For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயணிகள் விரோத ரயில்வே 'டைனமிக் ஃபேர்' கட்டண முறையை திரும்ப பெறுக: ஸ்டாலின்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ரயில் பயணிகளை வாட்டி வதைக்கும் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

M.K.Stalin condemns increased fast express train fare

கட்டண உயர்வு இல்லாத நிதி நிலை அறிக்கை என்றும், அனைத்துத்தரப்பு மக்களுக்குமான நிதி நிலை அறிக்கை என்றும் கடந்த 25.2.2016 அன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்த ரயில்வே நிதி நிலை அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார். அவர் பாராட்டி ஏழு மாதங்கள் கூட நிறைவு பெறாத நிலையில், இப்போது திடீரென்று ராஜ்தானி, சதாப்தி, துராந்தோ ரயில்களில் 50 சதவீத கட்டண உயர்வு என்று அறிவித்திருப்பது நாடு முழுவதும் உள்ள பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

இந்த மூன்று ரயில்களிலும் முதல் 10 சதவீத படுக்கைகளுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அடுத்த ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகளுக்கும் படிப்படியாக கட்டணம் உயர்த்தப்பட்டு அதிகபட்சமாக 50 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு, ரயில்வே துறை பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறை ன்ற உன்னத நோக்கத்திலிருந்து விலகிச் செல்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்று ரயில்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் பெரிய பாதிப்பு இல்லை என்று இந்திய ரயில்வே துறை சொன்னாலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 142 க்கும் மேற்பட்ட ரயில்களில் இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அடுத்த கட்டமாக ரயில் பயணிகள் தலையில் சுமத்த விருக்கும் கட்டண உயர்வுக்கு இது முன்னோட்டம் போலவே அமைந்துள்ளது. நடுத்தர மக்களும், மாணவர்களும், வேறு மாநிலத் தலைநகரங்களில் பணிபுரிவோரும் சென்று வர இந்த ரயில்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறந்து விட்டு இப்படியொரு கட்டண உயர்வை அறிவித்திருப்பது கவலையளிக்கிறது.

முகூர்த்த நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் சில ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை நேரத்திற்கு ஒரு விதமாக கட்டணத்தை உயர்த்தி விற்பனை செய்வது வழக்கமாக இருக்கிறது. விமானங்களிலும் இது போன்ற டிக்கெட் கட்டண முறையை வைத்து பயணிகளை வாட்டி வதைக்கிறார்கள். அதுபோல் பொதுச் சேவையில், குறிப்பாக பொதுமக்களின் போக்குவரத்திற்கு மிகவும் அதிகமாக பயன்படும் ரயில்களில் இந்த கடும் கட்டண உயர்வை அறிமுகம் செய்வது கண்டனத்திற்குரியது.

அது மட்டுமின்றி இந்த டைனமிக் ஃபேர் முறையால் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே வழக்கமான கட்டணத்தில் உள்ள 10 சதவீத டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடும். ஆகவே மீதியுள்ள டிக்கெட்டுகள் அனைத்தையுமே அதிக கட்டணம் கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தத்தை ரயில் பயணிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த கட்டண உயர்வு நடுத்தர மக்கள் மட்டுமின்றி, அவசரத்திற்கு இந்த ரயில்களைப் பயன்படுத்தும் அடித்தட்டு மக்களையும் பெரிதும் பாதிக்கும்.

பொதுமக்களுக்கான ரயில்வே நிதி நிலை அறிக்கை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் நின்று உரையாற்றியதை மறந்து விட்டு, பயணிகளை வாட்டி வதைக்கும் இப்படியொரு கட்டண உயர்வை அறிவித்திருப்பது பெருத்த வேதனையைத் தருகிறது. ஆகவே பயணிகள் விரோத டைனமிக் ஃபேர் என்ற கட்டண முறையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK treasurer and opposition leader M.K.Stalin has condemned increased fast express train fare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X