For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகம்; நான் என்பது இனி என் லட்சியம்தான்! - கௌசல்யா #KousalyaSankar

By Shankar
Google Oneindia Tamil News

கௌசல்யா... இந்திய சாதிய கட்டமைப்பின் மீதும், சாதிய வெறியின் மீதும் தன்னுடைய நேர்மையை ஆயுதமாக்கி பிரயோகித்த இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மனித நேயப்போராளி. இளம் புரட்சியாளர்.

தன்னுடைய கணவனை, தோழனை, தோழனின் அன்பை... தன்னிடம் இருந்து ஈவிரக்கமின்றி பறித்துக்கொண்ட சாதிக்கு எதிராக தானே முன் நின்று களமாடப் புறப்பட்ட கௌசல்யா இந்த இளம் வயதில் இவ்வளவு பெரிய புரட்சியாளராக இரண்டே வருடத்தில் உருவெடுக்க ஒரே ஒரு காரணம்தான்... அது அன்பு... தன் இந்த சமூகத்தின் மீதான, சக மனிதர்கள் மீதான பேரன்பு. தன்னிடமிருந்து ஒரு பேரன்பு பறிக்கப்பட்டபோது தனக்கு ஏற்பட்ட வலி... இன்னொரு சக மனுஷிக்கு சக மனிதனுக்கு ஏற்படக்கூடாது என்ற அன்பின் வெளிப்பாடு. அங்கிருந்துதான் தொடங்கியது சாதிக்கெதிரான கௌசல்யாவின் பயணம்.

Kousalya observes Sankar's 2nd death anneversary

அப்படி ஒன்றும் அந்தப்பயணம்.. இயல்பான ஒன்றல்ல. ஒரு பக்கம் துரத்தும் சாதி வெறி. இன்னொரு பக்கம் தினம் தினமும் இதயம் கீறிப்போகும் எத்தனையோ விமர்சனங்கள். ஆனாலும் அத்தனையையும் கடந்து வந்த கௌசல்யா, தீர்க்கமான உறுதியோடும் சமரசமில்லாத நோக்கத்தோடும் எவிடென்ஸின் கதிரின் உதவியோடு நீதிமன்றத்தின் கதவுகளை மிக ஓங்கித்தட்டினார். சமூக நீதியும் சகமனிதர்கள் மீதான கௌசல்யாவின் அன்பும் வென்றது.

சாதியத்திற்கு எதிராக மிக வலிமையாகவும் வரலாற்றுப் புரிதலோடும் களமாடிய புரட்சியாளர்களின் வரிசையில் இந்த யுகத்தின் பிரதிநிதியாக, இந்த தலைமுறையின் புரட்சியாளராக தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டார் கௌசல்யா.

எந்த ஊரில் சாதியும், சாதிவெறியும் தன்னுடைய கணவனை இரத்தவெள்ளத்தில் சாய்த்ததோ, அதே உடுமலைப்பேட்டையில் அதே நாளில் சங்கரின் இரண்டாமாண்டு நினைவேந்தலை 'பொதுவுடைமைப் போராளி' தோழர் நல்லகண்ணுவின் முன்னிலையில் தமிழகத்தின் மிக முக்கியமான அமைப்புகளின் பிரதிநிதிகள், மிக வீரியமான சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் நடத்தியதோடு, 'சங்கர் சமூகநீதி அறக்கட்டளை'யையும் தொடங்கி உள்ளார்.

முழுக்க முழுக்க ஒரு சில நண்பர்களின் உதவியோடு இந்தப்பெரிய நிகழ்வை நடத்திய கௌசல்யாவிற்காக எத்தனையோ ஊர்களில் இருந்து வந்திருந்தவர்கள் காட்டிய அன்பு மிக நெகிழ்ச்சியானது. திடீரென கொட்டிய மழையில் குடைபிடிக்காமல் மேடையை விட்டு நகர்ந்து செல்லாமல் எத்தனை பெரிய மழை வந்தாலும் இங்கேயே இருப்போம்... நிகழ்வை நடத்துவோம் என்று சொல்லாமல் சொன்னார்கள். தோழர் நல்லகண்ணுவில் தொடங்கி கௌசல்யா உள்பட அனைவருமே நனைந்திருந்தார்கள். ஆனால்... எவருமே நனைவதற்காக யோசிக்கவும் இல்லை. எழுந்து ஓடவும் இல்லை.

Kousalya observes Sankar's 2nd death anneversary

சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை அறிமுகம் செய்து வைத்து கௌசல்யா ஆற்றிய உரை. சாதியத்திற்கு எதிரான போரின் மிக முக்கியமான நகர்வாக... இந்திய வரலாற்றின் மிக முக்கியமான உரைகளில் ஒன்றாகவே பார்க்கிறேன்.

நிகழ்ச்சியின் சிறப்பும் கௌசல்யாவின் உரைதான். அந்த உரை...

"என் வாழ்வின் மிக முக்கியமான தருணம் இது. உங்கள் எல்லோருக்கும் இது சங்கரின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! என்னைப் பொருத்தவரைக்கும் இது சங்கருக்கு இரண்டாம் பிறப்பு!

இதே மண்ணில் சங்கரோடு கைகோர்த்து நெஞ்சம் நிறைய காதலும் கனவும் சுமந்து திரிந்திருக்கிறேன். மீண்டும் என் சங்கரோடு கைகோர்த்து அன்று போல் காதலும் காமமும் சுமந்து நடைபோட ஆசைப்படுகிறேன். அதற்காகவே அவனை மீண்டும் உயிர்ப்பிக்கிறேன். அன்று சுமந்திருந்த காதல் இன்றும் அப்படியே இருக்கிறது. ஆனால் அன்று சுமந்திருந்த கனவு இன்று அடியோடு மாறியிருக்கிறது. அன்று எங்கள் இருவரின் தனிப்பட்ட எதிர்காலம் குறித்த கனவு மட்டுமே இருந்தது. இன்று என் கனவு என்பது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் விடுதலையும் சமத்துவமும் தான். அன்று சங்கர் மட்டுமே என் உலகமாக இருந்தான். இன்று நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகமாக மாறியிருக்கிறது. நான் என்பது இனி என் லட்சியம் தான்! சாதி ஒழிக! தமிழ் வெல்க என்கிற முழக்கம்தான்.

இந்த மேடைக்குப் பின்னால் இருக்கும் காவல் நிலையத்தை என்னால் மறக்கவே முடியாது. என்னையும் சங்கரையும் நடுச்சாலையில் வைத்துக் கடத்த முயற்சித்த போது இதே காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். வந்தவுடன் அன்று உள்ளே இருந்த காவலர்கள் சங்கரைத்தான் குற்றவாளி போல் நடத்தினார்கள். இது நடந்து கொண்டிருக்கும்போதே எங்களை கடத்த முயன்ற குற்றவாளிகள் சுதந்திரமாய் வெளியே போனார்கள். அவர்களிடம் இவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. நாங்கள் திருமணம் முடித்ததை குற்றமாகவும், கடத்த வந்ததை அவர்களின் கடமையாகவும் பார்த்தது இந்த காவல்துறை. அன்றே சட்டப்படி எங்கள் பக்கம் நின்று அவர்கள் மீது உருப்படியான நடவடிக்கை எடுத்திருந்தால் சங்கர் இன்று என்னோடு வாழ்ந்து கொண்டிருந்திருக்கலாம். இப்படி ஒரு மேடை அமைத்து அவனுக்கான நினைவேந்தலும் அவன் பெயரில் அறக்கட்டளை தொடக்க விழாவையும் நடத்தவேண்டிய தேவை இருந்திருக்காது.

சங்கரின் நினைவேந்தலுக்குப் பொதுவெளியில் அனுமதி கேட்டால் கொடுக்க முடியாது என்று மறுக்கிறது அதே காவல்துறை! கேட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்குமாம். பாதுகாப்பு தர முடியாதாம்! சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கத்தானே நீங்கள் இருக்கிறீர்கள். எங்களுக்குப் பாதுகாப்பு தருவதைவிட உங்களுக்கு என்ன வேறு வேலை இருக்கிறது என்று நான் கேட்கவில்லை. இந்த நிகழ்வை மறுத்ததை எதிர்த்து நாங்கள் போட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இப்படிக் கேட்டிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி சங்கர் நினைவேந்தல் பேரணிக்காகச் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்கிறது காவல்துறை. இதுவரை மற்றவர்கள் நடத்துகிற நிகழ்ச்சியில்தான் நான் பங்கேற்றிருக்கிறேன். இதுதான் நானே முன்னெடுத்து நடத்தும் முதல் நிகழ்வு. மக்களுக்கான ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் போராட்டங்களுக்கும் தோழர்கள் படும்பாட்டை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். சுவரொட்டிகளைக் கிழித்தெரிவதும் பிடுங்கிக் கொள்வதும் அந்தத் தோழர்களின் நீண்டகால உழைப்பைத் திருடுவதற்குச் சமம்.

Kousalya observes Sankar's 2nd death anneversary

தோழர்களே, இனி நீங்கள் சங்கருக்கான நினைவேந்தலை பொதுவெளியில் நடத்தலாம். சுவரொட்டிகள் ஒட்டலாம். இனி இதை எவராது தடுத்தால் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வோம்.

இதோ நீதிமன்ற ஆணை என் கையில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் என்னிடம் கேட்டுப் பெற்றுகொள்ளுங்கள். நீங்கள் நிகழ்வுக்கு அனுமதி மறுத்தவுடன் ஒதுங்கிப் போவதற்கு நான் கோழையல்ல... பெரியாரின் பேத்தி!

சங்கர் சமூக நீதி அறக்கட்டளை தொடங்கியதற்கான காரணத்தை இங்கே வெளியிட்டுள்ள சிறு நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். எனக்கென்று சில கொள்கைகள் உள்ளன. அவற்றை உள்வாங்கி கற்றுதான் இவைதான் என் கொள்கைகள் எனத் தீர்மானித்தேன். அது சார்ந்த சில புரிதல்களை இங்கே பகிரத்தான் வேண்டும். கருத்து வேறுபாடுகள் இங்கே கூடியிருக்கிற நமக்குள் இருக்கலாம். இலக்கு வேறுபாடு இருக்காது என உறுதியாக நம்புகிறேன். அதனடிப்படையில் பணிவோடு சில கருத்துகளை என் ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்துகிறேன். இது குறித்து எனை இடித்துரைக்க எல்லா உரிமையும் இங்குள்ள எல்லோருக்கும் உண்டு. எதையும் ஆய்ந்து பார்க்க எப்போதும் அணியமாக இருப்பேன்.

சாதி ஒழிப்பிற்கு உழைப்பவர்கள் தமிழ், தமிழ்நாட்டின் பிற உயிராதாரமான உரிமைகளுக்கு உழைத்தவர்களை புறம் தள்ளுவதும் தமிழக உரிமைக்கு உழைப்பவர்கள் சாதி ஒழிப்பிற்கும் சமூகநீதிக்கும் உழைத்தவர்களை புறந்தள்ளுவதும் எனக்கு வருத்தமளிக்கிறது. இப்படிச் சொல்வதனால் அவருக்கு இதில் அக்கறையில்லை இவருக்கு அதில் அக்கறையில்லை என்று நான் சொல்வதாகப் பொருள் கொண்டு விட வேண்டாம். ஆனால் நடைமுறையில் பல நேர்வுகளில் நாம் பிளந்து நிற்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. சாதி ஒழிப்புக்கு தமிழ், தமிழர் உரிமைக்கான போராட்டங்களே அடிப்படை. அதேபோல் தமிழ்ச் சமூக விடுதலைக்கு சாதி ஒழிப்பே அடிப்படை. இந்த இரண்டு காரியங்களையும் செய்துகொண்டுதானே உள்ளோம் என்று நீங்கள் சொல்லலாம். இதில் ஒரு களத்தில் நின்று கூர்மையாகப் போராடுபவர்களுக்கு அந்த இன்னொரு களத்தின் வெற்றி லட்சியமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இதை அடிப்படையாக் கொண்டதே 'சாதி ஒழிக தமிழ் வெல்க' என்கிற அறக்கட்டளை முழக்கம். அதனால் இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. சாதி ஒழிப்பும் தமிழ் விடுதலை எனும் தமிழ்ச் சமூக விடுதலையும் நேர்கோட்டில் நிற்கிற உயிர்க் கொள்கைகளாக மாற வேண்டும் என விரும்புகிறேன். அப்படி இருந்தால்தான் அது சாதி ஒழிப்பிற்கும் பயன் தரும் விடுதலைக்கும் பயன் தரும் என நம்புகிறேன். அப்படிப்பட்ட கருத்தியல் பெற்ற ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

இளம் தலைமுறை என்றால் அதில் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். என் தலைமுறையை சாதி ஒழிக தமிழ் வெல்க என்ற கொள்கை அடிப்படையில் உருவாக்க நான் என்னை ஒப்புகொடுத்து உழைப்பேன் என இந்த நாளில் சங்கரின் பெயரால் உறுதி அளிக்கிறேன்.

நான் அறிவித்துக் கொண்ட இந்த நோக்கங்களுக்காக பொறுமையாகவும் நிதானமாகவும் என் வாழ்நாள் முழுக்கப் பங்களிப்பேன். என்னோடு இந்தப் பணியில் இணைய இளையவர்களை அதாவது என் சக நண்பர்களை உரிமையோடு அழைக்கிறேன்.

ஒன்று மட்டும் உறுதி நண்பர்களே, புகழுக்கும் பதவிக்கும் சமரசத்துக்கும் அதிகார நெருக்கத்துக்கும் இங்கே இடமில்லை. சட்டத்திற்கு உட்பட்டும் சனநாயகத்திற்கு உட்பட்டும் அறவழியில் மக்களுக்காக தொண்டுள்ளத்தோடும் பாட்டாளி உணர்வோடும் நாம் உழைக்க வேண்டும்.

இறுதியிலும் இறுதியாகப் பசியற்ற சுரண்டலற்ற எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் அற்ற பாட்டாளிகள் சமூகத்தை இந்த தமிழ் நிலத்தில் உருவாக்க வேண்டும் . அதற்குக்கூட சாதி ஒழிக! தமிழ் வெல்க! எனும் முழக்கமே அதன் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன். அப்படி ஒரு பொன்னுலகைப் படைக்க என் சிறு பங்களிப்பை வாழ்நாள் முழுக்கச் செய்யக் காரணமான சங்கரை உடன் அழைத்துப் பயணிப்பேன்.

சங்கர் நினைவேந்தலில் எல்லாவற்றையும்விட நாம் ஒன்றை பேசக் கடமைப்பட்டிருக்கிறோம். அது ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்! சங்கரின் நினைவேந்தல் நாளில் மட்டுமல்ல மற்ற எல்லாக் காலங்களிலும் இந்தத் தனிச்சட்டத்திற்காக நாம் உழைத்தாக வேண்டும். சாதிய ஆணவப் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி!

நம் இலக்கு வெல்ல ஒன்றுபடுவோம்."

எப்படி நியாயப்படுத்த முடியும்?

இரண்டே வருடத்தில் மிகத்தெளிவான அரசியல் புரிதலோடும் எழுச்சியோடும் புறப்பட்டிருக்கும் கௌசல்யாவின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஆதரவையும் நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

ஆம்... நண்பர்களே... சக மனிதர்களே... சக இந்தியர்களே... சக தமிழர்களே... நம்மிடையே உள்ள சாதியமும் சாதி வெறியும் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் அச்சப்பட வைக்கிறது. அதுதான் உண்மை. அதனால் தான் அத்தனை பேரும் கௌசல்யாவின் பாதுகாப்பைப்பற்றி பேசுகிறார்கள்.

சிறியதோ பெரியதோ உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பியபடிதானே வாழ ஆசைப்படுவீர்கள். நீங்கள் விரும்பியவர்களுடன்தானே வாழ ஆசைப்படுவீர்கள். இது மிக இயல்பான ஒன்றுதானே. சராசரி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள சராசரியான ஆசை தானே. கௌசல்யாவும் அப்படித்தானே தனக்கான ஒரு மிகச்சிறிய வாழ்க்கையை, தனக்குப்பிடித்த சங்கரோடு வாழ ஆசைப்பட்டார். அதைத்தானே இந்த சமூகம் அழித்தது. அதைத்தானே இந்த சாதியம் சிதைத்தது. அதைத்தானே பெற்ற உறவுகளும் இரத்த உறவுகளும் நடுரோட்டில் பட்டப்பகலில் அறுத்தது. எதன் பெயரால் நீங்கள் இதை நியாயப்படுத்துவீர்கள்?

எதன் பெயரால் நீங்கள் இதை நியாயப்படுத்த முன்வந்தாலும் நீங்கள் உங்களுக்கு எதிராக, உங்களைப்போன்ற சக மனிதர்களுக்கு எதிராக நீங்கள் நிற்பதாகவே பொருள்படும். தொட்டு உணர முடியாத, உருவமில்லாத சாதியை, சாதியின் புனிதத்தை உங்கள் நியாயங்களுக்கான அற்பக் காரணங்களாக நீங்கள் காட்டுவீர்கள் எனில்... நீங்கள் அன்பு செய்யவும் அன்பு செய்யப்படவும் தகுதியற்றவர்கள் ஆகி விட்டீர்கள் என்றே அர்த்தம்.

Kousalya observes Sankar's 2nd death anneversary

உங்கள் புராணங்களில் உங்கள் இதிகாசங்களில், உங்கள் காவியங்களில், உங்கள் காப்பியங்களில்... முல்லைக்குத் தேர் கொடுத்தவன் என்றும், புறாவிற்காக தன் சதை கொடுத்தவன் என்றும், கணவனுக்காக மதுரை எரித்தவள் என்றும், பசுவிற்காக மகனை தேர்க்காலில் மாய்த்தவன் என்றும்... எத்தனையோ பெருமை பேசும் நீதிக்கதைகளை பன்னெடுங்காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவையெல்லாம் நீங்கள் கேள்விப்பட்ட கதைகளே அன்றி கண்ணால் கண்டதில்லை. ஆனால், கௌசல்யா, உங்கள் கண்முன்னே நீதியின் தேவதையாக நிற்கிறார்.

சமூக நீதிக்காக, சம நீதிக்காக, மனித நீதிக்காக... உயிர் தந்த உறவுகளுக்கு எதிராகவும் நிற்கிறார். உயிர் தந்த உறவுகளாகவே இருந்தாலும் அந்த உறவுகள் இன்னொரு உயிரை ஈவிரக்கமின்றி கொன்று வீசுவதை அனுமதிக்க முடியாது... சகித்துக்கொள்ள முடியாது என்று உறுதியாக அறிவிக்கிறார். உங்கள் புராண நாயகர்களை, உங்கள் இதிகாச நாயகர்களை, உங்கள் காப்பிய நாயகிகளை, உங்கள் காவியங்களின் கதாபாத்திரங்களை இதே காரணங்களுக்காக கொண்டாடி, போற்றி வணங்கவும் தலைப்படுகிற நீங்கள்... அதே மரபில் அதே வழியில் அதன் தொடர்ச்சியாக, அதன் நீட்சியாக, நீங்களும் வாழும் காலத்தின் சாட்சியாக நிற்கும் கௌசல்யாவிற்கு எதிராக நிற்பீர்கள் எனில்.... எப்படிப்பட்ட பொய்யான ஒரு சமூகத்தின் பொய்யான அங்கமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

சக மனிதன் மீதான அன்பும், தனி மனித உரிமையும் தான்... மனிதத்தின் ஆதியும் அந்தமும் அடிப்படையும். அன்பின் பக்கம் நில்லுங்கள். தனி மனித உரிமை காக்க நீங்கள் முன்வரவில்லை எனினும் அதற்கெதிராக அணி திரளாதீர்கள். ஏனெனில் இந்த சமூகம் என்பது உங்கள் குழந்தைகளும் வாழ்கிற, வாழப்போகிற ஒரு சமூகம் என்பதை உணருங்கள். நம் குழந்தைகளின் கைகளில் மிக அழகான ஒரு அன்பின் சமூகத்திற்கான நம்பிக்கையின் விதையை பரிசளிக்க நாம் ஒவ்வொருவரும் நம் தோழி, நம் சகோதரி, நம் மகள்... கௌசல்யாவுடன் துணை நிற்போம். என் மனித சமூகமான உங்கள் மீதான அன்புடன், இந்த சமூகத்தை நேசிக்கும் கௌசல்யா மீதான பேரன்புடன் முடிக்கிறேன்.

- முருகன் மந்திரம்

English summary
Kousalya Sankar, the victim of honour killing has observed the second year memory of her murdered husband Sankar on March 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X