• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளைதான் தமிழகத்தின் அடையாளங்கள்: ராமதாஸ் சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற வெற்று வசனத்தையே மீண்டும், மீண்டும் பேசுவதை விடுத்து காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பதன் மூலமும், திறமையான அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமிப்பதன் மூலமும் தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

Law & order in Tamildadu, almost bad - Ramadoss

எந்த நாட்டில் மக்கள் அச்சமின்றி, நிம்மதியாக உறங்க முடிகிறதோ அது தான் மிகவும் நல்ல நாடு. இந்த வரையறையை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் தமிழகம் எந்த வகையான மாநிலம் என்பதை பாமரர்களும் தீர்மானிக்க முடியும். நாளொரு கொலை, பொழுதொரு கொள்ளை என குற்றங்கள் தான் தமிழகத்தின் அடையாளங்களாக உள்ளன. இதைத் தடுக்க தமிழக அரசு தவறியது கண்டிக்கத்தக்கது.

சேலத்திலிருந்து கடந்த 8-ந் தேதி இரவு சென்னை வந்த சேலம் விரைவுத் தொடர்வண்டியில் ரூ.343 கோடி பணம் எடுத்து வரப்பட்ட பெட்டியின் மேற்கூறை துளையிடப்பட்டு, ரூ.5.75 கோடி கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை இப்படி ஒரு துணிகரக் கொள்ளை நடந்ததில்லை.

கொள்ளை நிகழ்ந்த தொடர்வண்டிப் பெட்டியில் சேலத்தில் துளையிடப்பட்டதா? சென்னையில் துளையிடப்பட்டதா? அல்லது தொடர்வண்டி பயணத்தை தொடங்குவதற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு அல்லது கோவையில் துளையிடப்பட்டதா? என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே சென்னை சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள சென்னை முதலாவது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஜா சுப்பிரமணியம் வீட்டின் பூட்டை உடைத்து 400 பவுன் தங்க நகைகள் உட்பட ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. அதேநாளில் கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற கொள்ளைகள் நடைபெற்றிருக்கின்றன.

கடந்த மாதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலைகள் நடந்தன. இந்த மாதம் கொள்ளைகள் நடக்கின்றன. கொலைகளும், கொள்ளைகளும் தமிழகத்தில் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இவற்றைத் தடுக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக முதல்வரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி தமிழக சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ''சட்டம்-ஒழுங்கைப் பொறுத்த வரை தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கை பாதிக்கச் செய்யும் நிகழ்வுகளிலும், குற்றத்தடுப்பு, புலனாய்வு ஆகிய காவல் பணிகளிலும் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள காரணத்தால் தமிழகத்தில் பொது அமைதி பாதுகாக்கப்படுகிறது'' என்று கூறினார். இது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்.

2006-2011 திமுக ஆட்சியை விட தமது ஆட்சியில் குற்றச்செயல்கள் குறைந்துவிட்டதாக ஜெயலலிதா கூறுவதும் உண்மையல்ல. கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொள்ளை சம்பவங்களும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகளும் நடந்துள்ளன. இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு, திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்ற ஜெயலலிதா முயல்கிறார்.

தமிழகத்தில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் குறித்த புள்ளி விவரங்களை ஆண்டு வாரியாக வெளியிட்டால் உண்மை வெளிப்பட்டு விடும் என்பதால், மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் இணையதளத்திலிருந்துஇவ்விவரங்கள் அனைத்தையும் தமிழக அரசு நீக்கியிருக்கிறது. இதிலிருந்தே, வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு குற்றங்கள் பெருகிவிட்டதை அறிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் குற்றங்கள் பெருகிவிட்டது குறித்து ஆதாரங்களுடன் குற்றஞ்சாற்றும் போதெல்லாம், குற்றங்களை முற்றிலுமாக தடுப்பது சாத்தியமில்லை என்று கூறுவதை ஜெயலலிதா வழக்கமாக வைத்திருக்கிறார். குற்றங்களை அடியோடு தடுப்பது சாத்தியமில்லை என்பது உண்மை தான். ஆனால், குற்றங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது சாத்தியமானதே.

அதற்காக தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் துரதிருஷ்டமாகும். குற்றம் செய்தால் காவல்துறையிடம் சிக்குவது உறுதி; தண்டிக்கப்படுவது நிச்சயம் என்ற அச்சம் இருந்தால் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட அனைவரும் அஞ்சுவர். ஆனால் தமிழக காவல்துறை மீது அந்த அச்சம் இல்லாமல் போனது தான் தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்ததற்கு காரணம். இந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது.

தமிழக காவல்துறை திறமையானது என்பதிலும், அதில் கடமை உணர்வு மிக்க அதிகாரிகள் உள்ளனர் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர்களுக்கு முழு அதிகாரமும், சுதந்திரமும் அளிக்கப்படவில்லை என்பது தான் காவல்துறையின் தரம் குறைந்ததற்கு காரணம் ஆகும். எனவே, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்ற வெற்று வசனத்தையே மீண்டும், மீண்டும் பேசுவதை விடுத்து காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிப்பதன் மூலமும், திறமையான அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமிப்பதன் மூலமும் தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss said that crime issues in Tamilnadu have beeen increased in ADMK rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X