின் ஒப்புதலின்றி எதையும் சாதிக்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார். அவரது இந்த முதிர்ச்சியான கருத்தை மதித்து இரு மாநில உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைக்காமல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை முன்வைத்து தேவையற்ற, மலிவான அரசியல் செய்வதும் உம்மன் சாண்டி போன்ற மூத்த தலைவர்களுக்கு அழகல்ல.

உல்லாச விடுதி

உல்லாச விடுதி

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதால் கேரள மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அணையின் நீர்த் தேக்கப் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள உல்லாச விடுதிகள் தான் நீரில் மூழ்கும். இதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உல்லாச விடுதி உரிமையாளர்களின் குரலாகத் தான் உம்மன் சாண்டி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றனர். இது நல்லதல்ல.

முல்லை பெரியாறு

முல்லை பெரியாறு

பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரள அரசும், அம்மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
Kerala Congress alliance playing for Resort owners in the Mullai Periyar resorvoir issue, says Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X