For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 படையப்பா, 5 எந்திரன்னு சொல்லி, மண்ணுள்ளி பாம்பு மோசடி நடந்துவிட்டது- 'லிங்கா' விநியோகஸ்தர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: 'லிங்கா' படத்தால் 'பல கோடிகள் நஷ்டம்' என்று விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் நஷ்டஈடு கேட்டு வருகிறார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 10ம்தேதி உண்ணாவிரதம் இருக்கவும் திட்டமிட்டுள்ளார்கள். இதுகுறித்து திருச்சி மற்றும் தஞ்சாவூர் விநியோகஸ்தரான சிங்காரவேலன் அளித்துள்ள பேட்டி ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ளது. அதன் சாராம்சம் வருமாறு:

'Lingaa' loss: Distributor blames movie's team

'லிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், ரஜினி உட்பட ஆகிய அனைவரும் 'லிங்கா' படம் 10 'படையப்பா'வுக்கு சமம், 5 'எந்திரனு'க்கு சமம்னு ஓவர் பில்டப் கொடுத்தாங்க. அதுவும் இல்லாமல் ரஜினி நடித்து சில வருடங்கள் கழித்து வெளிவரும் படம் என்பதால் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்னு சொன்னாங்க. இதை எல்லாம் கேட்டபிறகு இந்தப் படத்தை வாங்கலாம்னு நம்பிக்கை வந்தது.

வேந்தர் மூவீசிடமிருந்து நாங்க பேரம் பேசி 8 கோடி ரூபாய்க்கு வாங்கினோம். திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவுல 55 திரையரங்குகளில் 'லிங்கா' படத்தைத் திரையிட்டோம். அந்த 55 திரையரங்குகளிலும் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை ஒருநாள் ஷோவையும் சேர்த்து 1,26,000. ஆனால், முதல்நாள் பார்த்தவங்க எண்ணிக்கை வெறும் 76,000 பேர்தான். அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் படம் சரியில்லாததால 50,000, 40,000ன்னு பார்க்கறவங்க எண்ணிக்கை குறைஞ்சுடுச்சு. இப்ப 25 திரையரங்குகளில் படம் ஓடுது. ஒருநாளைக்கு 5,000 பேர்கூட பார்ப்பதில்லை. படம் ரீலீஸான அடுத்த நாளே எங்களுக்குத் தெரிஞ்சு போய்டுச்சு படம் சரியா போகலைன்னு.

நாங்களும் வேந்தர் மூவீஸ் போன்றவங்களுக்கு தெரியப்படுத்துறோம். அவங்க படம் ரிலீஸ் ஆன 7 நாட்களுக்குப் பிறகு வேந்தர் மூவீஸ்ல அறிக்கை வெளியிடுறாங்க. 'கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறை, தேர்வு விடுமுறைகள் எல்லாம் வரப்போகுது. விடுமுறை வந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்ப்பாங்க. படம் நல்லா போகும்'னு சொன்னாங்க. ஆனா அந்த மாதிரி எதுவுமே நடக்கல. எதுக்கு இந்த மாதிரி அறிக்கை விட்டாங்கன்னும் தெரியலை. படம் ஓடலைன்னு எல்லாருக்கும் தெரியும்போதே படம் நல்லா போகும்னு பில்டப் கொடுக்கறாங்கன்னா... படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி எவ்வளவு பில்டப் கொடுத்து இருப்பாங்கன்னு நீங்களே நினைத்துப் பாருங்க.

இது கிட்டத்தட்ட மண்ணுளிப்பாம்பு, காந்தப்படுக்கை மோசடி எல்லாம் எப்படி இல்லாததை இருக்குன்னு நம்ப வைத்து வியாபாரம் பண்ணி மோசடி செஞ்ச மாதிரிதான். அதேபோல படம் வாங்கும்போது அக்ரிமென்ட் போட்டாங்க. படம் என்ன வசூல் ஆனாலும் அவங்ககிட்ட கொடுத்துடணும். எங்களுக்கு 10 சதவிகிதம் கமிஷன் மட்டும் தருவாங்க. அவ்வளவுதான். இப்படி கமிஷன் கணக்குல பிசினஸ் பண்ணுறவங்க குறைந்த விலைக்கு எங்களுக்குக் கொடுத்து இருக்கலாம்.

ரூ.8 கோடி முதலீடு போட்ட எனக்கு 21 நாட்கள் வரை வசூலான தொகை 4,04,75,922 ரூபாய்தான். இனி பொங்கலுக்குள் இப்போது படம் ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர்களில்கூட எடுக்கப்பட்டு விடும். வேந்தர் மூவீஸ், ஈராஸ், கே.எஸ்.ரவிகுமார்ன்னு யார்கிட்ட கேள்வி கேட்டாலும் பதிலே சொல்லமாட்டேங்கறாங்க.

மொத்தமாக படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்கிட்ட வாங்கிக்கோன்னு சொல்றாங்க. இப்படி பணத்தை ஆள் ஆளுக்கு வாங்கிட்டு ஜாலியாக என்ஜாய் பண்ணிட்டு எங்களை அலைய விடுறாங்க. இது நியாயமா? ரஜினி ஏன் கர்நாடகாவில் இருந்து தயாரிப்பாளரை கூப்பிட்டு வரணும்? இந்த ராக்லைன் வெங்கடேஷ் யாரு? 2005-ம் வருஷம் விக்ரம் நடித்த 'மஜா' என்ற படத்தைத் தயாரித்தவர். 'லிங்கா' போலவே இந்தப் படத்துக்கும் ஓவர் பில்டப் கொடுத்து விநியோகஸ்தர்களை நஷ்டமாக்கிட்டு கர்நாடகாவுக்கு ஓடிப்போய்ட்டார்.

ரஜினியே வாலண்டரியாகக் கூப்பிட்டு வந்து 'லிங்கா' படத்தைத் தயாரிங்கன்னு, கர்நாடகாவில் இருந்து கூப்பிட்டு வர வேண்டிய அவசியம் என்ன? ஏமாத்திட்டு ஓடிட்டா கர்நாடகாவுக்கு போய் யார் கேட்கப்போறாங்க என்ற எண்ணம்தானா? 'லிங்கா' படத்தின் மொத்த தயாரிப்பு செலவு ரஜினியின் சம்பளம் இல்லாமல் ரூ.45 கோடிதான் என்று சொல்கிறார்கள். ரஜினிக்கு ரூ.50 கோடின்னு சம்பளம் வைத்துக்கொண்டாலும் மொத்தம் ரூ.95 கோடிதான் பட்ஜெட். ஆனால் மொத்தம் 220 கோடி ரூபாய்க்கு வியாபாரம் பண்ணியிருக்காங்க என்பது எங்களுக்கு வந்த தகவல்.

இதுவரைக்கும் தமிழ்நாடு முழுவதும் வசூல் ஆனது என்னவோ 72 கோடி ரூபாய்க்குள்தான். இதற்கு என்கிட்ட டாக்குமென்ட் இருக்கு. இதுல எங்களை மோசடி நடத்தினது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு அரசையுமே மோசடி செய்து இருக்காங்க'' என அடுத்த குண்டை தூக்கிப் போட்டுத் தொடர்கிறார்.

'' 'லிங்கா' வரிவிலக்குக்கு சிறிதும் தகுதியில்லாத படம். கேளிக்கை வரிவிலக்கு பெற வேண்டும் என்றால், 5 விதிகள் இருக்கின்றன. முக்கியமாக படத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும். 'லிங்கா' என்பது தமிழ் பெயரே அல்ல. லிங்கா சமஸ்கிருத சொல்.

இதுக்கு முன் 'ஜமாய்', 'ரம்மி', 'ஜில்லா' போன்ற படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படவில்லை. வேற்றுமொழிச் சொல் என அரசாங்கம் மறுத்துவிட்டது. ஆனால், ரஜினி என்ற பிம்பத்துக்காக இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அரசாங்கத்துக்கு இதனால் சுமார் 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதை எல்லாம் யார் தட்டிக்கேட்கப் போறாங்கன்னு தெரியலை. கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சினிமா கம்பெனி விநியோகஸ்தர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் ஏமாற்றி, அரசாங்கத்தையும் ஏமாற்றி என்னதான் பண்ணபோறாங்கனு தெரியலை.

ரஜினியை நம்பித்தான் படத்தை வாங்கினோம். இதுகுறித்து ரஜினியை சந்திக்க கடந்த 22ம் தேதி ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் தலைவர் சத்ய நாராயணாவிடம் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து இருந்தோம். அவரும் ரஜினிகிட்ட கேட்டுட்டு பதில் சொல்றேன்னு சொல்லியிருந்தார். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, வரும் ஜனவரி 10ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரம் இருக்கப்போகிறோம். ரஜினி தலையிட்டு இந்தப் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். இல்லை என்றால், நாங்கள் நிச்சயமாக நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு சிங்காரவேலன் கூறியுள்ளார்.

'லிங்கா' பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இதுகுறித்து ஜூவியிடம் கூறுகையில், ''இதுவரைக்கும் இந்தப் புகார் குறித்து யாரும் எதுவும் கேட்கவும் இல்லை. பேசவும் இல்லை. தெரியாத விஷயத்தைப் பற்றி நான் எப்போதும் பேசமாட்டேன். பிசினஸ் பண்ணும்போது லாப, நஷ்டங்கள் வருவது எல்லாம் அவங்க அவங்க தலை எழுத்து. இதுக்கு யார் பொறுப்பு ஏற்க முடியும்? சொல்லுங்க'' என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட சங்க செயலாளர் மற்றும் வேந்தர் மூவீஸின் சி.ஈ.ஓ சிவா, அந்த இதழிடம், கூறுகையில் ''வியாபாரம்ன்னா லாபம், நஷ்டம் ரெண்டும்தான் இருக்கும். நான் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசி யார் மனதையும் காயப்படுத்த விரும்பவில்லை. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பொங்கலுக்குப் பிறகு, நானே 'லிங்கா'வின் மொத்த வசூல் விவரங்களையும் சேகரித்து பதில் சொல்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

English summary
Lingaa film's Trichy area distributor Singaravelan blames the movie team for the loss he meet with Lingaa movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X