• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மீது சட்ட ரீதியான அடக்குமுறையை முறியடிப்போம்: சீமான்

By Mohan Prabhaharan
|

சென்னை : நாம் தமிழர் கட்சியினர் மீது மத்திய மாநில அரசுகள் அறிவிக்கப்படாத அடக்குமுறைகளை பிரயோகிப்பதாகவும், அதை சட்டப்படி எதிர்கொள்ளப்போவாதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்ப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்காக முதலில் ஒலிக்கும் குரலாகவும், மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உயரும் முதல் கரமாகவும், போராட்டக் களத்தில் மக்களோடு துணைநிற்கும் முதல் ஆளாகவும் நாம் தமிழர் கட்சியினர் இருப்பதால் மத்திய, மாநில அரசுகளின் அறிவிக்கப்படாத அடக்குமுறை கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளது.

கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபிஎல் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி, காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் கலை, இலக்கியப் பண்பாட்டு பேரவை, விவசாயச் சங்கத்தினர் மற்றும் இதர சனநாயக அமைப்பினர் ஒன்று திரண்டு போராடினர்.

 காவிரி உரிமைப் போராட்டம்

காவிரி உரிமைப் போராட்டம்

அப்போது போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாகச் சீமான், பெ.மணியரசன், பாரதிராஜா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பேரணியில் பங்கேற்ற 780 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் அடைத்துவைத்து நள்ளிரவு 01:30 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தின் விளைவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் பெயர் இல்லாமல் 21 நாம் தமிழர் கட்சியினர் என்று குறிப்பிட்டும் கொலை முயற்சி (307) உள்ளிட்ட 8 பிரிவுகளில் 3 வழக்குகள் பதியப்பட்டது.

 கொலை முயற்சி வழக்கு

கொலை முயற்சி வழக்கு

மேலும் ஐபிஎல் போட்டியின் போது பார்வையாளராகச் சென்று மைதானத்திற்குள் காலணி வீசியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், ஐயனார், பொன்னுவேல், வாகைவேந்தன், பிரபாகரன், ராஜ்குமார், பிரகாஷ், சுகுமார், ஆல்பர்ட், ஏகாம்பரம், மார்டின் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் கொலைமுயற்சி உள்ளிட்ட கடுமையான சட்டங்களுக்குக் கீழ் வழக்குப் பதியப்பட்டது.

 காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம்

முன்னதாக, 10-04-2018 அன்று மாலை 04 மணியளவில் போராட்டத்தில் பங்கேற்க சேப்பாக்கம் தொடர்வண்டி நிலையம் வந்திறங்கிய ஆவடி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ராஜேஷ், ஜெரால்ட், தனசேகர், நந்தகுமார், கார்த்திக், சரத்குமார், மணிகண்டன், சிவா, சரவணக்குமார், பிரதீப் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டுப் போராட்டம் முடிந்து மற்றவர்களோடு இரவு விடுவிக்கப்படாமல் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு அடுத்த நாள் காலையில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கொலைமுயற்சி வழக்கு உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் பொய்யாக வழக்குப் பதியப்பட்டது. அனைவரையும் 15 நாள் தடுப்புக்காவலில் சிறையிலடைக்கப்பட்டனர்.
மேலும் அதேநாள் (10-04-2018) மாலை கடலூரில், காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கர்நாடக பேருந்தை மறித்துப் போராடிய கடல்தீபன், கு.சாமிரவி, சுரைன்குமார், நாராயணசாமி, நாராயணன், தனசேகரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

 குண்டர் சட்டம் ரத்து

குண்டர் சட்டம் ரத்து

சிறைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவரான நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் மீது கடுஞ்சட்டமான குண்டர்சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அறிவுரைக்கழகத்தின் முன் நிறுத்தப்பட்டு குண்டர் சட்டத்தின் கிழ் பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என்று நிரூபித்து குண்டர் சட்டத்தை ரத்து செய்தார். இதனால் 07-05-2018 அன்று பிணையில் விடுதலையாகியிருக்க வேண்டிய கடல்தீபன் மீது திட்டமிட்டு, நெய்வேலியில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக்கானப் போராட்டத்தில் பேசியதற்காகத் தேசத் துரோக வழக்கு (124A) பதியப்பட்டு மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார்.

 நள்ளிரவில் கைது

நள்ளிரவில் கைது

பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி (12-04-2018) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11-04-2018 அன்று நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியினர் அன்புதென்னரசன், எஸ்.கே சிவக்குமார், விக்னேஷ், இராஜாராமகிருஷ்ணன், கணேசன், ராம்ராஜ், சிவக்குமார், ஞானசேகரன், சத்தியமூர்த்தி, கோகுலகிருஷ்ணன், ஜீவா, சீமான் சுரேஷ் மற்றும் இராயப்பன் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக 15 நாள் தடுப்புக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அனைவரின் மீதும் பொய் வழககுகள் பதியப்பட்டுள்ளது.

 சீமான் கைது

சீமான் கைது

பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி 12-04-2018 அன்று, சென்னை விமான நிலையம் அருகே கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு உள்ளிட்ட பலர் பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். அப்போது ஏற்கனவே ஐபிஎல் போராட்டத்தின் போது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கைது செய்யக் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

 அப்பாவிகள் கைது

அப்பாவிகள் கைது

"சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யாரேனும் 10 பேரை மட்டும் சிறைப்படுத்தவேண்டும், மற்றவர்களை விடுவிக்கிறோம்" என்று காவல் அதிகாரிகள் கூறினார்கள். அதற்குத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "என்னைக் கைது செய்யுங்கள்! வழக்கில் தொடர்பில்லாதவர்களைக் கைது செய்யவேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார். இதை ஏற்க மறுத்த காவல்துறையினர் சீமானுடன் சேர்த்துக் கட்டாயம் 10 பேரை கைதுசெய்வோம் என்றதனால், அப்பாவிகளைத் தண்டிக்க விடமாட்டோம் என்று பெ.மணியரசன், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவரும் வெளியேற மறுத்து, "கைது செய்வதென்றால் எங்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்புங்கள்!" என்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தொடர் அடக்குமுறை

தொடர் அடக்குமுறை

அதே வேளையில் வேறு இடத்தில் அடைக்கப்பட்டிருந்த இயக்குநர் ஐயா பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பாகப் பங்கேற்ற இயக்குநர்கள் அமீர், கௌதமன், வெற்றிமாறன், இராம் போன்றோரும் சீமானை விடுவிக்கக்கோரி வெளியேற மறுத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இறுதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இரவு 09 மணியளவில் சீமான் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தனர். முன்னதாக சீமான், பெ.மணியரசன், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு உள்ளிட்டோர் மாலை 06 மணிக்கு மேலாகவும் விடுவிக்கப்படாமல் இருந்த செய்தியறிந்து அங்கு வந்த மனிதநேய சனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தமிழக அரசு எதிர்ப்பு

தமிழக அரசு எதிர்ப்பு

தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்த காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மன்சூர்அலிகான், வீரபாண்டியன், சரவணன், ரூபன், ஆகாஷ், பாபுராசன், ரங்கசாமி, சீனிவாசன், அருண்கண்ணன், முரளி, பொன்குமார் ஆகிய 11 பேர் மீது பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது போன்ற பொய் வழக்குகள் புனையப்பட்டு. 15 நாள் தடுப்புக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களின் பிணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வந்த பொழுது தமிழக அரசு வழக்கறிஞர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துப் பிணை பெற முடியாமல் செய்தார். அது ஒரு திட்டமிட்ட செயலாக இருந்தது.
ஐபிஎல் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மைலாப்பூர் தொகுதி பொறுப்பாளர் ஸ்டாலின் அவர்களை 14-04-2018 அன்று நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது.

 கொலை முயற்சி வழக்கு

கொலை முயற்சி வழக்கு

காவல்துறை அழைத்தால் கட்சி பொறுப்பாளர்கள் காவல் நிலையத்திற்கே வந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று கட்சி தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டது. இருப்பினும் ஐபிஎல் போராட்டத்தில் பங்கேற்றதற்காக திருவொற்றியூரில் ரூபன், வினோத், சென்னையில் சாரதி, சுபாகரன் ஆகியோர் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டனர். அனைவரையும் 10-04-2018 அன்று போடப்பட்ட கொலைமுயற்சி வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இணைத்து சிறையிலடைத்தனர்.
18-05-2018 அன்று மே18 இனஎழுச்சி பொதுக்கூட்டம் சென்னை, சோழிங்கநல்லூரில் நடைப்பெற்றது.

 குண்டர் சட்டம் பதிவு

குண்டர் சட்டம் பதிவு

அந்த நிகழ்வில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்களை நிகழ்ச்சி முடிந்து அலுவலகம் திரும்பும் வழியில் நள்ளிரவு 12.30 மணியளவில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். காவல்துறையினர் கைது செய்ய அழைத்ததும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சென்ற அவர் மீது, கைது நடவடிக்கையின் பொழுது காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகப் பொய் வழக்குகளைப் புனைந்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டார்.

 மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய் கிணறுகளை அப்புறப்படுத்தவும், விவசாய நிலங்களை மீட்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு மே 19-ந் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி 19-05-2018 அன்று கதிராமங்கலம் செல்வதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பாகவே அதே விமானத்தில் வந்திருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களை வரவேற்க வந்திருந்த ம.தி.மு.க. தொண்டர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வரவேற்க காத்திருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களைத் தாங்கள் கொண்டுவந்திருந்த கொடி கம்புகளைக் கொண்டு தாக்கினார்கள்.

 சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

இந்தச் சம்பவம் நடைபெற்ற பின்னர் அங்கு வந்த சீமான் கதிராமங்கலம் போராட்டத்திற்குச் சென்றார். ஆனால் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் ம.தி.மு.க.வினரைத் தாக்கியதாக வழக்குபதிந்து வினோத்(எ)அலச்சாண்டர், மதியழகன், நாகேந்திரன், சதிஷ்குமார், மணிகண்டன், சஜில், குணா ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது காவல் அதிகாரியின் வண்டியை சேதப்படுத்தியதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டது.
மேலும் கதிராமங்கலம் போராட்டத்தில் பங்கேற்றதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 21-05-2018 அன்று இராசா ஆனந்து, தினேஷ்குமார், பிரதீப் ஆகியோரை இணைத்து சிறைப்படுத்தியுள்ளனர்.

 கடுமையான விசாரணை

கடுமையான விசாரணை

கதிராமங்கத்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் மற்றும் அதில் பங்கேற்ற மற்ற கட்சியினர் கைது செய்யப்படவில்லை; ஆனால் நாம் தமிழர் கட்சியினரை மட்டும் திட்டமிட்டு கைது செய்துள்ளனர். மேலும், தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வீடுகளுக்குச் சென்று விசாரணை என்ற பெயரில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். சென்னை ஐபிஎல் போராட்டத்தின்போது காவலரை தாக்கியதாகக் கூறி கடந்த 21-05-2018 அன்று நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேலன் என்பவரை கலைநிகழ்ச்சியொன்றில் பறை இசைத்துக்கொண்டிருந்தபோது காவல்துறை வலுக்கட்டாயமாக கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

 தொடர் போராட்டம்

தொடர் போராட்டம்

காடுகள், மலைகள், வேளாண் நிலங்களை அழித்து சென்னை - சேலம் இடையே அமைக்கவிருக்கும் புதிய 8 வழி விரைவு சாலை திட்டத்தைக் கைவிடக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற நாம் தமிழர் கட்சியினர் கந்தன், மோகன்ராஜ், ராமன், பிரகாஷ், சிவமுத்து, வெங்கடேசன், மோகன், சதிஸ்குமார், தேசிகன், கேசவன், ஜெயச்சந்திரன், வடிவேல், கெளதமன், குரு, சாய்குமார், பெருமாள், துரைமுருகன், ஐயப்பன், பிரபு, குமார், பாலாஜி, அமீன்முகமது, விஜயகுமார், சார்லஸ், தனபால், மாணிக்கம், பிரகலதா ஆகிய 27 பேர் காவல்துறையினரால் தடுத்துநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் அனுமதியின்றி பேரணி வந்ததாக கூறி பொய் வழக்கில் 15 நாள் சிறையிலடைக்கப்பட்டனர்.

 ஸ்டெர்லைட் போராட்டம்

ஸ்டெர்லைட் போராட்டம்

இவ்வழக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 5 இருசக்கர வாகனங்களில் வரிசையாகச் சென்றதுதான் குற்றமாகப் பதிவு செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் நச்சுஆலையை மூடக்கோரி நடைபெற்றுவந்த தொடர் போராட்டத்தின் நூறாவது நாளான 22-05-2018 அன்று ஆயிரக்கணக்கான தூத்துக்குடி பொதுமக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்கப் பேரணியாகச் சென்றனர். மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தி அமைதியான முறையில் பேரணி வந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.

 அரச பயங்கரவாதம்

அரச பயங்கரவாதம்

அதனை தொடர்ந்து பொதுமக்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. மக்கள் எதிர்பாராத வேளையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். அறவழியில் தொடங்கி அரசப் பயங்கரவாதத்தில் முடிந்த இப்போராட்டத்திற்கு மக்களைத் திரட்டியதாகப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் நாம் தமிழர் கட்சி மற்றும் சில அமைப்புகள் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டது. அதன் பின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதான விசாரணை மற்றும் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது. நிர்வாகிகளின் வீடுகள், தொழில் செய்யும் இடங்கள் என்று காவல்துறை விசாரணை என்ற பெயரில் பெரும் அடக்குமுறைக்கு ஆளாக்கி வருகின்றனர்.

 வியனரசு கைது

வியனரசு கைது

கடந்த 30-05-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு அவர்கள் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தூத்துக்குடி போராட்டத்தின் போது ஸ்டெர்லைட் பணியாளர்கள் குடியிருப்பைக் கொளுத்தினார் என்று 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எந்த தவறும் செய்யாத ஒருவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்துள்ளது காவல்துறை.
சென்னை ஐபிஎல் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டுவந்த மதன்குமார் என்பவர் 31-05-2018 அன்று கைது செய்யப்பட்டார்.

 சங்கிலி பறிப்பு வழக்கு

சங்கிலி பறிப்பு வழக்கு

தானாக சரணடைய வந்தவர் மீது சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவுசெய்து சிறைப்படுத்தி, கழிவறையில் வழுக்கி விழுந்து கை உடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார். சென்னை - சேலம் இடையே அமைக்கவிருக்கும் புதிய 8 வழி விரைவு சாலை திட்டத்தை எதிர்த்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த 08-06-2018 அன்று காவல்துறையிடம் அனுமதி கேட்க சென்ற நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர் மாரி என்பவர் மீது போராட்டத்தைத் துண்டுகிறார், பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினார், அரசுக்கு எதிராகச் சதித்திட்டத்தில் ஈடுபடுகிறார் போன்ற பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

 கைது செய்ய திட்டம்

கைது செய்ய திட்டம்

சென்னை ஐபிஎல் போராட்டத்தில் பங்கேற்றதற்காக இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் 09-06-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் சிவராசன் கைது செய்யப்பட்டார். அவர்மீதும் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேலூர் தனியார் நிறுவனத்தில் இருதரப்பினர் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கூறி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஜி, சிவா, விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அச்சம்பவம் நடைபெறும் பொழுது அங்கே இல்லாத சிலரையும் அவ்வழக்கில் சேர்த்து கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 நாம் தமிழர் மீது அடக்குமுறை

நாம் தமிழர் மீது அடக்குமுறை

தூத்துக்குடி போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி பொறுப்பாளர் இசக்கித்துரை மீது பொய்வழக்குகள் பதிவுசெய்து கடந்த 10-06-2018 அன்று அதிகாலை 03 மணியளவில் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையிலடைக்கப்பட்டார். இவ்வாறாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாகப் பொய்வழக்குகள் போடப்பட்டு தொடர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆயினும் அதிகாரத்தின் இந்த அடக்குமுறைகளை நாம் தமிழர் கட்சி சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்! தொடர்ச்சியாக மண்ணுக்கும் மக்களுக்கும் உண்மையாக இறுதிவரை உறுதியாகப் போராடுவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
Legal Repression over Naam Tamilar Party Cadres. The Party Chief Coordinator Seeman calls for Legal Protest over the Repression and the arrests.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more