For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாம் ஜாம் என்று நடக்க வேண்டிய ஜல்லிக்கட்டுக்கு தடியடி… கைது… மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இதற்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அரசின் அலட்சியத்தினால், இந்த வருடம் பொங்கல் திருநாளில் ஜாம், ஜாம் என்று நடக்க வேண்டிய ஜல்லிக்கட்டு தடைபட்டு நிற்பது மட்டுமின்றி, "போலீஸ் கைது", "போலீஸ் தடியடி" என்ற ரீதியில் நடந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் இன்று, மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியை நடத்துபவர்கள், கலந்து கொள்பவர்கள் வேடிக்கை பார்த்தவர்கள் என அனைவரையும் போலீசார் அடித்து, கைது செய்து வருகின்றனர்.

இதனை கடுமையாக சாடியுள்ளார் மு.க. ஸ்டாலின். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கண்டனம்

கண்டனம்

தமிழர்களின் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ள அதிமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 2014 ஆம் ஆண்டு மே மாதமே ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும், மூன்று வருடங்களாக கடிதம் எழுதுவது மட்டுமே "நிர்வாகம்" என்ற ரீதியில் அதிமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதோடு, ஆங்காங்கே தங்களின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு உரிமைகளுக்காகப் போராடிய மாணவர்களையும், இளைஞர்களையும் கைது செய்தும், தடியடி நடத்தியும் அதிமுக அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது.

தமிழர்கள் தவிப்பு

தமிழர்கள் தவிப்பு

"ஜல்லிக்கட்டு இந்த வருடம் நடத்தியே தீர வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த ஜனவரி 3 ஆம் தேதி அலங்காநல்லூரில் திமுக சார்பில் ஆர்பாட்டம் நடத்தினோம். அவசரச் சட்டம் கொண்டு வந்தோ, பிரதமரை சந்தித்தோ, ஜல்லிக்கட்டு நடத்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உணர்ச்சி மிக்க இளைஞர்கள் கூட்டத்தில் நின்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அது பற்றி அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் கடைசி வரை அமைதி காத்து, இன்றைக்கு தமிழகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் தங்கள் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் தமிழர்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மத்திய அரசின் எடுபிடி

மத்திய அரசின் எடுபிடி

எப்பாடு பட்டாவது தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படும் அதிமுக அரசு, மத்திய பா.ஜ.க. அரசின் எடுபிடியாக மட்டுமே மனமுவந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, மாநில உரிமைகளுக்காகவோ, தமிழர்களின் உரிமைக்காகவோ ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதற்கு அதிமுக அரசு தயாராக இல்லை என்பது ஜல்லிக்கட்டு பிரச்சினையில் வெளிப்படையாகவே அரங்கத்திற்கு வந்து விட்டது. ஊழலில் திளைக்கும் அதிமுக அரசு, மத்திய அரசிடம் வலுவாக கோரிக்கை வைக்கும் பலத்தை இழந்து, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழக நலன்களை எல்லாம் கூச்சமின்றி தாரை வார்த்து விட்டு தடுமாறி நிற்கிறது. முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்னும் எத்தனை நாளைக்கு பதவியில் இருக்கப்போகிறார் என்ற பிரச்சாரத்தை அதிமுகவினரே முன்மொழிந்து, இன்றைக்கு மத்திய அரசிடம், ஒரு மதிப்பு மிக்க தமிழக முதலமைச்சர் பதவியை முற்றிலும் சிறுமைப்படுத்தி விட்டார்கள்.

பாஜகவின் உதாசீனம்

பாஜகவின் உதாசீனம்

மாநிலத்தில் ஒரு அரசு இருக்கிறது என்பதையோ, முதலமைச்சர் ஒருவர் இருக்கிறார் என்பதையோ மத்திய அரசு துளியும் மதிக்கவில்லை. இந்த துரதிருஷ்டவசமான சூழ்நிலையால், தமிழக மக்களின் நலன்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, இன்றைக்கு தொன்று தொட்ட தமிழர் கலாச்சாரத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டும் மூன்றாவது வருடமாக அதிமுக ஆட்சியில் நடத்த முடியவில்லை. தலையாட்டும் ஒரு அரசு தமிழகத்தில் இருக்கும் எண்ணத்தில் மத்திய பா.ஜ.க. அரசும் தமிழர்களின் உணர்வுகளை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது.

அதிமுகவின் மெத்தனம்

அதிமுகவின் மெத்தனம்

காவிரி உரிமை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், வறட்சி நிவாரண நிதி ஒதுக்குதல், வர்தா புயல் நிவாரண நிதி வழங்குதல், ஜல்லிக்கட்டு என அனைத்திலும் மத்திய அரசு, தமிழக நலன் சார்ந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. பாராளுமன்றத்தில் உள்ள அதிமுகவின் 50 எம்.பி.க்களோ "சசிகலா முதல்வராக வேண்டும்" என்று கோரிக்கை வைப்பதில் தீவிர ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்" என்று மத்திய அரசை வலியுறுத்தவோ, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசவோ முடியவில்லை.

தட்டிக் கழித்த பொன்.ரா

தட்டிக் கழித்த பொன்.ரா

அதிமுக அரசின் நிலையும், மத்திய அரசின் நிலையும் இப்படியென்றால் மத்திய அமைச்சரவையில் இருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் "ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்" என்று தொடர்ந்து தமிழக மக்களை நம்ப வைத்தார். தலைவர் கலைஞர் அவர்களையும் நம்ப வைத்தார். ஏன் என்னையே நம்ப வைத்து, அதனால் நான் கூட முதலில் நடத்தவிருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்தாமல் தள்ளி வைத்தேன். ஆனால் இன்றைக்கு "ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஒரே வரியில் அவர் தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட்டார்.

மனமில்லாத பாஜக

மனமில்லாத பாஜக

எத்தனையோ பிரச்சினைகளில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வீட்டிற்கே கூட சென்று உத்தரவுகளைப் பெற்ற சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி ஜல்லிக்கட்டு பிரச்சினையிலும் முன்கூட்டியே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டு தீர்ப்பு வெளிவர முயற்சி செய்திருக்கலாம் ஆனால். அப்படி உச்சநீதிமன்றத்தை அணுக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மனமில்லை என்றால் தங்களது சொந்த அதிகாரத்தை, அதாவது பாராளுமன்றத்திற்கு உள்ள சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்நேரம் ஜல்லிக்கட்டு நடத்த ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்கலாம்.

அவசரச்சட்டம்

அவசரச்சட்டம்

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் நான் கூறியபடி எவ்வளவோ அவசரச்சட்டங்களை ஏற்கனவே கொண்டு வந்திருக்கும் மத்திய அரசு, ஜல்லிக்கட்டுக்காக ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வருவது மிக மிக சுலபமானது. ஆனால் எல்லாவற்றையும், உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் மீது பழி போட்டு, தன் பொறுப்பிலிருந்து விலகி நிற்கிறது மத்திய பா.ஜ.க., அரசு. தமிழர்களின் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசுக்கு ஏராளமான மார்க்கமிருந்தும் மனமில்லை என்ற ஒரே காரணத்தால் ஜல்லிக்கட்டு தடைபட்டு விட்டது.

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

அதிமுக அரசின் அலட்சியத்தினால், இந்த வருடம் பொங்கல் திருநாளில் ஜாம், ஜாம் என்று நடக்க வேண்டிய ஜல்லிக்கட்டு தடைபட்டு நிற்பது மட்டுமின்றி, "போலீஸ் கைது", "போலீஸ் தடியடி", என்று அரசின் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வீடுகளில் தோரணம் கட்டி பொங்கல் வைப்பதைக் கூட விட்டு விட்டு அணி வகுத்து நின்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், சர்க்கரை பொங்கலுடன் கொண்டாட வேண்டிய ஜல்லிக்கட்டு விளையாட்டு எந்தளவிற்கு தமிழர்களின் ஊனோடும், உயிரோடும் இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை பறைசாற்றுகிறது.

கையாளாகாத அதிமுக அரசு

கையாளாகாத அதிமுக அரசு

கையாளாகாத அதிமுக அரசு பதவியில் நீடிப்பதற்காகவும், அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் மட்டுமே இன்றைக்கு ஜல்லிக்கட்டு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் கலாச்சார உரிமைகளை தரணியில் நிலைநாட்ட வீறு கொண்டு எழுந்து நிற்கும் உணர்ச்சிமயமான இளைஞர்களைப் பார்க்கும்போது, அந்த உணர்ச்சியை துளியும் மதிக்காத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறதே என்ற தாங்கமுடியாத வேதனைதான் ஏற்படுகிறது.

கண்ணீர் சிந்தும் தமிழன்

கண்ணீர் சிந்தும் தமிழன்

தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் அதிமுக அரசின் இது போன்ற செயல்பாடுகளை தமிழக மக்கள் வெகு காலம் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உலகத்தையே ஈர்க்கும் "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு" களையிழந்து நிற்பதைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் கண்ணீர் சிந்துகிறான் என்றால், அப்படி தமிழன் இன்று சிந்தும் கண்ணீர் வீண் போகாது என்பதை மட்டும் மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். தமிழக மண்ணின் மாண்பைப் போற்றும் வீரமிக்க இந்த ஜல்லிக்கட்டு நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும், இந்த ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டு எடுக்க, திராவிட முன்னேற்றக் கழகம் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு என்றைக்கும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
The opposition leader M.K. Stalin condemned TN police for arresting youths, who conducted Jallikattu today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X