For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தசரா கோலாகலம்.. மைசூரில் சுதா மூர்த்தி துவக்கி வைத்தார்.. குலசை விழாவில் கடம்பூர் ராஜு பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: மைசூர், மற்றும் குலசேகரபட்டிணத்தில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா இன்று முறைப்படி துவங்கியது.

மைசூரில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் 10 நாட்கள் நவராத்திரி, தசரா விழா சிறப்பு மிக்கது. 'மைசூரு தசரா எஷ்டொந்து சுந்தரா' என்ற பேச்சு வழக்கு, கர்நாடகாவில் உண்டு. 'மைசூர் தசரா.. எவ்வளவு அழகானது' என்பது இதன் பொருள்.

மைசூர் மன்னர் குடும்பத்தின் தர்பார், அரசு சார்பிலான விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் என மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

[குலசேகரபட்டிணம் தசரா திருவிழா தொடங்கியது - பக்தர்கள் காப்புகட்டி வேடமணிந்தனர்]

இன்போசிஸ்

இன்போசிஸ்

இப்படி சிறப்பு மிக்க தசரா விழாவை, ஒவ்வொரு ஆண்டும் ஆன்மீக பெரியவர், ஒரு முக்கிய பிரமுகர், மாடதிபதி என யாராவது ஒருவர் மைசூர் தசராவை துவக்கி வைப்பார்கள். இவ்வாண்டு, மைசூர் தசராவை, இன்று, சுதா மூர்த்தி, துவக்கி வைத்தார். இவர், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண் மூர்த்தியின் மனைவியாகும். துவக்க விழா நிகழ்ச்சியில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து, இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தின் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.25 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று சுதா மூர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

குலசை முத்தாரம்மன் கோயில்

குலசை முத்தாரம்மன் கோயில்

இதேபோல, தமிழகத்தில் தசரா விழாவிற்காக மிகவும் சிறப்பு பெற்று விளங்கும், குலசை முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இங்குள்ள ஞானமூர்த்தி சமேத முத்தாரம்மன் திருக்கோயில் பழம் பெருமை வாய்ந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து பல்வேறு விரதங்கள் அணிந்து, வீடு வீடாக சென்று காணிக்கை சேகரித்து, அம்மனுக்கு சமர்பிப்பார்கள். காப்புக்கட்டு நிகழ்வில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேடமிட்டு காணிக்கை சேகரிப்பு

வேடமிட்டு காணிக்கை சேகரிப்பு

இப்படி வேடமிட்டு காணிக்கை சேகரிப்பதில் ஒரு அர்த்தம் உள்ளது. உயர்ஜாதி என்று எண்ணிக்கொள்வோராக இருந்தாலும், பணக்காரர்களாக இருந்தாலும், வேடம் அணிந்த பிறகு, ஏழை வீட்டிலும், பிற ஜாதியினர் வீட்டிலும், பிற மதத்தவர்கள் வீட்டிலும் போய் நின்று "முத்தாரம்மனுக்கு காணிக்கை போடுங்க.." என்று சொல்லி காணிக்கை கேட்டாக வேண்டும். ஆன்மீகத்தின் அடுத்த நிலைக்கு செல்லவிடாமல் மனித மனத்தில் தடைக்கல்லாக நிற்கும் ஆணவம் இதன் மூலம் அழிக்கப்படுகிறது. ஆணவத்தை ஒழித்துக்கட்டுவதே காணிக்கை சேகரிப்பதின் தாத்பர்யம். நவராத்திரியின், 10 நாட்களும் அம்பாள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றத்தில் எழுந்தருளி வீதி உலா வருவாள்.

அம்மன் மீது பக்தி

அம்மன் மீது பக்தி

குலசை முத்தாரம்மன், பிள்ளை வரம் தருபவள். தீராத நோய்களையும் தீர்த்து வைப்பவள். மாங்கல்ய பலம் தருபவள். பணக்கஷ்டத்தை போக்கி செல்வ வாழ்க்கை தருபவள் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் இருக்கிறது. எனவே எந்த ஊரில் பணி அல்லது தொழில் நிமித்தமாக இருந்தாலும், தசராவிற்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு வருகை தந்து, அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். தங்களை மேலும், மேலும் செழிப்பாக்கி வாழ வைப்பதாக அம்பிகையை அவர்கள் புகழ்கிறார்கள்.

சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

குலசேகரன்பட்டிணத்தில் நவராத்திரி திருவிழாவின் பத்தாவது நாள் நடைபெறும் மகிஷாசூர சம்ஹாரம் புகழ் பெற்றது. கடற்கரையில், அம்பிகை, மகிஷனை வதம் செய்து, பக்தர்களை காத்தருளும் நிகழ்வை காண பல லட்சம் பக்தர்கள் குலசையில் குவிவார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

English summary
Philanthropist, chairperson of Infosys Foundation and Padma Shri awardee Sudha Murty inaugurated the Mysuru Dasara atop the Chamundi Hill at 7.30 am on Wednesday. Kulasai dasara celebrations started as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X