For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து: 11 பேர் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், 11 பேர் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கும்பகோணத்தில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம்தேதி ஒரு பள்ளிக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 94 மாணவ- மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Kumbakonam fire tragedy : TN govt appeal against verdict

இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, இவருடைய மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் பி.பழனிசாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சியின் அப்போதைய ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குநர் கண்ணன் ஆகிய 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பள்ளி தீ விபத்து வழக்கு விசாரணை கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முதலில் நடைபெற்றது. இந்த வழக்கில் 488 பேரை போலீசார் சாட்சிகளாக சேர்த்து இருந்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக 3 ஆயிரத்து 126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்பு இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி மாற்றப்பட்டது.

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணன் ஆகியோர் இந்த வழக்கில் இருந்த தங்களை விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.

11 பேர் விடுதலை

விசாரணைகள் முடிந்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் 11 பேரை நிரபராதிகள் என கும்பகோணம் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகரமைப்பு அலுவலர் முருகன், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாதவன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகிய 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

10 பேருக்கு தண்டனை

மேலும் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள்தண்டனையும் ரூ.51 லட்சத்து 65 ஆயிரத்து 700 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி நிறுவனரின் மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பாலாஜி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், என்ஜினீயர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி முகமதுஅலி தீர்ப்பு கூறினார். மேலும் சரஸ்வதிக்கு ரூ.700 அபராதமும், சாந்தலட்சுமிக்கு ரூ.600 அபராதமும், என்ஜினீயர் ஜெயச்சந்திரனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், கல்வித்துறையை சேர்ந்த பாலாஜி, சிவப்பிரகாசம், தாண்டவன், துரைராஜ் ஆகிய 4 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிபதி உத்தரவு

மொத்த அபராதத்தொகையான ரூ.52 லட்சத்து 57 ஆயிரத்தில் இருந்து இறந்த ஒவ்வொரு குழந்தையின் பெற்றோருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.47 லட்சமும், பலத்த காயம் அடைந்த 15 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரமும், லேசான காயம் அடைந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் 30 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும். எஞ்சிய அபராத தொகையை அரசு கணக்கில் செலுத்த வேண்டும் என நீதிபதி முகமதுஅலி உத்தரவிட்டார்.

உறவினர்கள் கொதிப்பு

இந்த தீர்ப்புக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு மேல்முறையீடு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசு மேல்முறையீடு

இதனைத்தொடர்ந்து 11 பேர் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

English summary
TamilNadu Government appeal against school fire verdict in the The Madurai bench of the Madras high court on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X