For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2014 பிளாஷ்பேக் : கும்பகோணம் சிறார்கள் கருகிய வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் வந்த தீர்ப்பு

Google Oneindia Tamil News

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானது தொடர்பான வழக்கில், 10 ஆண்டு விசாரணைக்குப் பிறகு இந்தாண்டு தீர்ப்பு வழங்கப் பட்டது. நாட்டையே உலுக்கிய இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப் பட்டவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 11 பேர் நிரபராதிகள் என்றும் விடுதலை செய்யப் பட்டனர்.

கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி கும்பகோணத்தில் இயங்கி வரும் ஸ்ரீகிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது. விதிமுறைகளை மீறி ஒரே கட்டிடத்தில் மூன்று பள்ளிகள் இயங்கி வந்த கட்டிடத்தில், மதிய உணவு தயாரிக்கும் போது சமையல்கூடத்தில் எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. இது மளமளவென கூரை வேயப்பட்ட பகுதிகளுக்கும் பரவியது.

Kumbakonam fire tragedy: Life term for principal

இந்த விபத்தில் என்ன நடக்கிறது என்பதையே யூகிக்க முடியாத, தப்பிக்கத் தெரியாத பச்சிளம் தளிர்கள் 94 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்கள். மாடிப்படிகளின் குறுகலான பாதையும் இந்த அதிகப்படி உயிரிழப்புக்கு முக்கியக் காரணம். இந்த தீவிபத்தில் 18 குழந்தைகளுக்கு தீக்காயமும் ஏற்பட்டது.

ஆறுதல்:

தீ விபத்து நடந்த போது உயர் பதவிகளில் இருந்த ஜனாதிபதி அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, எல்.கே. அத்வானி, முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் நேரில் வந்து ஆறுதல் கூறினர்.

Kumbakonam fire tragedy: Life term for principal

சம்பத் கமிஷன்:

நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்து குறித்து விசாரிக்க 2004ம் ஆண்டு சம்பத் கமிஷன் அமைக்கப் பட்டது. 2006ம் ஆண்டு இந்த கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப் பட்டன.

உரிய அனுமதி தேவை:

அதன்படி, இனி பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதியை உரிய அலுவலரிடம் இருந்து முறைப்படி பெற வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. மேலும், பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைக்கு செல்லும் வழி மூடப்பட்டிருக்க வேண்டும், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது.

பெற்றோர் குழு:

அதேபோல், 20 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும், மாணவர் அமரும் இருக்கைகள் பின்புறம் முதுகு சாய்வாக இருக்க வேண்டும், ஆபத்துக் காலத்தில் முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தால் முழு நேர மருத்து வசதி அமைக்கப்பட வேண்டும், வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஆய்வு செய்யலாம் எனக் கூறப்பட்டது.

Kumbakonam fire tragedy: Life term for principal

இழப்பீடு:

இந்தத் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் கருணைத் தொகையாகவும், கடுமையாகக் காயமுற்றோருக்கு தலா ரூ. 25 ஆயிரமும், லேசாகக் காயமுற்றவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்பட்டன.

கைது:

இந்த வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிரபாகரன் என்பவர் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கில் 488 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு 3,126 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 60 ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பேரில், அரசு அதிகாரிகள் 3 பேர் தமிழக அரசின் பரிந்துரையால் 2010-ல் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கு:

இதுதொடர்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து, 2006 ஆம் ஆண்டு தஞ்சை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது வழக்கை விரைந்து முடிக்கக் கோரி குழந்தைகளின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை:

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2012, செப்.12 முதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எதிரிகள் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, 15 நாட்களுக்குப் பின்னர் விசாரணை தொடங்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கும் மேலாக அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற அனைத்து நாட்களும் விசாரணை நடைபெற்றது.

தீர்ப்பு:

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இந்தாண்டு ஜூலை 30ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப் பட்டது. அதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 11 பேர் நிரபராதிகள் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

தண்டனை விபரம்:

மேலும், இந்த வழக்கில் பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்த லெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலாஜி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முகமது அலி தீர்ப்பு வழங்கினார்.

அபராதம்:

சிறை தண்டனை தவிர குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப் பட்டது. அதன்படி, மொத்த அபராதத்தொகையான ரூ.52 லட்சத்து 57 ஆயிரத்தில் இருந்து இறந்த ஒவ்வொரு குழந்தையின் பெற்றோருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.47 லட்சமும், பலத்த காயம் அடைந்த 15 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரமும், லேசான காயம் அடைந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் 30 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும். எஞ்சிய அபராத தொகையை அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என நீதிபதி முகமதுஅலி உத்தரவிட்டார்.

விடுதலை:

அதேநேரத்தில் இந்த வழக்கிலிருந்து 8 அதிகாரிகள் , 3ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனிச்சாமி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, கூடுதல்உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், பாலசுப்பிரமணியம், ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகர அமைப்பு அலுவலர் முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

கண்டனம்:

இந்த தீர்ப்புக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு மேல்முறையீடு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசு மேல்முறையீடு:

இதனைத்தொடர்ந்து 11 பேர் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் கமிஷனும் அமைக்கப் பட்டது.

நேரில் ஆய்வு:

அதன்படி, இம்மாதம் 4ம் தேதி தீவிபத்து ஏற்பட்ட கும்பகோணம் பள்ளியில் ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் ஆய்வுசெய்தார். பெற்றோர்கள், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து வெங்கட்ராமன் ஆறுதல் கூறினார். பெற்றோர் தரும் மனுக்கள் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தரப்படும் என்றார்.

புதிய கட்டுப்பாடுகள்...

இக்கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பில்லாத பலப் பள்ளிகளை இழுத்து மூடியது தமிழக அரசு. மேலும், இந்த தீவிபத்திற்குப் பின் தான் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் கட்டமைப்பு விதிகளும் கொண்டுவரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After 10 years the judgement of Kumbakonam school fire accident case came this year. A Thanjavur court held 10 people guilty and acquitted 11 others in the Kumbakonam school fire accident in Tamil Nadu that killed 94 children and left 18 injured in 2004.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X