For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாவீரர் நாள்.. விடுதலைப் புலிகளின் அறிக்கை... கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

LTTE's Heroes Day declaration
காலம் மிக விசித்திரமான ஒன்று... எப்படிப்பட்ட காதலையும் விருப்பத்தையும் விடுதலை வேட்கையையும் ஒன்றுமில்லாமல் செய்யக் கூடிய வல்லமை, காலத்துக்கு மட்டுமே உண்டு.

2009-ல் அதி தீவிரமாக, உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் அறிக்கைக்குக் கிடைத்த முக்கியத்துவம், அடுத்தடுத்த ஆண்டுகளில் நீர்த்துப் போனதை என்னவென்பது!

இதோ.... மாவீரர் தினம் கடந்து போய் 24 மணி நேரங்களாகியும், புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட மாவீரர் தின அறிக்கை இதுவரை தமிழகத்தின் எந்த பத்திரிகை அல்லது ஊடகத்திலும் இடம் பெறவில்லை. ஓரிரு ஈழ இணையதளங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.

தமிழனின் தனி நாடு தாகம் அந்த மட்டில் நிற்கிறது.

இதோ.. மாவீரர் நினைவு நாளான நவம்பர் 27-ம் தேதி விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை...

அன்பான தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள். வாழையடி வாழையாக எமது முன்னோர்கள் வாழ்ந்து வந்த எமது தாயகமண்ணைக்காத்திடவும் எமது எதிர்காலச் சந்ததியினர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈகம் செய்த புனிதர்களை வணங்கும் நாள்.

பிறப்பு ஒன்று இருக்குமானால் இறப்பு என்பது நிச்சயமானது. இது இயற்கையின் நியதி. ஆனால் எமது மாவீரர்களின் மரணம் இயற்கையின்பாற் பட்டதல்ல. இது ஒரு இலட்சியத்திற்கானது. அர்த்தமுள்ளது. போற்றுதற்குரியது.

தமக்கென புதைகுழி கூட தேடாதவர்கள்...

எமது மாவீரர்கள் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் தம் உயிருள்ளவரை போராடினார்கள். உலகின் பலம் பொருந்திய சக்திகள் யாவும் ஒன்று திரண்டு எதிரிக்குப்பலமாக நின்ற போதும் அஞ்சாது போராடினார்கள். உலகின் எப்பாகத்திலும் நிகழ்ந்திராத ஆச்சரியப்படத்தக்க வீரம்செறிந்த செயற்பாடுகளை அவர்கள் புரிந்தார்கள். இருப்பினும் அவர்கள் தமக்கென எதையும் வேண்டி நிற்கவில்லை. ஏன்? தமக்கென ஒரு புதை குழியைக் கூடத் தேடாதவர்களும் தம்முகம் காட்டாது மறைந்து போனவர்களும் உண்டு.

இம் மாவீரர்களோடு விடுதலைப் போரில் ஒன்றாகப் பயணித்து பெரும் இன்னல்களைச் சுமந்து வாழ்ந்து மடிந்து போன பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் உண்டு. இவர்கள் விடுதலைப் போருக்குப் பக்கபலமாகத் தோளோடு தோள் நின்று உதவியவர்கள். விடுதலை விருட்சத்திற்கு தம் செங்குருதியை நீராக வார்த்தவர்கள்.

பூசிக்கும் நாளாக மட்டும் கொள்ளாதீர்கள்

மாவீரர்களோடு இவர்களும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கß இத்தகையோரைப் பூசிக்கும் இந்நாளைத் தனியாக ஒரு வணக்கத்திற்குரிய நாளாக மட்டும் வரையறை செய்து கொள்வது தவறானதாகும். மாறாக இம்மாவீரர்களின் கொள்கைகளைப் போற்றவும் பின்பற்றவும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாளாகவும் கொள்ளுதல் வேண்டும். இதுவே இம்மாவீரர்களுக்கும் மடிந்து போன மக்களுக்கும் நாம் செய்யும் கடமையாக இருக்க முடியும்.

2009 மேயில் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் ராணுவ ரீதியான பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து தமிழ் மக்களின் தேசிய வாழ்வை அழித்துவிடுதல், தமிழர் தாயகத்தைச் சிங்கள ராணுவ இறையாட்சியின் கீழ் கொண்டு வருதல் என்பன சிங்கள தேசத்தால் முனைப்புப்படுத்தப்பட்டது. இதில் தமிழரின் தேசிய வாழ்வை அழித்தல் என்பது ஒருங்கிணைந்துள்ள தமிழர் தாயகத்தைச் சிதைத்தல், தமிழர் தாயத்தில் தமிழரைச் சிறுபான்மையினராக்குதல், தரையிலும் கடலிலும் தமிழர் பொருளாதார வாழ்வாதாரத்தை சுரண்டுதல் மற்றும் இல்லாது ஒழித்தல் ஆகிய பல்வேறு வழிகளில் நிகழ்ந்து வருகின்றது.

சிங்கள ராணுவ மயப்படுத்தல்

சிங்கள ராணுவ இறையாட்சியின் கீழ் கொண்டு வருதல் என்பது பெருமளவு ஆயுதப் படையினரை நிலைகொள்ள வைத்தல், புதிய ராணுவக் கடற்படை முகாம்களை நிறுவுதல், விரிவாக்குதல், ஆயுதப் படையினருக்கான குடியிருப்புக்களை நிறுவுதல் என்பனவற்றோடு பொருளாதார அபிவிருத்தி என்ற ரீதியில் உருவாக்கப்படும் பெரும் தெருக்கள் வீதிகள் என்பனவற்றின் மூலம் ஆயுதப் படையினருக்கான விநியோகங்களையும் தொடர்புகளையும் சீர்படுத்துதல் என்பன மூலம் திடப்படுத்தப்பட்டு வருகின்றது.

அடுத்து புதிய பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலமும் தமிழர் தாயகத்தில் புனிதப் பிரதேசங்கள் என்ற ரீதியில் ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள் மூலம் தமிழ் மக்களின் சமய பண்பாட்டு பாரம்பரியங்களை சிதைவுறச் செய்யவும் மழுங்கடிக்கச் செய்யவும் இதில் அரசியல்வாதிகள் ராணுவ தரப்பினர் என்பதற்கு அப்பால் பௌத்த பிக்குகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எல்லாம் முடிந்துவிடவில்லை

இவற்றோடு தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை சிதைக்கும் வகையில் சமூகச் சீர்கேடுகளை உண்டாக்கத்தக்க வழிவகைகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டப்படுகின்றது. குறிப்பாக தமிழ் இளைஞர் யுவதிகள் மத்தியில் போதைப் பொருள் பாவனைகளைத் தூண்டுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்;, பாலியல் ரீதியான ஒழுக்கக்கேடுகளை தமிழ்ச் சமூகத்தை அதன் கலாச்சார விழுமியங்களில் இருந்து பிறழச்செய்தல் ஆகிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த வகையில் ஒரு நெருக்கடியானதும் பாதுகாப்பற்றதுமான சூழ்நிலையை எமது மக்களும் தேசமும் எதிர்கொண்டு நிற்ப்பதைப் பார்கின்றோம். ஆனால் எல்லாம் முடிந்து விட்டது, இனிச்செய்வதற்கு எதுவுமில்லை என்பதுதான் இல்லை. ஏனெனில் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் ஏற்கனவே பல ஏற்ற இறக்கங்களையும் துன்ப துயரங்களையும் சந்தித்தவர்கள்.

இருப்பினும் அவர்கள் என்றுமே தமது சுதந்திரவாழ்விற்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கியதில்லை. தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டகாலத்திலும் சரி அதன் பின்னரான ஆயுதப் போராட்ட காலத்திலும் சரி தற்போதைய அரசியல் சூழ்நிலையிலும் சரி தமது உரிமை தொடர்பான நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாகவே இருந்து வந்துள்ளனர்.

இதனை இக்காலப் பகுதிகளில் இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நிருபணம் செய்துள்ளனர். பெரும் மோசடிகள் அச்சுறுத்தல்கள் என்பவற்றையும் மீறியே அதனைச் செய்துள்ளனர்.

தேர்தலில் வென்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

அதிலும், குறிப்பாக இறுதியாக நடந்த வட மாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அளித்துள்ள தீர்ப்பானது கொலைகளைக் கண்டோ அச்சுறுத்தல்களைக் கண்டோ தாம் அஞ்சப் போவதில்லை என்பதை மட்டுமல்ல தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்குப் பிரதியீடாக எவையும் இல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் சலுகைக்காக என்றும் வாக்களித்தவர்கள் அல்ல. அத்தகையதொரு வரலாறு என்றும் இல்லை. அவர்கள் எப்பொழுதும் கொள்கைக்காகவும், லட்சியத்துக்காகவுமே வாக்களித்துள்ளனர். இதனை ஒடுக்குமுறையாளர்கள் மட்டுமல்ல-வாக்குறுதிகளை வழங்கித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்பார்ப்பையும் மீறியதாக மக்களின் ஆதரவு இருந்துள்ளது. இதனைக் கூட்டமைப்பினரே வெளிப்படுத்தியும் இருந்தனர். இதற்குக் காரணம் இவர்கள் பிரகடனம் செய்த கொள்கைகளில் கொண்டுள்ள பற்றுறுதி என்பதை விட, மக்கள் தெளிவும் உறுதியும் கொண்டுள்ளமையாகும். ஆகையினால் தேர்தலின் முடிவைக் கொண்டாவதைவிட, தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்து அதற்கேற்ப செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

விடுதலைப் போராட்ட லட்சியத்துக்கான ஓட்டு

தமிழ் மக்களுக்குச் சிங்கள ஆட்சியாளர்களுடன் நீண்டதொரு அனுபவம் உண்டு. இதனை அரசியற் தலைவர்கள் சிலவேளை மறந்து போய்விடினும் மக்கள் மறந்து விடுவதில்லை. இதன் காரணமாகவே அபிவிருத்தி பற்றியும் சலுகைகள் பற்றியும் சிங்கள ஆட்சியாளர்களும் சரி ஒட்டுக் குழுக்களும் சரி பேசும் போதும் மக்கள் கேட்பதில்லை.

கடந்த காலத்தில் சிங்கள அரசுடன் இணக்க அரசியல் கடைப்பிடிக்க முயன்று பலமுறை ஏமாற்றப்பட்டமையும் மறந்து போய்விடவில்லை. இதனால் தான் விடுதலைப்போரில் பெரும் இழப்பு ஏற்பட்டபோதும் விடுதலைப்போராட்டம் எந்த லட்சியத்திற்காக நடத்தப்பட்டதோ அதே லட்சியத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு...

இந்நிலையில் சிறிலங்கா ஆட்சியாளர்களும் சரி தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்களும் சரி, தமிழ் மக்களின் உணர்வுகளை மீண்டும் ஒரு தடவை பரிசோதித்துப் பார்க்க முற்படக்கூடாது. அத்தகையதொரு பரிசோதனையானது கடந்த காலத்தில் சாத்வீகப் போராட்டத்தில் இருந்து எவ்வாறு மக்களை ஆயுதப்போராட்டத்துக்கு தள்ளியதோ அதே போல் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்குச் இட்டுச்செல்லும் என எண்ணுவது தவறாகாது.

ஆனால், சிங்கள தேசமோ அன்று போல இன்றும் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிப்பதாக இல்லை. தமிழ் மக்களை இரண்டாம் தரப்பினராகவே அது நடத்துகின்றது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழர்கள் சிங்களவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடாகவுள்ளது.

பெரும்பான்மை இனத்தினராலோ அன்றி சிறிலங்கா ஆயுதப் படையினராலோ தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் படுகொலைகள் பாலியல், வன்கொடுமைகள் எதற்கும் பதில் அளிக்க வேண்டியதான அவசியம் தமக்கில்லை என்ற நிலைப்பாட்டையே அது கொண்டுள்ளது.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்

சிங்கள தேசத்தின் இத்தகைய நிலைப்பாட்டினால் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட எத்தகைய வன்முறைக்கும் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை. விசாரணைக்கென உருவாக்கப்பட்ட குழுக்களும் ஆணையாளர் குழுக்களும் கண்துடைப்பிற்கானவையாகவே இருந்தன. சர்வதேச நாடுகளும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதற்குக் காரணம் இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவமே ஆகும்.

இத்தீவின் அமைவிடமானது இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் முக்கிய பங்காற்றத்தக்கதாகும். இத்தகைய தீவின் ஆட்சி அதிகாரமானது சிங்களவர்கள் கைகளில் இருந்ததினால் சிங்கள ஆட்சியாளர்களுடன் சர்வதேச நாடுகள் குறிப்பாக ஆதிக்க அபிலாசை கொண்ட நாடுகள் அனுசரித்த போக்கையே கடைப்பிடிக்க விரும்பின.

இதன் காரணமாகவே சிங்கள ஆட்சியாளரின் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை அவை கண்டு கொள்ளவில்லை. மாறாகச் சிறிலங்காவின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவந்தன.

கடமை தவறிய ஐநா

ஆயினும், இறுதியாக நடந்த யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப் பகுதியிலும் சிறிலங்கா ஆயுதப்படையினர் புரிந்த மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மனித குலத்திற்கு எதிரானவையென சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றன. இக்கொடுரச் செயல்கள் குறித்து உறுதியான ஆவணங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இது குறித்து தவிர்க்க முடியாது பேச வேண்டிய நிலை உருவாகியது. மேலும் யுத்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை தனது கடமையில் இருந்து தாம் தவறிவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளமையும் ஐ.நா.மனித உரிமைகள் மாநாடுகளில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானங்களும் சிங்கள தேசத்திற்கு நெருக்கடிகளைத் தோற்றுவிப்பனவாக மாறியுள்ளன.

நவநீதம் பிள்ளை

இதனை இலங்கையில் அண்மையில் நடந்த இருவேறு நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருந்தன. முதலாவதாக சிறிலங்காவிற்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை அவர்கள் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதோடு அவ்வாறு நடத்தப்படாது விட்டால் சர்வதேச விசாரணை கோரப்படும் என அறிவுறுத்தியமையாகும். இதற்குச் சிங்கள தேசம் பெரும் எதிர்ப்புக்குரல் எழுப்பியதே தவிர செவிமடுத்ததாக இல்லை.

அடுத்ததாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அரசாங்கம் பெரும் பிரயத்தனத்தின் மூலம் நடத்திய பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கு மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி கனடா பிரதமர், மொறிசியஸ் பிரதமர் ஆகியோர் மாநாட்டைப் புறக்கணித்தனர்.

டேவிட் கேமரூன்

அதே வேளை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பைத் தொடர்ந்து இந்தியப் பிரதமரும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. மாநாட்டிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் சிறிலங்கா அரசின் உபசரிப்புக்களைப் புறக்கணித்ததோடு யுத்த மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணை நடாத்தப்படாது விட்டால் ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் இணைந்து சர்வதேச விசாரணை ஒன்றை பிரிட்டன் கோரும் என உறுதிபடத் தெரிவித்துச் சென்றார்.

சிறிலங்கா மீதான மேற்குலகின் அதிருப்திக்குக் காரணம் தனியாக மனித உரிமை மீறல்கள், ஊடகச் சுதந்திரமின்மை, நீதித்துறையில் அரசாங்கத்தின் தலையீடு போன்றவை மட்டும்தான் எனக்கொள்வதற்கில்லை. போரின்போது சிறிலங்காவிற்கு மேற்குலகம் வழங்கிய பூரண ஆதரவே அது பாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் துணிவைக் கொடுத்தது என்பது மறுப்பதற்கில்லை.

க்யூபா போல

ஆகையினால் தற்போதைய இந்நிலைப்பாட்டு மாற்றத்திற்கு மேற்கூறிய காரணிகளோடு சிறிலங்கா அரசு சீனாவுடனும் மேற்குலகிற்கு எதிரான நாடுகளுடனும் கொண்டுள்ள நெருக்கமும் காரணமாக இருத்தல் வேண்டும். சுருக்கமாகக் கூறுவதானால் அத்திலாந்திக்கில் கியூபா போன்று இந்து சமுத்திரத்தில் சிறிலங்கா ஆகிவிடலாம் என்ற அச்சம் காரணமாகலாம். இதன் காரணமாக மேற்கு நாடுகள் சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் சில மாறுதல்களைச் செய்வதற்கு முற்பட்டிருத்தல் வேண்டும்.

ஆனால் இது ஒரு ஆரம்பநிலை மட்டுமே. உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்திற்கும் தமது நலன் என்பதற்குப் பின்னரே மற்றவை எல்லாம். இதனால் சிங்கள ஆட்சியாளர்களின் அடுத்த கட்ட நகர்வுகளைப் பொறுத்தே தற்பொழுது சுயாதீன விசாரணை கோரும் நாடுகளின் நிலைப்பாடு இருக்கலாம்.

சுயாதீன விசாரணை குறித்த சிறிலங்கா அரசின் நிலைப் பாடானது இதுவரையில் மாற்றம் கண்டதாக இல்லை. சுயாதீனமான குழுக்களைக் கொண்டே நல்லிணக்க ஆணைக் குழுக்களை தாம் நியமித்ததாகச் சாதிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் இதற்கு அப்பால் செல்லத் தயாராக இல்லை.

மாறி வரும் சூழலுக்கேற்ப

இத்தகையதொரு நிலையில் உலகில் மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தமிழ்மக்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். மாறி வரும் சர்வதேசச் சூழல் எமக்கு தமிழீழத்தைப் பெற்றுத் தந்து விடும் என்பதல்ல. இச்சூழலைப் பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் முயற்சித்தல் அவசியம்.

இன்று தமிழ் மக்களின் போராட்டமானது இரு வேறு தளங்களில் நடைபெறுகின்றது. இதில் ஒன்று தாயகத்திலும்; மற்றொன்று தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலுமாகவுள்ளது. எமது போராட்டம் முன்னோக்கி நகர தாயகத்திலுள்ளளோரும் புலம் பெயர்ந்தோரும் ஒன்றுபட்டு பணியாற்றுதல் அவசியமானதாகும்.

ஆனால் இதில் ஒன்றை மட்டும் கூறிவிட முடியும் தாயகத்திலும் சரி புலம் பெயர் நாடுகளிலும் சரி மக்கள் ஒரே இலட்சியத்துடனும் குறிக்கோளுடனுமே உள்ளனர். வழிநடத்த முற்படுபவர்களே வேறுபட்ட சிந்தனையுடனும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கத் தவறுபவர்களாகவும் மாறி விடுகின்றனர்.

மூன்றாவது தளம் தமிழகம்

மேற்குறிப்பிட்ட ஈழத்தமிழ் மக்களின் இரு வேறுபட்ட போராட்டத் தளங்களுக்கு அப்பால் மூன்றாவது தளமாகத் தமிழகமும் உண்டு. இன்று தமிழகத்திலுள்ள பிரதான சக்திகள் யாவும் ஈழத் தமிழர் படுகொலை குறித்து சுயாதீனமான விசாரணை கோரி நிற்பதோடு ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என வலியுறுத்தியும் வருகின்றன.

தென்னாசியப் பிராந்தியத்தில் பலம் பொருந்திய இந்தியாவின் அரசியலில் இம் மூன்றாவது தளமானது தாக்கம் செலுத்தக் கூடியதாகையால் இத்தளமும் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாகவுள்ளது. இந்த வகையில் இன்று தமிழர் தாயகச் சிதைப்பைச் சிங்கள இராணுவ மேலாதிக்கம் தமிழர் கலாச்சாரப் பண்பாட்டுச் சீரழிப்பு என்பன ஒருபுறமும் தமிழ் மக்களின் உறுதியான இலட்சியப் பற்று சர்வதேச சூழலில் மின்மினிகள் போல் தெரியும் சில நற்சமிக்கைகள் இன்னொரு புறமுமாய் தமிழர் வாழ்வு தொடர்கின்றது.

துரோகிகள், குழப்பவாதிகள்

விடுதலைப்பாதையில் துரோகிகளையும் குழப்பவாதிகளையும் தடுமாறுவோரையும் சந்திக்க வேண்டிவருவது இயல்பானதே. இவை விடுதலைப் போராட்ட வரலாற்றுக்குப் புதியதொன்றல்ல. ஆனால்; தமிழர் தாயகத்திற்காகவும் சுதந்திர வாழ்விற்காகவும் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவில் நிறுத்தி தாயக மண்ணிலும் புலம்பெயர்நாடுகளிலும் உள்ள தமிழீழ மக்களாகிய நாம் ஓரணியில் நின்று மாவீரர் இலட்சியம் ஈடேற உழைப்போம் என உறுதி எடுத்து கொள்வோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!

English summary
Here is LTTE's 2013 Heroes Day (Maveerar Naal) declaration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X