• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜனநாயகப் புரட்சி மூலம் அமைதிவழியில் பினாமி ஆட்சியை அகற்றுவோம்: ஸ்டாலின் 'சூளுரை'

By Vazhmuni
|

சென்னை: லஞ்ச ஊழலில் திளைக்கும் குற்றவாளி நடத்தும் பினாமி ஆட்சியை அகற்றிவிட்டு, மக்கள் விரும்பும் திமுக ஆட்சியை நிலைபெறச் செய்ய சூளூரை ஏற்போம் என்று திமுகவினருக்கு அக்கட்சி செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தமது பிறந்தநாளில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்தநாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது.. பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பின்னர் அண்ணா மற்றும் பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதைசெலுத்தினார். மேலும் திமுக நிர்வாகிகளும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஸ்டாலின் மடல்

ஸ்டாலின் மடல்

தமது பிறந்தளையொட்டி பேஸ்புக் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் மடல் :

திமுகவினரை காணும் போதெல்லாம் களிப்புறுவதும், அவர்களுடன் உரையாடி உற்சாகமடைவதும், தமிழ் மக்கள் நலனை முன்னிறுத்திக் கழகத் தோழர்களுடன் களம் புகுவதில் தனிச்சுகம் அடைவதும் என வாழ்வில் ஒவ்வொரு நாளும், "இன்று புதியதாய்ப் பிறந்தோம்" என்ற இன்பம் ஏற்படுகிறது என்றாலும், ஆண்டுக்கொரு முறை மலர்கின்ற பிறந்தநாள், உங்களின் பேரன்பால் மேலும் ஊக்கமும் உத்வேகமும் ஊட்டுகிறது.

அனுபவம் வழங்கும் பிறந்தநாள்

அனுபவம் வழங்கும் பிறந்தநாள்

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்ற கவலையை விட, அனுபவமும் அது வழங்கிடும் ஆற்றல்மிகு பாடங்களும் பல்கிப் பெருகுகி வருகின்றன. சவால்களை - அவற்றின் பரிமாணங்களை அறிந்து நேருக்கு நேர் எதிர்கொண்டு வென்றுகாட்ட முடியும் என்ற நன்னம்பிக்கை நாள்தோறும் உள்ளத்தில் நங்கூரமிடுகிறது.

கருணாநிதியின் நிழலில் வளர்ந்தவன்

கருணாநிதியின் நிழலில் வளர்ந்தவன்

கருணாநிதியின் வாஞ்சைமிகு வளர்ப்பில்-வளம்செறிந்த வழிகாட்டுதலில்-நித்தமும் அவரது ஒளிநிறைந்த நிழலில் வளர்ந்தவன் என்பதால் அரசியல்-பொதுவாழ்வுப் பணிகள் என் உதிரத்தில் இரண்டறக் கலந்துவிட்டன. நெருக்கடிகள்-எதிர்ப்புகள் எனும் நெருப்பாற்றில் நீந்தி திமுகவை கருணாநிதி கண்ணை இமை காப்பது போல் கட்டிக் காத்திட்ட வேளையில், இளைஞர் அணி எனும் விழுதுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் எனும் ஆலமரத்துக்குத் துணை நிற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இளைஞர் எழுச்சி நாள்

இளைஞர் எழுச்சி நாள்

கருணாநிதி - அன்பழகன் உள்ளிட்ட மூத்த முன்னோடிகளின் அன்பினாலும் ஆலோசனைகளாலும் இளைஞரணி என்பது பட்டாளத்துச் சிப்பாய் போல களத்தில் இன்முகம் காட்டி முன் நின்றது. இளைஞரணியின் தோழர்கள் பரவசத்தோடு தங்களின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து, மக்களுக்கு நலம்பயக்கும் உதவிகளைச் செய்து வருவது கண்டு மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன்.

பொதுவாழ்வு

பொதுவாழ்வு

பொதுவாழ்வே பெரிதெனக் கொள்வோர்க்கு குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது இயலாத காரியம் என்றாலும், என்னுடைய பொதுவாழ்வுப் பணிக்கு குடும்பத்தினர் காட்டும் ஆதரவும், அக்கறையும் இந்த இயக்கமே ஒரு மகா குடும்பம் என்கிற முறையில் அவர்கள் வழங்கும் ஒத்துழைப்பும் என்னுடைய பயணம் சீரான பாதையில் செல்வதற்கு ஏதுவாக அமைகின்றன. என் பிறந்தநாளை திமுக குடும்பத்தின் விழாவாக எனது குடும்பத்தாரும் இணைந்து கடைப்பிடிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

மாற்றுக்கட்சியினரின் வாழ்த்து

மாற்றுக்கட்சியினரின் வாழ்த்து

இயக்கத்தினர்-குடும்பத்தினர் மட்டுமின்றி மாற்றுக்கட்சி நண்பர்களும், அரசியல் சாராத அன்பிற்கினிய பொதுமக்களும் பொழிகின்ற வாழ்த்துகள் என்மீது மட்டுமின்றி, நமது கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளன. தமிழகம் மோசமானதும் நெருக்கடிமிக்கதுமான அரசியல் சூழலில் அகப்பட்டுக் கொண்டுள்ள நிலையில், அதனை மீட்டுருவாக்கிட வேண்டிய பெரும் பொறுப்பு திமுகவுக்குதான் தான் இருக்கிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ்-தமிழர் நலனை திமுக காக்கும்

தமிழ்-தமிழர் நலனை திமுக காக்கும்

கருணாநிதியின் மகத்தான வழிகாட்டுதலில் செயல்படும் இந்த இயக்கம் எப்போதும் தமிழ்-தமிழர் நலன் சார்ந்தே சுழலும். காவிரியாற்று நீரில் நமக்குள்ள உரிமையை நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் உறுதிபட நிலைநாட்ட முடியாத நிலையிலும், திமுக ஆட்சியில் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரமும் நலனும் பாதுகாக்கப்பட்டன. பட்டினிச் சாவுகளும் தற்கொலைகளும் நேராதவாறு தடுக்கப்பட்டன.

விவசாயிகளின் வாழ்வுரிமை போற்றுவோம்

விவசாயிகளின் வாழ்வுரிமை போற்றுவோம்

விவசாயிகள்-நெசவாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்வுரிமையும் போற்றப்பட்டன. நம் உயிரான தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தருவதிலிருந்து, தடைகளுக்கு நடுவே ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை சிறப்பு சட்டத்தின் மூலம் நடத்திக் காட்டுவது வரை தமிழர்களின் உரிமையையும்-பண்டைத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தையும் பாதுகாப்பதில் தி.மு.கழகம் என்றும் சோர்வடைந்ததில்லை.

பினாமி பொம்மை ஆட்சி

பினாமி பொம்மை ஆட்சி

பீடும் பெருமையும் வாய்ந்த நம் இன்பத் தமிழகம் இன்று, இந்திய உச்சநீதிமன்றத்தாலேயே பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியின் கண்ஜாடைக்கேற்ப ஆடும் பினாமி - பொம்மை ஆட்சியாளர்களால் வழிநடத்தப்படும் பேரவலத்தில் சிக்கியிருக்கிறது. மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராகவும் நடைபெறும் ஆட்சி எப்போது வேரோடும் வேரடி மண்ணோடும் தூக்கியெறியப்படும் என்கிற ஆவலும் வேகமும் தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் ஊடகத்தினரும் பொதுமக்களும் இதுபற்றி கேட்கும் போது, தி.மு.கழகம் ஒருபோதும் குறுக்கு வழியில் செயல்படாது. நேர்மையான ஜனநாயக வழியில் சட்டப்பூர்வமான முறையிலேயே செயல்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

பினாமி ஆட்சியை அகற்ற சூளுரை ஏற்போம்

பினாமி ஆட்சியை அகற்ற சூளுரை ஏற்போம்

லஞ்ச ஊழலில் திளைக்கும் குற்றவாளி நடத்தும் பினாமி ஆட்சியை சட்டப்பூர்வமாகவும், அமைதியான ஜனநாயகப் புரட்சியின் மூலமாகவும் அகற்றி விட்டு, மக்களின் பேராதரவுடன் அவர்கள் விரும்பும் கழக ஆட்சியை நிலைபெறச் செய்வது தான் நமது ஒரே செயல்திட்டம் என்று சூளுரை ஏற்போம்! அந்தச் சூளுரையினை நிறைவேற்ற, பசிநோக்காது கண்துஞ்சாது மெய்வருத்தம் பாராது, அனைவரும் அனுதினமும் உழைத்திடுவோம்! அந்தச் சூளுரையே, நமது சிந்தனை சொல் செயல் அனைத்திற்கும் இனி அடிநாதமாக அமையட்டும் என்று, இந்த நாளில் அறைகூவல் விடுக்கின்றேன்!

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

English summary
DMK working President M.K. Stalin sent birthday message to dmk cadres on his 64th birthday today . In the statement MK Stalin appeal to dmk cadres to taking oath for dmk government as a ruling party soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X