For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 தொகுதிகளில் போட்டி

|

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழகத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

ஈழத்தில் இலங்கை அரசால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக தமிழகத்தில் ஆர்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு போராட்ட களங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இந்த அமைப்பு தற்போது தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக தமிழகத்தில் 4 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

அந்த அமைப்பு ஸ்ரீபெரும்பெரும்புதூரில் அதியமான், திருப்பூரில் முருகேசன், தேனியில் மூவேந்திர சிவா, இராமநாதபுரத்தில் அழகு மீனா ஆகியோரை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது.

மேலும் அது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை - 2014 நாடாளுமன்றத் தேர்தல்.

• அந்தந்த மாநில மக்களின் உணர்வு, உரிமையைக் கருத்தில் கொண்டு அந்தந்த மாநில மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநிலங்களின் முதல்வராக தேர்தெடுக்க வகை செய்யும் சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

• ஈழத்தில் உடனடியாக இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ் ஈழப்பகுதி ஐ.நா. பாதுகாப்புப் படையின் கீழாக கொண்டு வரப்பட வேண்டும். அதன் பின் தனி ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

• ஒரு பிரச்சனை குறித்து மாநில அரசு இயற்றும் தீர்மானங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்தால் அந்த பிரச்சனையை ஐ.நா. மன்றத்திடம் எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்படும். மாநில அரசு ஒரு மனதாக இயற்றிய தீர்மானத்தை மத்திய அரசு கட்டாயமாக மதிப்பளித்து நிறைவேற்ற ஆவன செய்தல் வேண்டும்.

• இந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கக் கூடிய தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு தமிழர் பாதுகாப்புத்துறை என்ற துறையை உருவாக்க வேண்டும். அத்துறையின் அலுவலகங்களை தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களின் தலைநகரங்களில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

• விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்கள் அனைத்தும் மூட நடவடிக்கை எடுக்கப்படும். திறந்த வெளி முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்களை போலவே அனைத்து உரிமைகளும் பெற்று வாழ வழிவகை செய்யப்படும்.

• மத்திய அரசுக்கான வெளியுறவுக் கொள்கைகளை நிர்ணயிக்க மாநில உறுப்பினர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தி அதன் ஆலோசனையின் பேரில் தான் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊழல் ஒழிப்பு

• ஊழல் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அனைத்து துறைகளில் வெளிப்படையான நிர்வாகத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
• அரசியல் கட்சிகள் வெளிப்படையான நிதி ஆதாரக் கொள்கையை வைத்திருக்க வேண்டும். தங்கள் வரவு செலவு கணக்குகளை மக்களுக்கு விளக்க சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி - மருத்துவம்

தேவையற்ற இலவசங்களை தவிர்த்து விட்டு கல்வியையும் - மருத்துவத்த்தையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வியோடு ஏதாவது ஒரு சுய தொழில் கல்வியை கட்டாயப் பாடமாக படிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்தை ஒரு பாடமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில உரிமை

• மத்திய அரசு அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளித்து விட்டு பாதுகாப்பு, நிதித்துறை, நிர்வாகத்துறை போன்ற முக்கியத் துறைகளை மட்டுமே மத்திய அரசின் வசம் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு துறையை மாநில அரசுகளின் கீழ்க் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அதன் கொள்முதல், விலை நிர்ணயம், வினியோகம் அனைத்துமே மாநில அரசின் கீழ் வர நடவடிக்கை எடுக்கப்படும்.

• நிதி ஆதாரங்களில் மாநில அரசுகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வரிகளை ஒதுக்க வேண்டும்.

• தொல்பொருள் ஆய்வு முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

• மத்திய அரசு நெடுஞ்சாலைத் துறையை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• ஒவ்வொரு மாநிலத்திலும் சுங்கச் சாவடிகள் இல்லாத தரமான சாலைகளை உருவாக்க பாடுபடுவோம். சுங்கச் சாவடிகள் என்ற பெயரில் நடக்கும் பகல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச் சாவடிகளை நிரந்தரமாக இழுத்து மூடுவோம்.

அரசியல் சட்டத் திருத்தம்

• ஆளுநர், ஜனாதிபதி போன்ற அலங்காரப் பதவிகளை நீக்க சட்டத் திருத்த கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

• இந்தியா அடிமைப்பட்டிருந்தபோது இங்கிலாந்து ஆட்சியின் கீழாக இயற்றப்பட்ட அனைத்துச் சட்டங்களையும் நீக்கிவிட்டு தற்காலத்திற்கேற்ப புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• மாநில சுயாட்சிக்கு எதிரான ஆதார் அட்டை திட்டத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். தனிமனித விவரங்களைச் சேர்க்கும் ஆதார் அட்டை போன்றவற்றை இனி கட்டாயமாக்க தடை கொண்டு வரப்படும்.

தமிழக நலன்

• தமிழகத்திலிருந்து பெறப்படும் மின்சாரம், கனிம வளங்கள், விவசாய உற்பத்தி பொருட்கள் ஆகிய அனைத்தும் 80% மாநிலத்திற்கே கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தமிழகத்திற்கு கீழுள்ள கடல்பகுதியை "இந்தியப் பெருங்கடல்" என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மூத்த தொன்மைக் குடியான தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தியப் பெருங்கடல் பகுதியை ‘தமிழர் பெருங்கடல்' என்று பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

• கச்சத் தீவை உடனே திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். கச்சத் தீவை தமிழக அரசின் கீழாக கொண்டு வரவும் அங்கு தமிழக காவல் துறையை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

• தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழக அரசின் சிறப்பு கடற்படை உருவாக்கப்படும். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்படும்.

• உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தின் மூலம் தமிழகத்திற்கான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தின் அளவை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக நீதி

• சமூக நீதியை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தீண்டாமைகளும் ஒழிக்கப்படும். சமூகங்களிடையே பிரச்சனை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட சமுதாயங்களின் உதவியுடன் அந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி இன மக்களின் நலனுக்காக ஏற்கனவே இயற்றப்பட்டு ஏட்டளவில் உள்ள திட்டங்களை அதிக கவனத்துடன் நிறைவேற்றி அவர்களின் வாழ்கையில் உண்மையான முன்னேற்றம் காண நடவடிக்கை எடுக்கப்படும்.

• பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் 50% இட ஒதுக்கீடு வழங்கிட வழி வகை செய்யப்படும்.

மொழி

• மத்திய அரசு மாநில மக்களிடம் தொடர்புகொள்வதாக இருந்தால் மாநில அரசின் மூலமாக, மாநில அரசின் மொழியிலேயே தொடர்புகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

• நாணயங்கள், அஞ்சல் தலைகள், கடவுச் சீட்டு, மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் அந்தந்த மாநில மொழிகளில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• தமிழகத்தைப் போல எல்லா மாநிலங்களிலும் இருமொழிக் கொள்கையைக் கொண்டு வரவேண்டும். இந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள அலுவல் மொழித் தகுதியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• 8 வது அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள 23 மொழிகளும் ஆட்சி மொழிகளாகும் வரை ஆங்கில மொழி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழியாக நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• மத்திய அரசு மொழிக்காக செலவு செய்யும் நிதியில், மாநில மொழிகளுக்கு சம அளவில் பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• தமிழகத்தில் இயங்கும் அனைத்து வங்கிகளிலும் தமிழ் மொழி கட்டாய அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த மாநிலங்களில் இயங்கும் நடுவண் அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.

• தமிழ் மொழியை உடனடியாக இந்தியாவின் ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற மொழியாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• இந்தியா முழுவதும் தாய் மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பயிற்று மொழியாக தாய் மொழியே இருக்க வேண்டும். விருப்பப் பாடத்தில் அவரவர் விருப்பப்படி ஏதாவது மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• மத்திய அரசுப் பள்ளிகள் அனைத்தையும் அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• தாய்மொழிக் கல்வியில் படித்தவர்களுக்கு பொறியில், மருத்துவப் படிப்புகளில் 20% ஒதுக்கீடும், கூடுதல் மதிப்பெண்களும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• அனைத்து மாநிலங்களிலும் இந்தித் திணிப்பை நடுவண் அரசு உடனே நிறுத்த வேண்டும்.

• ஒரு மாநிலத்தவர் வேறு மாநிலத்தில் குடியேறினால் அந்த மாநில மொழியை அவர்கள் கற்க வேண்டும்.

• இந்தி பேசும் மாநிலங்களில் பிற மாநில மொழிகளை திணிக்காதது போல இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி திணிப்பு நடக்கக் கூடாது.
• அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்கப்படுதல் வேண்டும். மொழியுரிமை சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

வணிகம்

• சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு முற்றிலுமாக நீக்கப்படும்.

• சுய தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

• அனைத்து வகையான சிறு குறு வணிகத்திற்கு தொழில்பாதுகாப்பு வழங்கப்படும்.

• ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்கப்படும் தொழில் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களை பூர்வீகமாகக் கொண்டு தனிநபர்கள், நிறுவனங்களுடன் கூட்டு வைத்துதான் அந்த தொழில், வர்த்தகத்தை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

• அந்தந்த மாநில மொழியை அலுவல் மொழியாகக் கொண்ட நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• அந்தந்த மாநில மொழிகளை தாய்மொழிகளாகக் கொண்டவர்களுக்கு தொழில், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை தர நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலை வாய்ப்பு

• ஒவ்வொரு மாநிலங்களிலும் பணியிலமர்த்தப்படும் மத்திய அரசின் பாதுகாப்புப் படைகள் அந்தந்த மாநில மொழி பேசக் கூடியவராக இருக்க வேண்டும். எல்லா மத்திய அரசு நிறுவனங்களிலும் பாதுகாப்பு படை வீரர்கள் அந்தந்த மாநில மொழி பேசக்கூடியவராக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• அந்தந்த மாநிலங்களில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் 90% அந்தந்த மாநில மக்களுக்கே வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

• அந்தந்த மாநிலத்தில் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் அந்தந்த மாநில மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கே 90% வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேலைக்காகச் செல்லும் நபர்கள் அந்தந்த மாநில அரசாங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விவசாயம்

• தமிழக விவசாய நிலங்களை வெளி மாநில மக்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

• விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களை மனை பிரிவுகளாக பிரித்து விற்கவோ, பெருந்தொழில்நிறுவனங்கள் துவங்குவதற்காகவோ அல்லது வேறு எந்த பயன்பாட்டிற்கோ பயன்படுத்தக் கூடாது. விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில் இவற்றை அமைத்துக் கொள்ளலாம்.

• இயற்கை விவசாயம் மூலிகை விவசாயம் ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

• விவாசாய நிலங்களை பன்னாட்டு முதாலாளிகள் வாங்கிக் குவித்து சிறு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• மழை வெள்ளத்தைச் சேகரிக்க கிராம, ஒன்றிய பகுதிகளில் அதிக நீர் நிலைகள் உருவாக்கப்படும்.

உழைப்பாளர்கள், தொழிலாளர்களின் நலன்

• அந்தந்த மாநிலங்களில் உள்ள உழைப்பாளர்கள், தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் வகையில் அவர்களுக்கான அடிப்படை சம்பளத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும். அந்தச் சம்பளமே அனைத்து உழைப்பாளர்கள், தொழிலாளர்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• அனைத்து உழைப்பாளர்கள், தொழிலாளர்களுக்கும் சம சம்பளம், வேலை நேரம், பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இயற்கை வளப்பாதுகாப்பு, சுற்றுச் சூழல்

• மாற்று எரிசக்தியை ஊக்குவித்து தமிழகத்தில் இயங்கி வரும் அணு உலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

• மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ திட்டங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

• சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு சேது சமுத்திரத் திட்டம் சாத்தியமாவதைப் பொறுத்து அத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

• நீர்நிலைகள், நிலங்களை மாசுபடுத்தும் சாயப்பட்டறை, தொழிற்சாலைகளை தீவிரமாக கண்காணித்து அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• தாது மணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை ஆகிய இரண்டையும் தடுக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

• மலைகள், காடுகள், வனங்களையும் அவற்றை சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய காடுகள், வனங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• வட மாநிலங்களில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுத்து அந்த தண்ணீரை தென் மாநிலங்களுக்கு கொண்டு வரும் வகையில் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிதுள்ளது.

தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற பண பலம் மிக்க கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைத்து பல்வேறு கட்சிகள் போட்டியிடும் சூழலில், ஈழ தமிழர்கள் ஆதரவாளர்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியுள்ளது தமிழ் தேசிய கூட்டணி. தேர்தல் முடிவு எப்படி வரும் என பொறுத்து பார்ப்போம்.

English summary
Tamil National alliance is contesting in 4 lok sabha constituencies in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X