• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நொண்டி வாத்து அரசுகளும் அந்நிய முதலீடுகளும்!

By Super
|

மிகவும் விளம்பரபடுத்தப்பட்டு, மீண்டும், மீண்டும் தள்ளிவைக்கப் பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த மாதம், செப்டம்பர் 9, 10 தேதிகளில் சென்னையில் நடக்கவிருக்கின்றது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இந்த இரண்டு நாள் மாநாடு நடக்கவிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து 1,000 க்கும் மேற்பட்ட தொழிற் பிரதிநிதிகளும், அந்நிய முதலீட்டாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இதற்காக சென்னையில் உள்ள 33 நட்சத்திர ஹோட்டல்களில் 1,500 அறைகள் முன் கூட்டியே பதிவு செய்யப் பட்டுவிட்டன. இந்த மாநாட்டில் எட்டு நாடுகள் தமிழக அரசுக்கு கூட்டாளியாக இருக்கின்றன. 500 பிரதிநிதிகள் இந்த எட்டு நாடுகளிலிருந்து மாநாட்டில் கலந்து கொள்ள தங்களது ஒப்புதலை தந்து விட்டார்கள். இதுவரையில் இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக உருவாக்கப் பட்ட இணைய தளத்துக்கு 8 லட்சம் பேர் வருகை தந்திருக்கிறார்கள்.

Lame duck Governments and their dreams

இந்த மாநாட்டை விளம்பரப்படுத்தி லண்டன், ஃபிராங்க்ஃபர்ட், ஹாங்காங், சிங்கப்பூர், துபாய் மற்றும் அபுதாபி சர்வதேச விமான நிலையங்களில் ஹோர்டிங்குகள் மற்றும் டிஜிட்டல் விளம்பரப் பலகைகளும் வைக்கப் பட்டுவிட்டன. இந்தியாவிலும், டில்லி, அஹமாதாபாத், பெங்களூர், கொல்கத்தா, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப் பட்டுள்ளன.

இந்த மாநாட்டை நடத்த தமிழக அரசு 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. கடந்த பல மாதங்களாகவே இந்த முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு உலகின் பல நாடுகளுக்கும், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல இடங்களுக்கும் தமிழக அரசின் உயரதிகாரிகள் பயணம் மேற்கொண்டனர். அழைப்பிதழ்கள் கொடுப்பதைத் தாண்டி, கிட்டத் தட்ட, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கெஞ்சி, மன்றாடி, அவர்களை சென்னையில் நடக்கவிருக்கும் மாநாட்டுக்கு வருமாறு தமிழக அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் பல மாநிலத் தலைநகரங்களில் - இதில், ஜெய்ப்பூர், பெங்களூர், ஹைதராபாத், டில்லி, அஹமாதாபாத் ஆகியவை அடக்கம் - ரோட் ஷோ எனப்படும், சாலையோரங்களில் விளம்பர வேலைகளிலும் இரவு, பகலாக, அதிகாரிகள் குழு ஒன்று உழைத்துக் கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா தனது சுதந்திர தின உரையில், தன்னுடையை நான்காண்டு கால ஆட்சியின் சாதனையை, நான்காண்டு ஆட்சி, நாலாபுறமும் வளர்ச்சி என்று வருணித்தார். முதலமைச்சரின் உரையில் அவரது நான்காண்டு ஆட்சியின் சாதனைகளாக அவர் நினைப்பவற்றை புராணம் பாடுவதையும், தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளுவதையும் தவிர்த்து உருப்படியான சொன்ன ஒரே விஷயம் வரவிருக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடுதான். ஒரு லட்சம் கோடிக்கு ஏற்கனவே தமிழகத்தில் முதலீட்டுக்கு உத்திரவாதம் கிடைத்து விட்டதாக ஜெயலலிதா கூறுகிறார். இந்த தொகை நிச்சயம் பெரிய தொகைதான்.

ஆனால் இது நடைமுறையில் சாத்தியமா, இவ்வளவு பெரிய முதலீடு ஒரு மாநிலத்துக்கு, அதுவும் தனது ஆட்சிக் காலத்தின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஒரு அரசை நம்பி வருமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

மற்றொன்று, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இங்கிருக்கும் அரசியல் தலைமை நேரடியாக களத்தில் இறங்கி மெனக்கெடுவது.

இரண்டாவதாகச் சொன்னதை முதலில் பார்க்கலாம், அந்நிய முதலீடுகள் ஒரு மாநிலத்துக்கு வந்து குவிந்ததில் கடந்த பத்தாண்டுகளில் சாதனை படைத்த மாநிலம் குஜராத். நரேந்திர மோடி மீது பலருக்கும் ஓராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தனது மாநிலத்துக்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் அவர் எடுத்த முயற்ச்சிகள் அபாரமானவை. சீனா, ஜப்பான், உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பலமுறை பயணம் போய் முதலீடுகளை குஜராத்துக்கு அவர் ஈர்த்து வந்தார். இன்று அந்நிய முதலீடுகளில் குஜராத் திகட்டிப் போய் நிற்கிறது. அதற்குப் பிறகுதான் அவர் அந்நிய முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தினார்.

இதே போலத்தான், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மஹாராஷ்டிர முதலைமச்சர் ஃபட்நாவிஸ், தெலுங்கானாவின் அமைச்சர்கள் போன்றோர் அவர்களே நேரில் போய் முதலீட்டாளர்களை அழைத்தனர். அவர்களைச் சம்மதிக்க வைத்தனர்.

ஆனால் இன்று தமிழகத்தைப் பொறுத்த வரையில் முதலமைச்சரோ அல்லது அவரது அமைச்சர்களோ, ஒருவர் கூட வெளிநாடுகளுக்கு நேரடியாகப் போய் அந்நிய முதலீடுகளுக்காக பேசவில்லை. மாறாக ஐஏஎஸ் அதிகாரிகள்தான் நேரில் போய் பேசிக் கொண்டிருக்கின்றனர். பேசுகிறார்கள் என்று சொல்வதை விட மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள், தாஜா செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

நான்கு நாட்களுக்கு முன்னாள், ‘எக்னாமிக் டைம்ஸ்' பத்திரிகையின் சென்னைப் பதிப்பின் முதல் பக்கத்தில் வந்த செய்தியில், ‘முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு சிறிதளவே ஆதரவு, பெரிய ஐடி நிறுவனங்களை தமிழகம் இழந்து விட்டதா?' என்று செய்தி வந்திருக்கிறது. ‘தமிழகத்தில் வந்து முதலீடுகளை செய்யுங்கள் என்று அதிகாரிகள் மன்றாடியபோது, சில கடுமையான கேள்விகளை அமெரிக்க தொழிலதிபர்களிடம் இருந்து அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக தமிழக அரசின் நிர்வாக விஷயங்கள் குறித்து திரும்ப, திரும்ப, தமிழக அதிகாரிகளிடம் கேள்விகள் எழுப்ப பட்டன. எவ்வளவோ முயற்சித்தும், பெரிய அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து, சிலிகான் வேலியில் இருக்கும் வளர்ந்து வரும் புதிய பெரிய நிறுவனங்களிடமிருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போடவும் அவர்கள் எந்த ஆர்வமும் காட்டவில்லை' என்று கூறுகிறது அந்தக் கட்டுரை.

இதில் மிகவும் முக்கியமான விஷயம், இந்த மாநாடு நடக்கும் காலகட்டம். கடந்த செப்டம்பரில் நடப்பதாக இருந்த இந்த மாநாடு, வரும் செப்டம்பரில் நடக்கவிருக்கிறது. இந்த ஆட்சி முடிய எட்டு மாதங்களே உள்ளன. இன்னும் நான்கு மாதங்களில் இந்த அரசு, ஆங்கிலத்தில் சொல்லுவதென்றால், 'லேம் டக் கவர்ன்மெண்ட்', அதாவது, நொண்டி வாத்து அரசாக மாறிவிடும். அதாவது முக்கியமான எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாத அரசாக மாறிவிடும். இது எல்லா அரசுகளுக்கும் நடக்கக் கூடியதுதான். ‘ஒரு நொண்டி வாத்து அரசை நம்பி பெரிய முதலீடுகளை செய்ய எந்த நிறுவனமும், தொழிலதிபர்களும் கூட முன் வர மாட்டார்கள்' என்கிறார் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

‘தனது ஆட்சியின் முதல் இரண்டரை அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் செய்திருக்க வேண்டிய காரியத்தை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தின் இறுதியில் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணங்கள் எதுவாக இருந்தாலும், கள யதார்த்தம், இன்று ஜெ தனது ஆட்சியின் இறுதியில் இருந்து கொண்டிருக்கிறார். அடுத்த தேர்தலில் அவர் வெல்லலாம், தோற்கலாம், ஆனால் முதலீட்டாளரைப் பொருத்த வரையில் இது மிக முக்கியமான விஷயம். மேலும், தமிழகத்துக்கே உரிய சில பிரத்தயேகமான நிர்வாக சிக்கல்களும், தடைக் கற்களும், அரசியல் தலைமையின் சிக்கல்களும் முதலீட்டாளர்களின் கவனத்தில் இருந்து தப்ப முடியாது. இதைத்தான் தமிழக அரசின் நிர்வாக விஷயங்கள் குறித்து அமெரிக்க முதலீட்டாளர்கள் திரும்ப, திரும்ப, கேள்வி எழுப்பினார்கள் என்று எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி கூறுகிறது' என்கிறார் அந்த ஐஏஎஸ் அதிகாரி.

உடன்குடி மின்திட்ட விவகாரத்தில் சீன நிறுவனத்திற்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அந் நிறுவனம் இன்று விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றிருப்பதையும் சுட்டிக் காட்டும் அந்த அதிகாரி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுதான் இதிலிருந்து அந்நிய முதலீட்டாளர்களின் கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருக்கும் என்கிறார்.

ஆனால் வேறு சில பார்வையாளர்கள் தமிழகத்தின் ஒட்டுமொத்த சமூக சூழல் ஆரோக்கியாமானதாக இருப்பதால் முதலீட்டாளர்கள் இதனை நம்பித்தான் இங்கு வருவார்கள், மாநில அரசின் ஆயுட்காலத்தை நம்பியல்ல என்றும் வாதிடுகிறார்கள். ஃபோர்டு, ஹூண்டாய், சென்ட் கோபெய்ன் போன்ற நிறுவனங்கள் ஒரு ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு மற்றோர் ஆட்சிக் காலத்தில் முடிக்கப்பட்டு, செயற்படத் துவங்கியவை. ஆகவே அது குறித்து நீங்கள் கவலைப் பட வேண்டாம் என்கிறார்கள் அவர்கள்.

அந்நிய முதலீட்டில் பெருமளவு சாதித்த மாநிலங்களில் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை என்பது அடிநாதமாக இருந்திருக்கிறது. இங்கு தமிழகத்தில் இன்று இது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பது புரிந்தால், நடக்கவிருக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு ஈட்டப் போகும் வெற்றி பற்றி நமக்கு ஓரளவுக்கு சரியான பார்வை கிடைக்கும்.

நொண்டி வாத்து அரசுகளுக்கு இருக்கும் அந்நிய நேரடி முதலீட்டு கனவுகள் சுவாரஸ்யமான கனவுகள்தான்!

English summary
The Govt of Tamil Nadu will conduct international investors meet in Chennai on September second week. But there are lot of questions and speculation on this meet. We summerised all those things in this article.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X