For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலைகள் விளைந்த நிலம் - பகுதி 2

Google Oneindia Tamil News

-க.ராஜீவ் காந்தி

கடந்த பகுதியை வாசித்த ஒரு வாசகர் கமெண்ட் பகுதியில் தஞ்சாவூர் பகுதிக்கு சமீபத்தில் சென்றதாகவும் அங்கே பசுமை கொஞ்சி விளையாடுவதாகவும் குறிப்பிட்டு ஏன் டெல்டாவைப் பற்றி மட்டும் எழுதுகிறீர்கள்? என்று ஆதங்கப்பட்டிருந்தார். உண்மையில் தஞ்சாவூர் மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்கவே திட்டமிட்ட வறட்சியை உருவாக்கி விட்டார்கள்.

தஞ்சாவூரில் ஆங்காங்கே இன்னும் கொஞ்சம் விவசாயம் பம்ப்செட் புண்ணியத்தால் நடக்கிறது. ஆனால் நீங்கள் பார்த்த பசுமை என்பது நெல்லா புல்லா என்பது சந்தேகமே... காரணம் சமீபத்தில் பெய்த மழையாலும் ஜுலை மாதம் திறந்துவிடப்பட்ட கொஞ்ச நஞ்ச தண்ணீராலும் வயல்வெளிகளில் புற்கள் இருக்கலாம். ஆனால் இந்த தண்ணீரும் மழையும் விவசாயிகளுக்கு முழு நம்பிக்கையை தந்துவிடாது. ஆடியில் தான் விதையே விதைப்பார்கள். இந்த ஆடியில் அங்கே 30 சதவீத வயல்களே விதைக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் சுத்த மோசம். நான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலுமே நிலவுகின்ற சூழ்நிலையையும் வேதனையையும்தான் விளக்குகிறேன். நான் வளர்ந்த சூழலை சொன்னதால் ஒருவேளை அப்படி தெரிந்திருக்கலாம்.

Kolaigal Vilaintha Nilam Part 2

இது தஞ்சாவூர் பிரச்னை, இது மதுரை பிரச்னை என்று எத்தனை நாட்கள் தான் பிரித்து பார்த்துக்கொண்டிருக்கப்போகிறோம் என்று தெரியவில்லை. நெடுவாசல் போராட்டம் 120 நாட்களைத் தாண்டிவிட்டது. கதிராமங்கலம் போராட்டம் நூறு நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்த பிரச்னைகள் எல்லாம் அந்தந்த ஊர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அல்ல. அங்கே போராடுபவர்கள் சுயநலத்துக்காக தங்களுக்காக மட்டுமே போராடவில்லை. சோறு சாப்பிடும் ஒவ்வொருவருக்குமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

நம்மைச் சொல்லி தவறில்லை. இங்கே நாம் எதைப் படிக்க வேண்டும், எதைப் பற்றி பேச வெண்டும், எதை சிந்திக்க வேண்டும் என்பதைக்கூட ஆட்சியாளர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் விவசாயிகள் கொத்துக் கொத்தாக மடிந்தனர். நவம்பர், டிசம்பர், ஜனவரி செய்தித்தாள் இருந்தால் எடுத்துப் படித்துப் பாருங்கள். ஒரே நாளில் 20க்கு மேற்பட்ட விவசாயிகள் கூட தமிழ்நாடு முழுக்க பலியாகி இருப்பார்கள். விவசாய பலிகள் இரண்டு விதங்களில் நடந்தேறின. ஒன்று தற்கொலைகள். இன்னொன்று அதிர்ச்சி மரணங்கள். இறந்தவர்களின் பலி எண்ணிக்கை ஜனவரியிலேயே இருநூறைத் தொட்டுவிட்டது. ஆனால் அந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்? என்பது நினைவிருக்கிறதா?

Kolaigal Vilaintha Nilam Part 2

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, தொடர்ந்து அவரது மரணம், அதன் பின் ஆட்சி மாற்றம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், சமாதி தியானங்கள், தர்மயுத்தம், சொத்துக்குவிப்பு தீர்ப்பு, ஆர்கே நகர் இடைதேர்தல் என்று மகா பிசியாக இருந்தோம். அந்த சமயத்தில் தங்களது வாழ்வாதாரம் இழந்து கடன் தொல்லையாலும் பொருளாதார இயலாமையாலும் இறந்துபோன விவசாயிகளின் எண்ணிக்கை வெறும் கணக்கோடு நின்றுபோனது. விளைவு முதலில் 82 விவசாயிகள் வறட்சிக்கு பலியானதாக சொன்ன தமிழக அரசு பின்னர் அவர்களும்கூட வறட்சியால் சாகவில்லை. சொந்தக் காரணங்களுக்காகத்தான் இறந்தனர் என்று பொய் சொன்னது. அதுவும் உச்ச நீதிமன்றம் ஏகப்பட்ட கண்டனங்களை சொல்லி உண்மைக் கணக்கைக் கேட்டபோது வேறு வழியில்லாமல் அரசு முழுப்பூசணிக்காயை வெறும் தட்டில் வைத்து மறைத்தது.

மக்களை எளிதில் திசை திருப்பும் வித்தைகள் ஆட்சியாளர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது. எனவேதான் வாழ்வாதாரத்துக்காக விவசாயிகள் போராட்டங்களை அமைச்சரும் முதல் அமைச்சரும் கொச்சைப்படுத்துகிறார்கள். ஏளனம் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில்தான் எது நடந்தாலும் அதனை மூடி மறைப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் ஆட்சியாளர்கள். டெங்கு காய்ச்சலால் எத்தனை பேர் மடிந்தாலும் கூட அமைச்சர் 'தமிழகத்தில் டெங்கு அபாயம் இல்லை' என்று அறிக்கை வாசிப்பார். நம் உடலில் ஒரு நோய் வந்தால் அது நோய் என்பதை அறிந்து தெரியபடுத்தினால்தான் சிகிச்சை அளித்து அந்த நோயைச் சரிசெய்ய இயலும். மாறாக நோயே இல்லை என்று கடைசி வரை சாதித்துக்கொண்டு சிகிச்சையை மறுத்தால்...? அந்த நோய் முற்றி நம்மை மரணத்தில்தான் தள்ளும். தமிழக அரசு அந்த நிலையைத்தான் ஒவ்வொரு பிரச்னையிலும் ஏற்படுத்துகிறது. அதில் மிக முக்கியமானது விவசாயிகளின் பிரச்னை.

Kolaigal Vilaintha Nilam Part 2

வாழ்க்கையில் துன்பகரமானது புறக்கணிப்பு. மிகவும் துன்பகரமானது நாம் தவறே செய்யாதபோது நமக்கு அளிக்கப்படும் புறக்கணிப்பு. அதைவிட துன்பகரமானது நாம் சரியான ஒன்றைச் செய்யும்போது அனுபவிக்கும் புறக்கணிப்பு. அந்த பரிசைத்தான் தந்துக்கொண்டிருக்கிறோம் நம் உணவுக்காக போராடும் நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுக்கு. கதிராமங்கலத்தில் போராட்டம் எப்படி தொடங்கியது தெரியுமா?

- வி(ழி)தைப்போம்

English summary
Kolaigal Vilaintha Nilam, a mini series on Delta farmers part 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X