
காதல் வைபோகமே. காணும் நன்னாளிலே... ரோஜாக்களோடு கொண்டாட தயாராகும் சென்னைவாசிகள்!
சென்னை: ரோஜாப் பூக்களோடு காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.
நாளை காதலர் தினம், உலகெங்கும் எல்லோரும் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். தமிழகத்திலும் கொண்டாட்ட ஏற்பாடுகள் களை கட்டியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நகரங்களில் ரோஜாப் பூக்கள் விற்பனை களை கட்ட ஆரம்பித்து வி்ட்டது. கிரீட்டிங்ஸ் கார்டுகள், பரிசுப் பொருள் விற்பனையும் களை கட்டியுள்ளன. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விதவிதமான ரோஜாப் பூக்கள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.

ரோஜா... ரோஜா...
காதலைச் சொல்ல மிக எளிய, ஆனால் வலிமையான பரிசு ரோஜா தான் என்பது காதலர்களின் நம்பிக்கை. ரோஜாப் பூக்களை தனி மலராகவோ, பொக்கேவாகவோ செய்து, தனது மனம் கவர்ந்தவர்களுக்கு பரிசளிப்பது அலாதி மகிழ்ச்சி தான்.

கண்ணும் கண்ணும் பேசுமம்மா...
''உலகம் முழுவதும் ஒரே மொழி, உள்ளம் பேசும் காதல் மொழி'' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகள் மறந்து உருவாகிறது காதல். இருமனங்கள் அன்பால் இணைந்தால் போதும் அங்கு மதமோ, மொழியோ எதுவும் தெரிவதில்லை.

காதலே நிம்மதி....
இன்றுள்ள செல்போன், இன்டர்நெட், பேஸ்புக், இமெயில் உள்ளிட்ட தொலைத்தொடர்பு வசதியால், காதலைப் பெருக்கும் வழிகளும் அதிகரித்துள்ளது. இன்றுள்ள அவசர உலகிலும் காதலித்து திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

காலமெல்லாம் காதல் வாழ்க...
உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் நாளாக ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதியை உலக காதலர் தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நாளில் தங்களின் மனம் கவர்ந்தவர்களுக்கு பூக்கள், மலர் கொத்துகள், பரிசுபொருட்களை கொடுத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தி மகிழ்கின்றனர்.

காதல்... மோதல்
இந்நாட்களில் காதலர் தினத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களை நடத்தினாலும் காதலர் தினத்திற்கான மவுசு குறையாமல் அதிகரித்துகொண்டேதான் வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு தமிழக பூ மார்க்கெட்டுகளில் ரோஜா பூக்களின் வருகை அதிகரித்துள்ளது.

பேஸ்கட் மலர் கொத்துக்கள்...
இதுபோன்று காதலர்களின் ஸ்பெஷலாக பேஸ்கட் மலர்கொத்துக்கள் அதிகளவில் தயாரிக்கப்பட்டும் வருகிறது. இரு இதயம், இதயத்தின் நடுவே காதல் அம்பு என வண்ணவண்ண பூக்களை கொண்டு தத்ரூபமாக அழகின் மிகப்பெரும் அற்புதவடிவமாக மாலை கட்டுபவர்களின் மனதில் தோன்றும் உருவத்தில் அருமையாக தயாரிக்கப்படும் இந்த மலர் கொத்துகளை காதலர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

ஸ்பெஷல் பொக்கே...
இதுகுறித்து தூத்துக்குடி பூ வியாபாரி பட்டுராஜன் கூறுகையில், ‘காதலர் தினத்திற்கான ஸ்பெஷல் பேஸ்கட் மலர் கொத்துகள் ரூ.200முதல் ரூ.1000ம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கலர்கலரா பூக்கள்...
இதுபோன்று காதலின் சின்னமான வண்ண வண்ண ரோஜா பூக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. ஊட்டி, ஒசூர் பகுதிகளில் இருந்து வரும் வெள்ளை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு, நீலவானம், பிங்க், ரெட்யெல்லா போன்ற வண்ண ரோஜா பூக்கள் ஒன்று ரூ.10க்கு விற்பனையாகிறது.

விலை உயர்வு...
காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை ரூ.5அதிகரித்துள்ளது. விலை அதிகரித்தபோதும் ரோஜா பூக்கள், மலர்கொத்துகளின் விற்பனை இப்போது இருந்தே அமோகமாக நடந்துவருவதால் எங்களைப்போன்ற பூக்கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்' என்றார்.

வாழ வைக்கும் காதலுக்கு ஜே....
என்னதான் இன்று காலம் மாறினாலும், காதல் மாறவில்லை, மறையவில்லை. எத்தனை விலை உயர்ந்த பரிசுபொருட்களை காதலன் கொடுத்தாலும் மகிழாத காதலியின் மனம் ஒரு ரோஜா பூவிற்கு மயங்கும் என்பதைத் தான் மார்க்கெட்டில் உள்ள இந்த ரோஜாப் பூக்கள் சொல்லாமல் சொல்கின்றன.
காதலோடு வாழ்வோம்... காதலை வாழவைப்போம்...வாழ வைக்கும் காதலுக்கு ஜே!