For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. 38 லாரிகளுக்கு ஒப்பந்தம் மறுக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்வோம் என சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த பேச்சில் எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்தன.

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென் மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன.

LPG tanker operators begin indefinite strike

இந்த லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் கேஸ் நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டுகளுக்கு) ஒப்பந்த அடிப்படையில் இவை இயக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்த காலம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, இ-டெண்டர் முறையில் புதிய டெண்டரை அறிவித்த எண்ணெய் நிறுவனங்கள், 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்தன. புதிய டெண்டரில் 1.11.1999-க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட லாரிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், 3108 வாகனங்கள் தேவை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வாடகையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து இருந்தன. வழக்கமாக டெண்டர் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே விடப்படும். ஆனால், புதிய இ-டெண்டர் முறையில் 5 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்படும் என்ற நிபந்தனை இருந்ததால், அதனைத் தளர்த்த வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது எண்ணெய் நிறுவனங்கள் 3 ஆண்டு ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும், பிணையத் தொகை (இ.எம்.டி) மற்றும் லாரி உரிமையாளர்களிடம் இருந்து ஆவணங்களைப் பெறுவதில் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் 33 லாரிகளையும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் 5 லாரிகளுக்கும் வாடகை ஒப்பந்தம் அளிக்க மறுத்து விட்டன. இந்த 38 லாரிகளுக்கு வாடகை ஒப்பந்தம் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வருவதால், பிற லாரிகளுக்கும் புதிய வாடகை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

எண்ணெய் நிறுவனங்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், எவ்விதப் பலனும் ஏற்படாத நிலையில், டேங்கர் லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் போராட்டத்தை தொடங்கினர்.

இந்தப் போராட்டத்தால் கொச்சி, தூத்துக்குடி, மங்களூர், சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 5 மையங்களில் உள்ள 43 சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்தால், லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிப்படையும் அச்சம் ஏற்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர சென்னை நுங்கம்பாக்கத்தில் லாரி உரிமையாளர்களுடன் எண்ணெய் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

38 லாரிகளுக்கு ஒப்பந்தம் மறுக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்வோம் என நடந்த பேச்சில் எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்தன இதையடுத்து வேலைநிறுத்தம் திரும்ப பெறப்பட்டதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர்.

English summary
The indefinite strike by the Southern Region Bulk LPG Transport Operators Association (SRBLPGTOA), seeking fulfilment of their demands, began on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X