For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்த் தாயின் கலை மகன்... எழுத்துலகின் ஞானசூரியன்... ஜெயகாந்தன் பிறந்த நாள் இன்று !

ஞானபீடம் விருதுபெற்ற ஜெயகாந்தனின் பிறந்தநாளான இன்று வாசகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

-வந்தனா ரவீந்திரதாஸ்

சென்னை: எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள் இன்று.

- இரு நூற்றாண்டுகளின் இலக்கிய சங்கமம்.

- இரு யுகங்களின் இணைப்பு சங்கிலி - அவர்தான் ஜெயகாந்தன்.

பெண்களுக்காக வருந்தியவர்கள் உண்டு, அவர்களுக்காக பரிதாபப்பட்டவர்கள் உண்டு, அவர்களது துன்ப துயரங்களை, அவர்களுக்கு இழைக்கப்பட்ட உடல்ரீதியான வன்முறைகளை, அவர்களது இயலாமையை உணர்ச்சி பொங்க எழுதியவர்களும் உண்டு. ஜெயகாந்தனும் எழுதினார்.

ஆனால் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசம். அந்த வித்தியாசம்தான் அவரை இலக்கிய இமாலயத்தின் சிகரமாய் உயர்த்த வைத்தது. பிற எழுத்தாளர்கள் தங்கள் நிலையில் நின்று கொண்டு பெண்களை பார்த்தார்கள், பாத்திரங்களை படைத்தார்கள். ஜெயகாந்தனோ தன்னை முற்றிலும் தன்னிடமிருந்து விலக்கிக் கொண்டார். சம்பந்தப்பட்ட பெண் பாத்திரங்களின் நாடி, நரம்புகளில், ரத்த நாளங்களில், ஆன்மாக்களில் கலந்தார்.

கதைமாந்தர்கள் கௌரவிப்பு

கதைமாந்தர்கள் கௌரவிப்பு

ஜெயகாந்தனின் சிந்தனை அவர்களை பேச வைத்தது, அவரது வேதனை அவர்களை குமுற வைத்தது. அவரது குமுறல் அவர்களை கொந்தளிக்க வைத்தது. அவரது கொந்தளிப்பு அவர்களை வீராங்கனைகளாக்கியது, பஞ்சைகள்-பராரிகள்-பிச்சைக்காரர்கள்-பித்தம்பிடித்தவர்கள்-ரிக்ஷாக்காரர்கள் - கட்டிட தொழிலாளர்கள், விலைமாதர்கள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் ஏன் வெறுக்கப்பட்டோர் என அனைவரையும் கதை மாந்தர்களாக கௌரவித்தார். அவர்களுக்கும் இதயம் உண்டு, நாணயமும்-நேர்மையும் உண்டு, விசால எண்ணமும், ஆழ்ந்த உணர்வும் அனைத்துக்கும் மேலாக வறுமையையும் மிஞ்சும் மனித நேயம் உண்டு என்பதை எடுத்துக் காட்டியவர் ஜெயகாந்தன். ஏராளமான கதைகள், நாவல்கள் என இவரது படைப்பின் பிரமாண்டம் நீளுகிறது.

அனல் பறக்கும் விவாதங்கள்

அனல் பறக்கும் விவாதங்கள்

இவரிடம் யார் போய் நேரில் உட்கார்ந்து பேசினாலும், அப்படியே வாயடைத்துபோய், அவர் சொல்வதை மட்டுமே கேட்க தோன்றுமாம் - தேரில் அமர்ந்திருக்கும் அர்ஜூனன் போல. அவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும் காற்றிலே பறக்க விட்டு விடாமல் யாராக இருந்தாலும் அதனை அப்படியே பிடித்து தன்னுள் நிறுத்திக் கொள்வார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அச்சமயத்தில் தலைப்பு, குறிப்புகள், துவக்கவுரை, முடிவுரை, பேனா , பென்சில், காகிதம் இன்றி அனல் பறக்கும் விவாதம் நடக்குமாம். பின்னர் கட்டிடமே அதிர்ந்து போகும் வகையில் அட்டகாசமான சிரிப்பு வெடிக்குமாம். ஒவ்வொருமுறை அவரிடம் பேசும்போதெல்லாம், ஏதோ ஒரு ஆய்வரங்கம், கருத்தரங்கத்திற்கு வந்து போகும் உணர்வு ஏற்படுமாம்.

துவேஷம் பரப்பாதவர்

துவேஷம் பரப்பாதவர்

ஜெயகாந்தனிடம் இரண்டு முக்கிய குணங்கள் பெரும்பாலானோரை கவர்ந்திருக்கிறது. ஒன்று, ஒருவர் இல்லாதபோது அவரை பற்றி புறங்கூறுவதோ, கோள் சொல்வதோ கூடாது என்பது. ஒருவர் இல்லாதபோது மற்றொருவர் புறங்கூற முற்பட்டால், அவரை மேற்கொண்டு ஜெயகாந்தன் பேசவிட மாட்டார். "ஓ.... அவரா? அவர் இப்போ இங்க இல்லையே? அவர் வந்துடட்டுமே, அப்போ பேசலாமே" என்பார். துவேஷம் பரப்புவது என்பது அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாததாக இருந்திருக்கிறது. மற்றொன்று நல்ல அம்சம், தம்மோடு இருப்பவர் யாராக இருந்தாலும் பொறாமை இல்லாமல் மனதார வாழ்த்தும் மனப்பக்குவம் உடையவர்.

பாதை போட்ட 'பாதை தெரியுது பார்'

பாதை போட்ட 'பாதை தெரியுது பார்'

சிறுகதை மன்னனாக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக, கவிஞராக, பாடலாசிரியராக, பத்திரிகையாளராக, பேச்சாளராக, திரைப்பட இயக்குனராக... இப்படி பல பரிமாணங்களில் பரிணமித்தவர் ஜெயகாந்தன். நாயாய், பேயாய் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் லட்சக்கணக்கானோர் நடுவில், சினிமா ஜெயகாந்தனை துரத்தி துரத்தி சென்று தன் சிம்மாசனத்தில் அமர செய்து கௌரவித்தது. 1960-ல் வெளிவந்த 'பாதை தெரியுது பார்' படம் மூலம் பாடலாசிரியராக ஜெயகாந்தன் கால் பதித்தபின்னர், சினிமாவின் பாதை தடம் மாறி பயணிக்க துவங்கியது. ஆனந்த விகடனில் 'உன்னைபோல் ஒருவன்' என்ற நாவலை தொடராக ஜெயகாந்தன் எழுதிட, அவரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், "அடுத்த வாரம் வரும் சம்பவத்தை இப்போதே சொல்லுங்களேன், அதை போய் எங்கள் வீட்டில் சொன்னால்ரொம்ப சந்தோஷப்படுவாங்க" என்று சொல்லி நெகிழ்ந்தார்.

கொள்கை தளராத இயல்பு

கொள்கை தளராத இயல்பு

பிரபல தயாரிப்பாளர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி 'உன்னைப்போல் ஒருவன்' நாவலை படமாக எடுக்க விரும்பி ஜெயகாந்தனிடம் ஸ்கிரிப் தயார் செய்ய சொல்லியிருக்கிறார். அதற்கு ஒப்புக்கொண்ட ஜெயகாந்தன் ஸ்கிரிப்பை முழுவீச்சில் ரெடி செய்து கொண்டுபோய் கொடுத்திருக்கிறார். அதை கேட்ட கிருஷ்ணமூர்த்தி, "இது கமர்ஷியலாக இல்லையே, வங்காள படம் போல இருக்கிறதே" என்று சொல்லியிருக்கிறார். உடனே கோபமடைந்த ஜெயகாந்தன், "ஸ்கிரிப்ட் என்பது ஒரு இயக்குனருக்கு வழிகாட்டி மட்டுமே. ஒரு திரைப்படம் எப்படி வரும் என்பது அதன் படைப்பாளியாலேயே முழுவதுமாக கணிக்க முடியாதபோது, முதலீடு செய்யும் உங்களை போன்ற வியாபாரிகளால் எப்படி முடிவு செய்ய முடியும்" என்று சொல்லி ஸ்கிரிப்டை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

கண்கலங்கிய காமராஜர்

கண்கலங்கிய காமராஜர்

பிறகு இதே படத்தை நிதிகளை திரட்டி தானே சொந்தமாக தயாரித்து ஜெயகாந்தன் வெளியிட்டார். பெருந்தலைவர் காமராஜர் படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கியே போய்விட்டார். ஜெயகாந்தனிடம் "நம்முடைய கஷ்டங்களுக்கு காரணம் நமது ரசனை கெட்டுப்போனதுதான் என்றும், இந்த படத்தை அரசாங்கமே வாங்கி மக்களுக்கு இலவசமாக காட்ட வேண்டும்" என்றும் ஆதங்கப்பட்டு சொன்னார். அதன்பின்னர் உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. ஒருமுறை கண்ணதாசன் மேடையில் பேசும்போது, "நான் தினமும் உறங்கும்போது எனது தலையணைக்கு அடியில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு உறங்குகிறேன். அது பைபிள் என்றோ, குர்-ஆன் என்றோ, கீதை என்றோ யூகிக்க வேண்டாம். ஜெயகாந்தன் எழுதிய 'யாருக்காக அழுதான்' என்ற நாவல்தான் அது" என்றார்.

சில நேரங்களில் சில மனிதர்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஜெயகாந்தனின் தரமான எழுத்துக்களும், பொது விவாத முறையில் ஆரோக்கியமான கதை களத்தை உருவாக்கும் துணிச்சலும் இருந்த காரணத்தினால் நடிகர் சந்திரபாபு, இயக்குனர் ஸ்ரீதர் என்று தொடங்கி பலபேர் அவருடன் இணைந்து படம் எடுக்க துடித்தனர். ஆனால் ஜெயகாந்தனின் சில உறுதியான முடிவுகளால் அது நடைபெறாமலே போய்விட்டது. எனினும் 'யாருக்காக அழுதான்', 'காவல்தெய்வம்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறார்', 'எத்தனை கோணம் எத்தனை பார்வை', 'புதுச்செருப்பு கடிக்கும்' போன்ற திரைப்படங்களில் தனது படைப்பின் கூர்மையை வெளிப்படுத்தினார். பாரிசுக்கு போ, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், அந்தரங்கம் புனிதமானது போன்ற நாவல்களில் அவரது தனிமனித சிந்தனைக்கான அறைகூவல் வெளிப்படும்.

வைரமுத்து-இளையராஜா-ஜெயகாந்தன்

வைரமுத்து-இளையராஜா-ஜெயகாந்தன்

இளையராஜா-வைரமுத்து மோதலின் உச்சக்கட்டம் அது. அந்த சமயத்தில் ஜெயகாந்தன் அவருடைய மகன் திருமணத்தை வைரமுத்துவின் திருமண மண்டபத்தில் நடத்தினார். அதற்கான அழைப்பிதழை இளையராஜாவிடம் சென்று ஜெயகாந்தன் கொடுத்திருக்கிறார். பத்திரிகையில் மண்டபம் பெயரை படித்த இளையராஜா, "நான் அந்த மண்டபத்துக்கு எப்படி வருவது" கேட்டிருக்கிறார். உடனே "வராதவருக்கு எதற்கு அழைப்பு" என்று அந்த பத்திரிகையை பிடுங்கி வந்துவிட்டாராம் ஜெயகாந்தன். இசைஞானி இளையராஜாவை சிறுவயதிலிருந்தே பெரிதும் ஈர்த்தவர் ஜெயகாந்தன். தீமைகள், அதிகாரத்துக்கு எதிராக ஆவேசம் பொங்க எழுதுபவர் ஜெயகாந்தன் என்றும், 'வள்ளுவன், கம்பன், பாரதியைக் கண்ட தமிழ்' எனச் சொல்வதைப்போல, 'ஜெயகாந்தனைப் பெற்றது நம் தமிழ்நாடு' எனப் பெருமைப்படலாம்!' எனவும் இளையராஜா அவருக்காக கண்ணீர் மடல் சொறிந்தார்.

தமிழ்தாயின் இலக்கிய மகன்

தமிழ்தாயின் இலக்கிய மகன்

அமரத்துவம் பெற்ற படைப்புகளின் பிதாமகனுக்கு - தமிழ்த்தாயின் இலக்கிய மகனுக்கு - இலக்கிய தாய் தனது தலைசிறந்த விருதான ஞான பீடத்தை 2002-ம் ஆண்டு அணிவித்து மகிழ்ந்தாள். 1972-ல் சாஹித்ய அகாடமி, 2009-ல் இந்திய அரசின் பத்ம பூஷன், 2011-ல் ரஷ்ய விருது போன்றவைகள் அவரை மேலும் பெருமைப்படுத்தின. ஏப்ரல் 8, 2015-அன்று இரவு 9.00 மணிக்கு உடல்நலக்குறைவால் சென்னையில் ஜெயகாந்தன் காலமானார்.

பலனை எதிர்பார்க்காத மாமனிதன்

பலனை எதிர்பார்க்காத மாமனிதன்

பேச்சாலும் எழுத்தாலும் அனைவரையும் அதிர வைத்தவர் ஜெயகாந்தன். மேடை பேச்சிலோ நெருப்பு மழை, எழுத்துக்களோ சரவெடி. அரசியல், சினிமா, இலக்கியம் எதுவானாலும் அவரது தர்க்க ரீதியான பதிலடிகள் அனைத்தும் மறுவார்த்தை பேசா முத்துச்சரங்கள். நாம் எங்கு இருக்கிறோமோ - எந்த துறையில் இருக்கிறோமோ - யார் மத்தியில் வாழ்கிறோமோ - அவர்களுக்காக வாழ்வது, அவர்களது உயர்வுக்காக உழைப்பது, பலனை எதிர்பாராமல் பாடுபடுவதுதான் மனிதனாய் பிறந்ததற்கு காரணம் என்ற அர்த்தத்தை புரிய வைத்தவர் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தனின் எழுத்துக்களை வாசித்தவர்கள் பாக்கியவான்கள்... வாசிக்காதவர்கள்???

English summary
Jayakanthan is one of the greatest writers. He is also a columnist, journalist and filmmaker. He is the highest award winner of the Indian government for literature.He is also the highest civilian award of Padma Bhushan and Sahidya Academy Award and Russian Award.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X